மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 டிசம்பர், 2014

மனசு பேசுகிறது : குழந்தைகள் கவனம்


ழை நேரம்...

வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி இருக்கும்.

பூச்சி, பாம்புகள் ஊர்ந்து வரலாம்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.

அதுவும் குறிப்பாக நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் எங்காவது ஓடத்தான் நினைப்பார்கள்.

அவர்களுக்குத் தெரியாது என்ன கிடக்கும்... என்ன கடிக்கும் என்பது... அவர்களால் அதைச் சொல்லவும் முடியாது என்பது வேறு விஷயம்...

பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகளும் இப்படித்தான் இருப்பார்கள். ஒரு சிலர் ஓடுற பாம்பை பிடித்து விளையாண்டாலும் ஆச்சர்யமில்லை. எனவே குழந்தையின் மீது கவனம் வையுங்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஒரு வருத்தமான நிகழ்வு... அம்மாவின் அசால்ட்டால் ஒரு இளம் குருத்து வளரும் முன்னே வாடிவிட்டது. இந்த வேதனையான நிகழ்வு எங்கள் அறை நண்பரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. அவரின் தம்பி மகனுக்குத்தான் இப்படி ஒரு மரணம்...

ஓடி ஆடும் பையன்... துறுதுறுப்பான பையன்... எல்லோரும் கொண்டாடும் பையன்... அதனால்தானோ என்னவோ தானும் கொண்டாட நான்கு வயதிற்குள் படைத்தவன் கூட்டிக் கொண்டு விட்டான் போலும்.

வாகனங்கள் அவ்வளவாக பயணிக்காத ஒரு சிறிய கிராமத்தில் அப்பத்தாவீடு, பெரியப்பா வீடு, சித்தப்பா வீடு என இரண்டு தெருவுக்குள் சொந்தங்கள் இருப்பதால் இங்கும் அங்கும் ஓடித் திரிந்தவன் அவன். எடுப்பார் கைப்பிள்ளையாய் எல்லோருக்கும் செல்லம்.

எப்பவும் போல் நேற்று முன்தினமும் சுற்றித் திரிந்திருக்கிறான். நாலு வயசுப் பையனை வெளியே சுற்ற விடுவதே தவறு என்பது ஏன் தெரியவில்லை அந்தத் தாய்க்கு. வெளியே சென்று வந்தவன் சோர்வாக இருக்கவும் சுத்திவிட்டு வந்ததால சோர்வாக இருக்கான் போலன்னு நினைத்து அவனுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வைத்திருக்கிறார். தூங்காமல் கிடந்தவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கவும் என்னமோ ஏதோ என்ற பதட்டமில்லாமல் எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கும் என்று அருகில் இருக்கும் பூசாரியிடம் மந்திரித்து இருக்கிறார்.

அவன் உடம்பில் இருந்த விஷம் மந்திரத்துக்கு கட்டுப்படுமா என்ன... பையனின் நிலைமை இன்னும் மோசமாக உறவுகளிடம் சொல்லாமல் அவரது தம்பிக்கோ யாருக்கோ போன் செய்து அவர்கள் வந்து கூட்டிச் சென்று அரசாங்க மருத்துவமனையில் கொண்டு போய் காட்ட குழந்தை இறந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். என்ன செய்வது? அரசு மருத்துவமனை... இறந்து போன குழந்தையை கூறு போட்டுத்தான் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றதை தவறாகச் சொல்லவில்லை... நிலைமை ரொம்ப மோசம் என்று சொல்லும் போது தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பதே எண்ணம். போஸ்ட் மார்டம் முடித்து நேற்றுத்தான் கொடுத்திருக்கிறார்கள். 

அம்மாவின் அசட்டையால் நான்கு வயது மகனை இழந்திருக்கிறார்கள். குழந்தை சோர்வாக இருக்கும் போது அதன் சட்டையைக் கழட்டி என்ன ஏது எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கான்னு பாக்க வேண்டாமா? பூசாரியிடம் மந்திரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை... இதுதான் கடித்தது என்று தெரிந்து மந்திரித்து இருந்தால் சரி... என்ன கடித்தது என்றே தெரியாமல் மந்திரிப்பது என்பது சரியானதா? இந்தக் காலத்தில் வீதிக்கு வீதி மருத்துவமனைகள் இருக்கும் போது மந்திரித்தல் தேவையா? பிள்ளை ரொம்பச் சோர்வாக இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் சொந்தங்களை விடுத்து தூரத்தில் இருக்கும் சொந்தத்துக்கு அழைப்பு விடுவது என்பது சரியானதா? என இங்கு நண்பர் புலம்பித் தீர்க்கிறார்.

மழலைப் பேச்சைக் கேட்டு மகிழந்த உள்ளம் இப்போ மயங்கிக் கிடக்கிறது. பெற்ற தகப்பனோ பதினைந்து நாளைக்கு முன்னால்தான் சௌதிக்கு அரபி வீட்டு டிரைவராக சென்றிருக்கிறார். விவரம் தெரிந்ததும் வர நினைத்து அரபியிடம் கேட்க, அவரோ செலவு தொகையைக் கொடுத்துவிட்டு முடித்துக் கொண்டு போ என்று சொல்லி விட்டார். எங்கள் அறை நண்பர் இங்கிருந்து பணம் புரட்டி தம்பிக்கு அனுப்ப, அரபி நேற்றுக் காலை அவசர அவசரமாக அவரின் விசாவை கேன்சல் செய்து இரவு விமானத்திற்கு ஏற்றிவிட்டுவிட்டார்.

இன்று காலை சென்னை வந்து... அங்கிருந்து பெரம்பலூர் போயி... அறுத்துப் போடப்பட்ட மகனை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்து கதறி, வழியனுப்பி வைத்து விட்டு அண்ணனிடம் அழுகிறார். என்ன செய்வது..? சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் இழந்த குழந்தையை மீட்டெடுக்குமா என்ன... வலிகள் மறக்கும் வலிமையை இறைவன் கொடுத்திருந்தாலும் இது மறக்க நினைக்கின்ற வலியா? மறக்கத்தான் முடியுமா? 

ஒரு உயிர் போனதற்கு யாரைக் குற்றம் சொல்வது... படரும் முன்னே பறித்த இறைவனைக் குற்றம் சொல்வதா? அல்லது பிள்ளையை பற்றி கவலை இல்லாத தாயைக் குற்றம் சொல்வதா? அல்லது பாலகன் என்று தெரிந்து கடித்து வைத்த பாம்பைக் குற்றம் சொல்வதா? வீட்டுக்கு ஓடிவரும் குருத்தை இனி இப்படி விடாதே எனச் சொல்லாத உறவுகளைக் குற்றம் சொல்வதா?இதில் யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய... அந்தப் பாலகம் பறந்து நாட்களில் மூன்று  முடிந்து விட்டது. அவன் ஓடி ஆடி விளையாண்ட வீதிகள் வெறிச்சோடிக் கிடப்பதை காணத்தான் முடியுமா..? பாம்பு கடித்திருக்கலாம் என்கிறார்கள்... என்ன கடித்தது என்பது அந்த பாலகனுக்குத்தான் தெரியும்... 

சம்பாரிச்சு பணம் அனுப்புகிறோம்... பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு என்ன... அதைவிட வேறு வேலை என்ன இருக்கு என்று கேட்கிறார் நண்பர்... அவரின் கேள்வி சரிதானே... குடும்பம் விட்டு... நாடு விட்டு... இங்கு வந்து நாயாக வேலை பார்த்து... நல்ல உறக்கமின்றி... உணவின்றி... உடையின்றி குடும்ப நினைவுகளோடு நகரும் நாட்களில் எல்லாத்தையும் தொலைத்து வாழ்வது யாருக்காக...? எல்லாம் குடும்பத்திற்காகத்தானே... செலவுக்கு பணமில்லையா எவனிடமாவது வாங்கி அனுப்பிக் கொண்டுதானே இருக்கிறார்கள்... அப்புறம் என்ன..? தொலைக்காட்சி பார்த்தாலும் பிள்ளைகளை கண்கூடாக பார்க்க வேண்டாமா?

எத்தனை வேலை இருந்தாலும்... எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் குழந்தைகளை தங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.... இப்போ மழை நேரம்... தனி வீடாக இருந்தால் சுற்றிலும் செடி கொடிகள் இருந்தால் பூச்சிபட்டை வரத்தான் செய்யும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை இறந்த செய்தி கேட்டதில் இருந்து ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

வெளியில் விளையாடும் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்... தண்ணிக்குள்ளோ, செடி கொடிக்குள்ளோ விளையாட அனுமதிக்காதீர்கள். நம் வாழ்வின் ஆதாரமே குழந்தைகள்தான்... அவர்கள் நமக்கு முக்கியம் என்பதைவிட நம் மூச்சே அவர்கள்தான் என்பதே உண்மை. எப்பவும் குழந்தைகளை கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

16 எண்ணங்கள்:

Angel சொன்னது…

வருத்தமான சம்பவம் சகோ :( பாவம் அந்த பெற்றோர்
சிறு குழந்தைகளை ஐந்து வயது வரையிலும் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் .வெளியில் இருந்து வீடு திரும்பியதும் சட்டையை கழட்டி பார்த்திருந்தால் கூட தாய்க்கு புரிந்திருக்கும் .என்ன விஷ பூச்சி கடித்ததோ இல்லை விஷமுள்ள பழம் காய் எதையேனும் குழந்தை சாப்பிட்டிருக்குமோ :(
என்ன அழுது வருத்தப்பட்டு புலம்பினாலும் போன உயிர் :(
இறைவன் தான் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் தரனும் .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஈடு செய்ய இயலாத இழப்பு
தங்களின் நண்பருக்கு அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்

துரை செல்வராஜூ சொன்னது…

மனதிற்கு மிகச் சங்கடமாக இருக்கின்றது.

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

KILLERGEE Devakottai சொன்னது…

வந்து படித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது நண்பரே... ஆறுதல் சொல்லி தீர்க்கமுடியாது இனியெனும் இதுபோன்ற சம்பவங்கள் நடவாதிருக்க அனைவருமே கவனமாக இருக்க வேண்டும் வேறு என் செய்யமுடியும்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

உங்கள் பதிவை படித்ததும், வேதனை மனதை என்னவோ செய்தது.. அந்த பெற்றோருக்கு இப்படியொரு நிலைமை வர வேண்டாம். ஆழ்ந்த தீராத சோகம் தரும் நிகழ்ச்சி. வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை.!

கமலா ஹரிஹரன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

Kasthuri Rengan சொன்னது…

பல முனை இழப்பு ...
அக்குடும்பம் மீள இறைவனை வேண்டுகிறேன்

Kasthuri Rengan சொன்னது…

த ம

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்த இரங்கல்கள்...

Valaipakkam சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://valaipakkam.16mb.com/ வலைப்பக்கம் - இல் இணைக்கவும்.

ஸ்ரீராம். சொன்னது…

வேதனையான விஷயம். இந்தக் கொடுமையைத் தாங்க அந்தத் தகப்பனுக்கும், குடும்பத்தினருக்கும் அதே ஆண்டவன் மன உறுதியைத் தரட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

படித்ததும் மனம் கனத்தது. எச்சரிக்கை எப்பொழுதும் தேவை என்பதை உணர்த்தும் பதிவு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேதனையான விஷயம்.....

எனது இரங்கல்களும்....

Yarlpavanan சொன்னது…

துயர் பகிருகிறேன்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்னதை வாட்டிவிட்டது நண்பரே! என்ன ஒரு வேதனையான ஒரு விஷயம்....மிகவும் வருத்தமாக இருக்கின்றது இது போன்ற நிகழ்வுகளை வாசிக்கும் போது....குழந்தையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

UmayalGayathri சொன்னது…

மனம் கனத்து விட்டது சகோ..என்ன வென்று சொல்வது...