மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஒத்தை மரம்



ஊருக்கு வெளியே
தனியாய் நிற்கும்
ஒத்தை மரம்
கூந்தலில் சூடிய
ஒற்றை ரோஜாவாய்
தனி அழகுதான்...

பூக்கும் காலத்தில்
பாலைக்குள் சோலையாய்
பசுமை போர்த்தி
நிற்கும் அழகே அழகு...

மரக்கொரங்குக்கும்
கயிறு ஊஞ்சலுக்கும்
கிரிக்கெட்டுக்கு 
ஸ்டெம்புக்கும்
மதிய நேர 
குட்டித் தூக்கத்துக்கும்
எப்பவும் எங்களுடன்
இணைந்தே இருக்கும்....

ஆட்டுக்கு கொலை
அறுக்கப் போய்
அருவாக் கம்பு
தவறி விழுந்து
கழுத்தறுபட்டு 
செத்துப் போனான்
அயோத்தி...

அன்னைக்கு பிடிச்சது
மரத்துக்கு ஏழரை...
அயோத்தி பேயா
இருக்கானாம்...
வில்லுக்கம்பு 
வெள்ளச்சாமியும்
பாண்டி முனியும்
அதிலே இருக்காம்...

கதைகள் வளர
மரம் தனிமைப்பட்டது...
விளையாட்டு இடமும்
மாறி நாளாச்சு...

இரவில் அலறும்
அந்தையும்
எப்போதாவது கேட்கும்
ஒருவித சத்தமும்
பிறக்கும் பிள்ளைக்கும்
சொல்ல வைத்தது
ஒத்த மரத்துல
பூச்சாண்டி இருக்கான்னு...

ஊருக்கே அழகுதான்
ஒத்த மரம்...
மனித மனங்கள்
பயம் சுமந்து
ஒதுக்கி வச்சாலும்
இன்னும் நிற்கிறது
எப்பவும் போல் 
பசுமை சுமந்து...
-'பரிவை' சே.குமார். 

7 எண்ணங்கள்:

அம்பாளடியாள் சொன்னது…

மறக்க முடியாது என்றுமே நாம் கண்ட அந்த ஒத்தை மரம் !
சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .

arasan சொன்னது…

நிதர்சன படைப்பு ... ஒவ்வொரு கிராமத்திலும் ஒத்தை மரம் இருக்கும் கூடவே ஒரு கதையும் இருக்கும் உங்கள் கவிதை போல ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சில மரங்களில் இங்கும் நினைப்பதுண்டு....

சக்தி கல்வி மையம் சொன்னது…

எண்கள் ஊரிலும் ஒரு ஒற்றை மரம் உள்ளது.. கவிதை அருமை...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

// ஊருக்கே அழகுதான்
ஒத்த மரம்...
மனித மனங்கள்
பயம் சுமந்து
ஒதுக்கி வச்சாலும்
இன்னும் நிற்கிறது
எப்பவும் போல்
பசுமை சுமந்து... //

உண்மைதாங்க...

அழகான வரிகளில் அற்புதமா சொல்லி இருக்கீங்க...

உஷா அன்பரசு சொன்னது…

அரண்டவங்க கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானோ?

முதல் கணினி அனுபவம் தொடர் பதிவை நீங்களும் தொடர என் பதிவில் கேட்டிருந்தேன்.. பார்த்தீர்களா? நேரம் கிடைக்கும் போது சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடர்பதிவு :

அழைப்பு :http://veesuthendral.blogspot.in/2013/08/blog-post_3.html

வாழ்த்துக்கள்...