மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 17 ஜூலை, 2013

பழநி அம்மா...பழம் நீயே அம்மா!


கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தொடர்பான விழா.அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் முன் திருவாசகம் பாடப்படுகிறது.அந்த பாடலில் மனம் உருகியபடி நின்ற பக்தர்களில் ஒருவர் வித்தியாசமாக காணப்பட்டார்.

சுமார் 80 வயதை தொட்ட தோற்றத்துடன் காவி உடையை போர்த்திக்கொண்டு தன்னை மறந்து திருவாசகத்தை கண்ணில் நீர் பெருக உருகி, உருகி பாடிக்கொண்டிருந்தார்.

யார் இவர் என்ற கேள்விக்கு விடை தஞ்சை குடவாசலில் இருந்து ஆரம்பிக்கிறது.

ஊருக்கே சோறுபோடும் தஞ்சை தரணியில் குடவாசலில் பிறந்திட்ட ராஜம்மாளுக்கு அவரது தந்தையும், தாயும் சோறு ஊட்டும்போது, கூடவே தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் சேர்த்தே ஊட்டினர்.விளைவு தேசபக்தி மிகுந்த வீரமங்கையாய் வளர்ந்தார்.

அப்போது சுதந்திர போராட்ட காலமாகும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் தொடர்பு மிகக்கடினமாக இருந்தது. ஆற்றாங்கரையில் நாணலோடு நாணலாக பல மணி நேரம் காத்திருக்கும் வீரர்கள் அடுத்த கட்ட செயலுக்கான கடிதத்திற்கு காத்திருப்பார்கள், இவர்களையும் இவர்களிடம் தொடர்பு கொள்பவர்களையும் பிரிட்டிஷ் போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள்.

அந்த தண்டனைக்கெல்லாம் பயப்படாமல் தலைவர்களுக்கும், வீரர்களுக்குமான கடித போக்குவரத்திற்கு துணையாக இருந்தவர் இவர். அந்தக் காலத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். பிறகும் தொடர்ந்து படித்து மூன்று எம்.ஏ.,பட்டம் பெற்றவர்.

எத்தனையோ வேலை வந்தபோதும் கணவர், குழந்தைகள் பார்ப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். நான்கு பெண், ஒரு மகன் அரசு அதிகாரியான கணவர் என்று குடும்பம் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ராஜம்மாளின் கணவர் இறந்து விட பித்துப்பிடித்தது போலாகிவிட்டார்.

ஆனாலும் பிள்ளைகளுக்காக வாழவேண்டுமே என்பதற்காக ஒரு வைராக்கியத்துடன் கணவரது அலுவலகத்தில் அரசு வேலையை வாரிசு அடிப்படையில் தொடர்ந்தவர் தன் படிப்பு காரணமாக அந்த வேலையில் மேலும் உயர்வு பெற்றார். பிள்ளைகளை பிரமாதமாக படிக்கவைத்து நல்ல வேலையில் சேர்த்தார் மகன் வெளிநாட்டில் இருக்கிறான், எல்லோரும் வேலை, குடும்பம் என்று செட்டிலாகிவிட்டனர்.

அனைவரையும் நல்ல படியாக கரை சேர்த்தாகிவிட்டது இனி நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது சிறு வயது முதலே அவருக்குள் ஈர்ப்பினை ஏற்படுத்திய திருவாசகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்வது என முடிவு செய்தார்.

கணவரது பென்ஷன்.தனது பென்ஷன், மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் என்று வரக்கூடிய, பெறக்கூடிய வருமானம் அனைத்தையும் திருவாசகத்தின் உயர்வுக்கே வழங்கி வருகிறார்.

ஆங்கில கலப்பு இல்லாமல் அழகாக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட ராஜம்மாள் திருவாசகம் பற்றி யார் எங்கு பேசக்கூப்பிட்டாலும் போய் இலவசமாக பேசிவிட்டு வருவார், யாரைப் பார்த்தாலும் அழகிய திருவாசகம் புத்தகம் ஒன்றை பரிசளிப்பார்.

திருவாசகத்தில் என்ன இல்லை ஒரே ஓரு முறை படித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை முறையே மாறும் என்று சொல்லும் ராஜம்மாள் இதற்காக தனது வீட்டையே திருவாசக முற்றோதல் இல்லமாக மாற்றியுள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு அதுவும் எளியவர்கள், அடியவர்கள் யாருடனாவது பகிர்ந்து கொள்கிறார், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறார். மேடையில் அமர்ந்து திருவாசகம் சொல்ல ஆரம்பித்தால் சப்பணமிட்டு போட்ட காலைக்கூட பிரிக்காமல் 13 மணி நேரம் எப்படி உட்கார்ந்தாரோ அதே நிலையிலேயே பேசிமுடிக்கும் தெம்பும், திராணியும் உள்ள இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.ஆனாலும் ஒரு கணமும் சோர்ந்து இருக்காது சுறு,சுறுவென ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.

பழுத்த சிவப்பழம் போல காட்சி தரும் ராஜம்மாளை ஒரு பெண் துறவியாகவே கருதி பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு "பழநி அம்மா' என்றே வணங்கி அழைக்கின்றனர்.

இந்த வயதில் இவர் இப்போது ஒரு பெரிய விஷயத்தை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளார். கேட்டால் நானா செய்கிறேன் இறைவன் செய்கிறான் நானொரு கருவி என்கிறார் எளிமையாக. அது என்ன காரியம் என்கிறீர்களா.

வருகின்ற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பழநியில் திருவாசகத்தை முழுவதும் ஓதும் திருவாசக முற்றோதல் என்ற பெரிய விழாவினை நடத்த உள்ளார். சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக இந்த விழாவினை நடத்த எண்ணியுள்ளார். இந்த விழாவில் சிவ.தாமோதரன் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு துறவிகளும் ஆன்மிக பெரியவர்களும், அடிகளார்களும் கலந்து கொள்கின்றனர். திருவாசகத்தை பல்வேறு வடிவத்தில் முற்றோதல் செய்வது நடைபெறும். திருவாசகத்தை முழுமையாக நுகர இது ஒரு அற்புதமான வாய்ப்பு. மாணவர்களும், இளைஞர்களும் பெரிய அளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியுள்ளார்.

இந்த மாநாடு பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ளவும், துறவி ராஜம்மாளிடம் திருவாசகம் பற்றி பேசவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9486637345, 9443023212.

- எல்.முருகராஜ்
நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

நல்லதொரு தகவல், இளைஞர்களை அதிகம் சேரவேண்டிய தகவல், என் முக நூலில் பதிகிறேன். நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கன்னு நம்பி:-)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தேன் போல் தித்திக்கும் திருவாசக முற்றோதல் கோவையிலும் நடக்கிறது.. பங்கேற்றிருக்கிறேன்..!