மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 ஜூலை, 2013

ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்த 2013 : அரையாண்டு ரிப்போர்ட்

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்...

கலெக்ஷனை அள்ளிய படங்கள்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு... பணம்... துட்டு... மணி.. மணி... என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம். 


விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார். 

சூது கவ்வும் அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.

பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்...

அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது. 

ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.

டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது. 


மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன்,  விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.

சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது. 

சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013. 

கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.


அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.

பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி. 

பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்...

தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.

மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.  


கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

செய்திக்கு நன்றி : தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை'  சே.குமார்.

0 எண்ணங்கள்: