மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 பிப்ரவரி, 2013

அமில அவலம்! - தினமணி தலையங்கம்


கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட, மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் பொறியியல் பட்டதாரிப்பெண் விநோதினி, நோய்த்தொற்று காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சம்பவமாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு இளம்பெண் வித்யா, அமில வீச்சினால் பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் இறந்துள்ளார். விநோதினி ஒரு ஆணின் கைக்கிளையால் (ஒருதலைக் காதல்) அமிலவீச்சுக்கு ஆளானவர். வித்யாவோ, திருமணம் உடனே நடைபெறாமல் தள்ளிப்போவதற்காகத்  தாக்கப்பட்டவர்.

 காதலுக்கு சம்மதிக்கவில்லை; மணம்புரிய விரும்பவில்லை; மணமுறிவுக்கு உடன்படவில்லை ஆகியவைதான் பெண்கள் மீதான அமில வீச்சுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. வாழ்நாள் முழுதும், சில தருணங்களில் பார்வை இழப்புடனும், சில தருணங்களில் முகம் சிதைந்தும் நடமாடுவது என்பது, அவரை ஒவ்வொரு வினாடியிலும் ஒவ்வொரு நாளிலும் நரக வேதனையில் வாழச்செய்வதாகும். ஒரு பெண்ணைக் கொல்வதைவிட மிகக் கொடிய செயல் அமில வீச்சு.

 2008-ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் வாரங்கல் நகரில் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பொறியியல் கல்லூரி மாணவிகள் மீது கல்லூரியிலிருந்து இடைநின்ற மாணவர், தனது இரு நண்பர்களுடன் மோட்டார் பைக்கில் சென்று அமிலம் வீசித் தாக்கியதில், காதலிக்க மறுத்த பெண் மட்டுமின்றி, வாகனத்தில் உடன்சென்ற பெண்ணுக்கும் முகம் சிதைந்தது.

 இந்த வழக்கில், போலீஸாரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச்செல்ல முயன்ற அந்த மூவரும் அடுத்த நாளே "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர். அது "போலி என்கவுன்டர்' என்று குற்றவாளிகளின் பெற்றோரும், மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அதேவேளையில், வாரங்கல் காவல் கண்காணிப்பாளருக்கு கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மலர்க்கொத்துகளை வழங்கிக்கொண்டிருந்தனர்.

 அமில வீச்சுக்குக் கடும் தண்டனைகள் இல்லாத அந்த நேரத்தில், இத்தகைய "என்கவுன்டர்', பெண்கள் அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டதை சற்று வேதனையுடன் புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த அவசரச் சட்டத்தில், அமில வீச்சில் உடல்பாகங்கள் சேதமடைந்தால் 10 ஆண்டுகள் சிறை; வெறும் அமிலவீச்சு முயற்சி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றால் 5 ஆண்டுகள்வரை சிறை என்று பரிந்துரைந்திருக்கிறது வர்மா கமிஷன்.

 அமில வீச்சு என்பது கொலைக் குற்றத்தைவிட மிகக்கொடியது. இது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் ஒன்றாகக் கலந்து பேசி, அமில விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு காண வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கான முயற்சியில் எந்தவொரு மாநிலமும் முனைப்புடன் இறங்கியதாகத் தெரியவில்லை. வித்யாவின் மரணத்தைத் தொடர்ந்து தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலும்கூட, அமில விற்பனைக்குக் கட்டுப்பாடு உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

 "ராஜதிராவகம்' பொதுவாக நகைக்கடைகளில் மட்டுமே இருக்கும். அதற்கு  அடுத்தபடியாக கல்லூரி, மேனிலைப் பள்ளிகளில் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்காக நைட்ரிக் ஆசிட், சல்பூரிக் ஆசிட் வாங்கப்படும். நைட்ரிக் அமிலம் மிகஅதிகமாக நீர்த்த நிலையில், கழிவறைகள் கழுவும் திரவமாக விற்கப்படுகிறது. இவற்றின் விற்பனைக்கு எந்தத் தடையும் இல்லை. யார் யார் வைத்திருக்கலாம் என்பதற்கும் நிபந்தனைகள் இல்லை. விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெரியும் என்றும், புதிய ஆட்களுக்குத் தருவதில்லை என்றும் கூறினாலும், யார் யார் அமிலம் வைத்திருக்கலாம் என்று சட்டம் வரையறுக்கவில்லை. அதனால், அமில விற்பனைக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது.

 அமில வீச்சு இல்லாமல் வேறு வகையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படாதா என்ற கேள்வி எழலாம். கத்தியால் குத்தியும், தீயினால் சுட்டும் ஏற்படுத்தும் காயங்களையும்விட மோசமானது அமில வீச்சு. இது தசை முழுவதையும் அழித்து எலும்புகளையும் அரித்துச்செல்லும் தன்மை உடையது. ஆகவேதான் அமில விற்பனை, பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

 அமில வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "பிளாஸ்டிக் சர்ஜரி', மனநல ஆலோசனை, வேலைவாய்ப்பு ஆகியவை இன்றியமையாதவை. அமிலவீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடும் அமைப்புகள் சில இருந்தாலும், இதில் அரசின் நிதியுதவி இல்லாமல், பாதிக்கப்பட்டவர் முழு சிகிச்சையைப் பெறுவது இயலாது. இதற்கான சிகிச்சைகள் மிகச் செலவு மிக்கவை. இந்த விஷயத்திலும் ஒரு பொதுவான விதியை அரசு உருவாக்கியே தீரவேண்டும்.

 அரசு மருத்துவமனைகளில் இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதற்கு, மூன்று மாதங்கள் கழித்து இறந்த விநோதினி மற்றும் 30 நாள்கள் கழித்து இறந்த வித்யா இருவரும் சாட்சி. இவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி அரசு திட்டத்தில் இப்போது இல்லை.

 அரசு மருத்துவமனைகள் எந்த அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதற்கும் இந்த மரணங்கள் உதாரணம். உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவர்களது நேரடிக் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லை, போகட்டும். அடிக்கடி சோதனையிடக்கூட, பார்வையாளராக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பதுதான் இந்த அவலத்துக்குக் காரணம். இது தெரிந்தும் செயல்படாமல் இருக்கிறார்களே, அவர்களும்தான் வினோதினி, வித்யா போன்றவர்களின் மரணத்திற்குக் காரணம்!

நன்றி - தினமணி
                                                                                                                                                                                        -'பரிவை' சே.குமார்

2 எண்ணங்கள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

அந்த இரண்டு பெண்களின் மரணமும் மிகவும் வேதனையான விஷயம்.

சட்டதிட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே போதாது, அவற்றை சரியான படி நடைமுறைப்படுத்த வேண்டும்.

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!நல்ல பகிர்வு,பலரை சென்றடையும்.