மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 11 ஜூன், 2012

சுழலும் பூமிக்குள்...


வெயில் விட்டுச் சென்ற
வெக்கையை காற்றில் கரைத்து
கருமையை வசப்படுத்த
ஆரம்பிக்கும் இரவின் பயணத்தில்...

கூட்டுக்குள் குலவும் குயில்கள்...
எங்கோ அலறும் ஆந்தை...
சோத்துக்காய் வாசலில்
தெருவோர குழந்தைகள்...

அணைந்து விழிக்கும் மின்சாரம்...
அழுகும் சீரியல் மாமிகள்...
அடம் பிடிக்கும் குழந்தைகள்...
தண்ணீர் சொட்டும் தெருக்குழாய்...

எதையோ பார்த்து குலைத்தபடி
வீதியில் ஓடும் தெருநாய்கள்...
பந்து விளையாடும் பசங்க...
நொண்டி விளையாடும் பொண்ணுங்க...

இரவுப் போர்வையை விலக்கிப்
பார்க்கும் பௌர்ணமி...
தனிமை விரும்பும் பருவ மங்கை...

எதிர் வீட்டு தாவணிக்காக
தவமிருக்கும் இளைஞனின்
உதட்டு நெருப்பில் புகையும் சிகரெட்...

வீட்டுக் கணக்கு விவகாரத்தில்
விக்கித் தவிக்கும் குடும்பஸ்தன்...
இரை தேடி வரும் ஆட்டுக்காக
பேருந்து நிறுத்தத்தில் விலைமாது...

குடித்த சரக்கு குடலுக்குள்
எடுத்த வாந்தியாய் வார்த்தைகள்...
ரோட்டில் அலறும் ஹாரனைத்
தொடரும் அர்ச்சனைக் குரல்கள்...

சந்துக்குள் வந்து திரும்பும் சைக்கிளின்
வருகையை உணர்த்தும் ம்ணியோசை...
பாலுக்காக கன்றைத் தேடும்
தாய்ப்பசுவின் பாசக் குரல்...

டீக்கடையில் ராஜாவின் ராஜ்ஜியம்...
எங்கோ முயங்கும் உடல் மொழிகள்...
பாலுக்கு அழும் குழந்தை...
இன்னும் எல்லாம் கடந்து....

தொடரும் விடியலின் வாசலில்
பறவைகளின் ரீங்காரம்...
பால்காரனின் மணியோசை...
வாசல் தெளிக்கும் தண்ணீரிசை...

டீக்கடையில் அம்மன் பாடல்...
அம்மாவின் திருப்பள்ளி எழுச்சி...
என மீண்டும் தொடங்கி

அடுத்த இரவுக்கான பயணத்தை
களைப்பின்றி தொடர்கிறது
உறங்காத காலச்சக்கரம்...!
-'பரிவை' சே.குமார்

5 எண்ணங்கள்:

செய்தாலி சொன்னது…

யதார்த்தமான
வாழ்க்கை நிகழ்வுக் கோர்வைகள்
அரமை சகோ

மகேந்திரன் சொன்னது…

சுற்றிவந்தால் வட்டமென
உணரவைக்கும்
இயல்புக் கவிதை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரர்களே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Asiya Omar சொன்னது…

உறங்காத காலச்சக்கரம் அருமை.நிகழ்வுகளை எதார்த்தமாய் கவிநடையில் சொல்லிய பாங்கு நல்லாயிருக்கு.

vimalanperali சொன்னது…

காலை தொடங்கி இரவு செல்கிற வாழ்வு வெளிக்குள்ளாக நடக்கிற் நிகழ்வுகள் மனிதனை வெகுவாகவே பாதித்து விடுகிறதுதான்.நல்ல் கவிதை.வாழ்த்துக்கள்.