மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?

பிக்பாஸ்...

எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் பற்றியே விவாதங்கள்...

Image result for biggboss tamil

இந்தப் பதிவு கூட அது பற்றியதுதான்... விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டும். வாசித்துவிட்டு நான் கீழே சொல்லியிருப்பவர்களைப் போல் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். ஏன்னா நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  மண்வெட்டி பிடித்தவன்தான்... எரவாமரம் போட்டு தண்ணீர் இறைத்தும்... நாற்றுப் பறித்தும்... வரப்பு வாய்க்கால் வெட்டியும்... கதிர் அறுத்தும்... கட்டுத் தூக்கியும் எல்லா வேலையும் பார்த்து வளர்ந்தவன்தான். விவசாயியின் வலியும் தெரியும் அந்த கஷ்ட ஜீவன வாழ்க்கையும் தெரியும். எனவே எனக்கு அறிவுரை வேண்டாம்... மன்னிக்கவும்... அறிவுரை சொல்லும் கருத்துக்களுக்கு விவாதம் செய்யும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

பிக்பாஸ் பற்றி பேசும் நீங்க நெடுவாசல் போராட்டத்துக்கு ஏன் பொங்கவில்லை... ரேசன் இல்லைன்னு சொல்லிட்டானுங்க அதுக்கு ஏன் போராட்டக்களம் அமைக்கவில்லை... இறப்பைப் பதிவு செய்ய ஆதார் அவசியம் என்று சொன்னதற்கும் பொங்கவில்லையே... ஏன்...? ஏன்...?? என சமூக வலைத்தளங்களில் பலர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்கள்... இல்லை எத்தனை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முகநூலிலோ டுவிட்டரிலோ தங்கள் எண்ணங்களைப் பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதில் ஒரு நண்பர் பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு கருத்திட்ட ஒருவர் விவசாயியின் வலி உனக்குத் தெரியலையா...? அவர்கள் போராட்டம் நடத்தும் போது நீ கேவலம் எழுதிக் கொடுத்ததை நடிக்கும் நாடகத்துக்கு இவ்வளவு சிரத்தையாக எழுதுகிறாயே என்பதுடன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் சேர்த்து கருத்து இட்டிருந்தார். விவசாயியின் மகனாய்ப் பிறந்து அந்த வலியை எல்லாம் அறிந்தவர்கள்தான் அந்தப் பதிவை எழுதிய என் நண்பர்... அவர் சொன்ன ஒரே பதில் நான் இப்படித்தான் புடிக்கலைன்னா போயிடுங்க... என்ன புடுங்கணுமுன்னு கிளாஸ் எடுக்க வேண்டாம்... இதன் பின் பொங்கியவர் அடங்கிப் போய்விட்டார். இன்று விவசாயிகள் போராட்டம் கூட அரசியல் ஆக்கப்பட்டுத்தான் இருக்கிறது... விவசாயிகள் போராட்டம் என்றில்லை எல்லாப் போராட்டமுமே அரசியல் கலந்தவைதான் என்பதுதான் உண்மை. 

பிக்பாஸ் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பதிவைப் படிக்காதீர்கள்... விலகிச் செல்லுங்கள்... நீங்கள் கேட்கும் போராடினீர்களா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு போராட்டக் களங்களுக்கு விரையுங்கள்... அதை விடுத்து நீ ஏன் அதற்கு எழுதுகிறாய்... நீ ஏன் இதற்கு எழுதுகிறாய் என்று கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சமூக அக்கறையோடு பொங்குவதாய் நடிப்பதை விட, பிடித்ததைக் குறித்து எழுதுவது தவறில்லை என்பதே என் எண்ணம்... இந்தப் பொங்கு பொங்குகிறவர்கள்தான் காலை வணக்கத்துக்கும் மாலை வணக்கத்துக்கும் லைக்கிட்டு ஆயிரம் ஆயிரமாய் லைக் வாங்க வைக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...

Related image

இந்த நிகழ்ச்சி பிரபலமாக ரெண்டே காரணங்கள்தான்... அது 'ஆண்டவர்' என்று சொல்லப்படும் கமலும் 'ஆன்மா'வின் ராகமாய் இருக்கும் ஒவியாவும் மட்டுமே. இந்தாளுக்கு வேலை இல்லையா... இந்த நிகழ்ச்சி நடத்த வந்துட்டான் எனக் கோபமாய் பேசினார் என்னுடன் தங்கியிருக்கும் பக்கா பிஜேபி நண்பர். இதை கமல் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது..? பலர் கமலின் திறமையான பேச்சைக் கேட்கவே சனி , ஞாயிறு மட்டும் பிக்பாஸ் பார்ப்பதாய்ச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தவிர வேறு யார் நடத்தினாலும் சொதப்பியிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை என்பதே உண்மை. கமல் தள்ளி வைக்கப்பட வேண்டியவர் என்ற கருத்தே பலருக்குள் இருக்கிறது. 

ரஜினியை அரசியலுக்கு வா என்று சொல்லும் பிஜேபிதான் கமல் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கமலின் டுவிட்டர்களை கேலி செய்கிறேன் பேர்வழி என நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம்... கமலின் கருத்தை ஏற்று அவரை தலைவராக்க வேண்டும் என்றில்லை... நாம் சுயமாக சிந்திக்க வேண்டும்... மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தங்கள் நலம் மட்டுமே பார்த்து மத்தியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசைத் தூக்கியெறிய வேண்டும்... ஆனால் அதைச் செய்வோமா என்றால் செய்ய மாட்டோம் என்பதே நிதர்சனம்... அரசு இப்படி இருக்கே... அரசு எந்திரம் முடங்கிப் போச்சேன்னு யாராவது கேட்டால் பிக்பாஸ் பார்ப்பதால்தான் ஆளும் அரசு குறித்து கவலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் கிளம்புவார்கள். எது எப்படியோ நாம் திருந்தாதவரை அரசியல்வாதிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... கமலை விடுத்து பிக்பாஸ் பிக்கப் ஆக முக்கிய காரணம்... 'ஹேர்', 'மொகரையைப் பாரு', 'தூக்கி அடிச்சிருவேன்', 'சேரி பிகேவியர்' என்றெல்லாம் பேசி வன்மம் விதைக்கும் காயத்ரியோ... அவருக்கு சப்போர்ட் பண்ணும் 'ட்ரிக்கர்' சத்தியோ..., 'ஆ...', 'யா..' எனத் தலையாட்டும் ரைசாவோ... 'ஆளிருக்கும் போது ஏன் செய்தாய்' என ஆளில்லாத போது காதல் செய்யத் துடிக்கும் ஆரவோ... 'கட்டிப்புடி' வைத்தியம் செய்யும் சிநேகனோ... 'நான் நடுநிலைவாதி' எனச் சொல்லும் முட்டை கணேஷோ... ஒரளவு நியாயம் பேசும் வையாபுரியோ... என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்கும் பிந்து மாதவியோ... இவ்வளவு ஏன் சல்லிக்கட்டு பிரச்சினையில் நம் உறவுகள் எல்லாம் அடி வாங்கி மிதி வாங்கித் துடிக்க, மீடியா வெளிச்சம் பட மட்டுமே கூச்சலிட்டு இன்று காயத்ரியின் அடிவருடியாகி...  பொய்யின் பிம்பமாய் வாழும் ஜூலியோ அல்ல... எதையும் நேரிடையாகப் பேசும் ஓவியாவே...

ஓவியாவை எல்லாருக்கும் பிடிக்க எது காரணமாக இருக்கும் என்றதும் எல்லாரும் சொல்வது கவர்ச்சி... சத்தியமாக இல்லை என்பதுதான் என் கருத்து. நாம் இப்படி வாழணும் என்று நினைத்து சில காரணங்களால் முடியாமல் சார்பு நிலை வாழ்க்கையைத்தான் இன்று பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ நினைத்த வாழ்க்கையை... ஒரு பெண் வாழ்ந்து காட்டுகிறாளே என்ற எண்ணமே ஓவியாவின் மீது காதல் கொள்ள வைக்கிறது. காதல் என்றதும் வேறு திசையில் பயணிக்காதீர்கள்... பொய் சொல்லாமல்... எது சரி எது தவறு என்பதை உணர்ந்து வாழும் பெண்ணின் மீதான அதீத அன்புதான் ஓவியாவை விரும்ப வைக்கிறது. சரி ஓவியா பற்றி மற்றொரு பதிவில் விரிவாய் பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை வேலை டென்ஷன், பணப் பிரச்சினைகள் எல்லாம் சுற்றி வாழும் சூழலில் மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஏதோ ஒரு வகையில் ஆறுதல்... அதற்காக போராட்டக்காரர்களின் வலி தெரியலையின்னு சொல்லாதீங்க... நிறைய போராடியாச்சு... இன்னும் வாழ்க்கையோடு போராடிக்கிட்டுத்தான் இருக்கேன்.

மறுபடியும் சொல்றேன்... பிக்பாஸ் பிடிக்கலையா பாக்காதீங்க... அதைப் பற்றி எழுதுபவர்களை ஒதுக்கி வைத்து உங்க வேலையைப் பாருங்க.. அதை விடுத்து அதற்காக போராடினாயா... இதற்காக போராடினாயா... நடிகன் பின்னே போகாதே... நடிகையின் கவர்ச்சியில் அழியாதேன்னு புராணம் பாடாதீங்க... ஏன்னா மீடியா வெளிச்சம்பட கூச்சல் போட்ட ஒருத்தியை வீரத்தமிழச்சின்னு நீங்க தூக்கி வச்சீங்க... அவ மீடியாவுக்குள்ள நுழைய போட்ட நாடகமே என்பதை இப்போது உணர்ந்து பொங்குகிறோம்... இதுதான் நாம். நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்... என் விருப்பு வெறுப்புக்களைச் சொல்வதில் முட்டுக் கொடுக்கவோ... முட்டுக் கட்டையாக இருக்கவோ யாரும் தேவையில்லை. 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா இன்னைக்கு பொங்குறவங்கதான் சூப்பர் சிங்கர்ல சின்னப் பிள்ளைங்களை முக்கல் முணங்கள் பாட வைப்பதைப் பார்த்து ரசிச்சி பதிவு போட்டவங்க... அதை மறுத்து நான் எப்பவுமே போராளிதான் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்...

மீண்டும் சொல்றேன்... யாரும் இங்கு பொங்காதீர்கள்... எனக்கு பிக்பாஸ் பிடிச்சிருக்கு...
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் மனக் கருத்தினை இங்கு வெளிப்படையாக வைத்தமைக்குப் பாராட்டுகள் குமார்!

எங்கள் வீட்டில் டி வி இல்லாததால் பிக்பாஸ் பற்றித் தெரியவில்லை. ஆனால் என் உறவினர்கள் சொல்லுவது இதுதான். பிக் பாஸில் ஒரு வீட்டில் சேர்ந்திருப்போர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேரக்டர். அவர்களது கேரக்டரின் உண்மையா பொய்யா? ஒவ்வொருவரும் எப்படி ஒருவருக்கொருவர் ஃபேஸ் பண்ணி வாழ்கிறார்கள். எழும் விவாதங்கள், அதில் ஒவ்வொருவரது கருத்து, அந்தக் கருத்து வேறுபாடுகளை ஒவ்வொருவர் எப்படிக் கையாள்கிறார்கள், சண்டையில் முகம் கூடப் பார்க்காமல் இருப்பது, பின்னர் தீர்த்துக் கொள்வது கமலின் கருத்துகள், சஜஷன்ஸ் என்று பல பாடங்கள் கற்க முடிகிறது என்கிறார்கள்!!!! ஒருவர் விளக்கமே கொடுத்தார்...

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியான அலசல்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு. நான் டி.வி. பார்ப்பதில்லை!

பிக் பாஸ் - ஏற்கனவே பல முறை ஹிந்தியில் வந்து விட்டது. பத்து முறைக்கு மேல் வந்த இந்த நிகழ்ச்சிக்கு அப்படி வரவேற்போ, எதிர்ப்போ, வட இந்தியாவில் இல்லை. அதைப் பற்றி பெரிதாய் பேசவோ, எழுதவோ இல்லை என்பதும் உண்மை.

தமிழகத்தினைப் பொறுத்தவரை இந்த நிகழ்ச்சிக்காக For and Against பேசி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது! எத்தனை எத்தனை மீம்ஸ்! முகப்புத்தகத்தில் வரும் பாதிக்கு மேலான இற்றைகள் இந்த நிகழ்ச்சி பற்றி தான்!

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கு மனிதர்களைப் படிக்கப் பிடிக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் அது ஓரளவு நிறைவேறுகிறது

ஸ்ரீராம். சொன்னது…

ஓவியாவைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. அவரது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளவைத்து அவரின் இயல்பையே மாற்றி அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள். டாஸ்க் என்ற பெயரில் வேறு அபத்தங்கள். இந்தப் பைத்தியக்காரக் கூட்டத்தை விட்டு ஓவியா வெளியே வருவதே நல்லது!

KILLERGEE Devakottai சொன்னது…

எழுதுவது அவரவர் இஷ்டம் எனக்கு பிடித்ததை நான் எழுதுவேன் உலக மக்களுக்கு பிடித்ததை எவருமே எழுதி விடமுடியாது

நல்லது கெட்டதை படிப்பவர் பார்ப்பவர் அறிந்து கொள்ளட்டும் இன்றைக்கு அரசியல்வாதிகள், நடிகர்கள் மட்டுமல்ல, ஊடகங்கள்கூட வியாபாரிகள்தான். இதில் கமல்ஹாசன் விதிவிலக்கு அல்ல.

இங்கு எவனும் சமூக நலனுக்காக டி.வி. நடத்தவில்லை இதை அனைவரும் உணரவேண்டும்.

ஓவியா நல்லாத்தான் இருந்தாள் திடீரென அவன் ஓபனாகவே ஆரவ்விடம் முத்தம் கொடு என்று கேட்பது, அவன்மேல் விழுவது குடும்பத்துடன் பார்க்கும் பொழுது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது இதெல்லாம் அவளுக்கு புரியாது காரணம் அவள் ஒரு நடிகை

தமிழச்சி என்ற பெருமையோடு இருந்தவள் நீங்கள் சொல்லி இருப்பது போல் காரணத்தோடுதான் காய் நகர்த்தி இருக்கிறாள்.

சினேகனின் கட்டிப்புடி வைத்தியம் ஸூப்பர் நண்பரே

எப்படியோ தமிழ் நாட்டை ஒரு வழியாக சந்தியில் கொண்டு வந்து நிறுத்தாமல் விடமாட்டாங்கே....

தமிழ் மணம் //உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது// என்று அரசியல்வாதிபோல் பொய் சொல்கிறது ஆகவே மீண்டும் வருவேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பிக் பாஸ் பார்ப்பதில் விருப்பமில்லாதவன் நான்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. தாங்கள் பிக் பாக்ஸ் நிகழ்ச்சி குறித்து அலசிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது. மொழி நடை, எடுத்துச்செல்லும் விதம் என்ற நிலையில் பதிவினை ரசித்தேன்.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அருமை! அருமை!!
அட்டகாசமான பதிவு. இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் எல்லாமே 'பிக் பாஸ்'-யைப் பற்றித்தான் பேசுகின்றன. அப்படி பேசுவதே கேவலம் என்று அதற்கு எதிராக பலர் பொங்கி எழுகிறார்கள். உண்மையில் இதுவொரு பேஷனாக மாறிவருகிறது. சமூக அக்கறை இருப்பதுபோல் தன்னை காட்டிக்கொள்வது ஒரு வியாதிபோல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இவர்களில் பலர் வெளியில் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

எனக்கு தெரிந்த சிலர் என்னிடம் பிக் பாஸ் பற்றி மட்டுமே விலாவாரியாக பேசியிருக்கிறார்கள். ஒருமுறை கூட நெடுவாசல் பற்றியோ, கதிராமங்கலத்தைப் பற்றியோ பேசியதே இல்லை. ஆனால், அவர்களே பேஸ்புக்கில் பார்த்தால் ஏதோ சமூக போராளிப்போல் கருத்தை வெளியிடுகிறார்கள். ஏனென்று அவர்களிடம் கேட்டால், "அண்ணே! இதுதானே இப்போ ட்ரெண்ட் எங்கயாச்சும் போராட்டம் நடந்துச்சுன்னா அத ஆதரிச்சு ஸ்டேட்டஸ் போடணும். எங்கயாச்சும் அநியாயம் நடந்துச்சுன்னா அத எதிர்த்து ஸ்டேட்டஸ் போடணும். ஏதாவது நிகழ்ச்சியில கவர்ச்சியா யாராவது வந்த உடனே கலாச்சார சீரழிவுன்னு ஸ்டேட்டஸ் கோடனும். இதுதான் இப்போ ட்ரெண்டுண்ணே. இதுல பல போராட்டம் எதுக்கு நடக்குதுன்னே எனக்கு தெரியாது." என்றார்.

இந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்று பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் முகங்களை இப்படித்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நான் எல்லோருமே இப்படித்தான் என்று சொல்ல வில்லை. உண்மையிலே நிறைய விஷய ஞானம் உள்ளவர்கள் அங்கேயும் இருக்கிறார்கள். ஆனால், பலரும் பரபரப்புக்காக இப்படி செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஊடகங்களுக்கு வருமானம் என்பது முக்கியமாக இருப்பதுபோல் இவர்களுக்கு 'லைக்ஸ்' என்பது ஒரு போதையாக இறுக்கிகிறது. தன்னை வித்தியாசமாக காட்டினால்தான் அந்த லைக்ஸ் கிடைக்கும். மற்றபடி பெரிய சமூக அக்கறையெல்லாம் கிடையாது என்பதை என் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.

ஒரு கட்டுரை எழுதும் பொழுது அதை எழுதிய எழுத்தாளர்களை ஒருமையில் விமர்ச்சிப்பதுதான் சமூக ஊடகங்களில் பேஷனாக இருக்கிறது. ஆரோக்கியமான விமர்சனம் என்பது வருவதில்லை. அதனால் இதை பற்றியெல்லாம் கலங்காமல் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை துணிவுடன் எழுதுங்கள்.

Kurukku Muttan சொன்னது…

Good analysis. I also watch Big Boss only on Sat & Sun for Kamal. Oru china nerudal than. We can watch Oviya on Big Boss and appreciate her natural show cause. On the other hand, if we have a similar character in our family or friends circle how we will take it.

KILLERGEE Devakottai சொன்னது…

த.ம. பலமுறை முயன்றும் இப்படியே சொல்கிறது.

Bhanumathy Venkateswaran சொன்னது…

எனக்கு உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது. தொடரட்டும்!

வருண் சொன்னது…

பிக்க் பாஸ் பார்ப்பதில்லைங்க. ஆனால் அதைப் பார்க்கிறவங்களையும், பிக்க் பாஸ் ஹோஸ்ட்டையும் விமர்சிச்சு இருக்கேன். நான் பி ஜெ பி கிடையாது.

இதே பிக்க் பாஸை கமல் ஹோஸ்ட் பண்ணவில்லையென்றால் உங்களிடம் இருந்து இதுபோல் ஒரு பதிவே வந்திருக்காது. பிக்க் பாஸை நீங்களும் வேற மாதிரி விமர்சிச்சு இருப்பீங்க என்பது என்னுடைய ஒரு கணிப்பு.

சேரி பிஹேவியர்னு சொல்றதெல்லாம் பெரிய தப்பில்லைனு சொல்றாங்க. இதே பிக்க் பாஸ்ல யாராவது "பார்ப்பான் புத்தி"னு ஒரு வசன்ம் சொல்லியிருந்தால், சேரி பிஹேவியர்னு சொல்றது தப்புன்னு பார்ப்பனர்கள் உணர்ந்து இருப்பாங்க. நம் மக்கள் எப்போவுமே மற்றவர் நிலையில் த்ன்னை வைத்துப் பார்ப்பதில்லை.

நீங்க இவ்ளோ தூரம் வக்காலத்து வாங்குமளவுக்கு அப்படி என்ன தகுதியிருக்குனு தெரியலை.

தமிழ்நாட்டை ஆள்றது முக்குலாத்தோர்தான் (சசிகலா அண்ட் கோ). நீங்க சிவவகங்கைனு சொல்றீங்க, அனேகமாக அகம்படியராக முக்குலத்தோரில் ஒரு பிரிவை சேர்ந்தவர்தான். பாவம் உங்களுக்கு உங்காளு ஆள்றது பிடிக்கலை. பி ஜெ பி அது இதுனு சொல்லி ஒரு திடீர்னு லஞ்சம் ஊழல்னு (ஜெயா ஆள்ற லஞ்சம் ஊழ்ழல் இல்லையா??)திராவிட ஆட்சிக்கு எதிரா கிளப்பிவிட்டும் ஒரு பார்ப்பனருக்கு கொடி பிடிக்கிறீங்க. திராவிட வம்சம் அடிமை வம்சமாகவே எப்படி காலங்காலமாக வந்தது என்பதற்கு நீங்க ஒரு அழகான உதாரணம்.

Unknown சொன்னது…

நான் பார்த்தே இல்லை! த ம 5