மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 ஆகஸ்ட், 2017

சினிமா : உரு

ரு -  இது ஒரு சைக்கோ த்ரில்லர் கதை.

உன்னோட எழுத்துக்கு இப்போ மார்க்கெட் இல்லப்பா... வேணுமின்னா ஒரு த்ரில்லர் கதையா எழுதிக்கிட்டு வா என்று சொல்ல அதற்கான முயற்சியில் இறங்கும் எழுத்தாளன் படைக்கும் கொலையைக் கூட கலையாகச் செய்ய நினைக்கும் கதாபாத்திரம் உருப்பெற்று கொலை செய்வதுதான் படத்தின் கதை.

கதையின் நாயகன் ஒரு எழுத்தாளன்... ஒருபக்கம் அவனது எழுத்துக்கு மார்க்கெட் மதிப்பு போயாச்சு என பதிப்பகத்தார் வெளியிட மறுப்பதுடன், திகில் கதை எழுதிக்கிட்டு வா பார்க்கலாம் என்று சொல்லிவிட, மறுபக்கமோ வேலைக்கு போகும் மனைவிக்கு கணவன் எழுத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதால் குழந்தை குட்டியின்னு சந்தோஷ வாழ்க்கை இல்லாமல் இருக்கும் கவலை மற்றும் ஒரு ஆள் சம்பளத்தில் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ இயலாது என்ற உண்மையான வருத்தம்... இக்காரணிகளின் விளைவாக கொஞ்சம் கோபமான வார்த்தைகள்... அதன் பின் கொஞ்சல்... தன்னை எழுத்தாளனாய் நிலைநிறுத்தி, குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த துடிக்கும் நாயகன் திகில் கதை எழுத முடிவெடுத்து அதற்காக தனி இடம் தேடி நண்பனின் மேகமலை எஸ்டேட் பங்களா செல்கிறான்.

Image result for உரு விமர்சனம்

அவன் கதை எழுத, அதில் எழுதப்படும் வரிகள் உயிர் பெறுகின்றன... கொலையைக் கலையாகச் செய்யும் மர்ம மனிதன் வெளிவருகிறான்... அந்தச் சமயத்தில் மனைவி அவனைத் தேடி வருகிறாள்... அதன் பின்னான சம்பவங்கள் திகிலாய் பயணிக்க ஆரம்பிக்கின்றன.

மேகமலைக் காடு இரவு நேரத்தில் பயமுறுத்தத்தான் செய்கிறது. கணவனை அடித்து ஓலைப் பாயில் சுற்றி வீட்டுக்குள் தூக்கிப் போடும் மர்ம மனிதன் மனைவிக்கு ஐந்து மணி நேரத்தில் வீட்டுக்குள் வராமல் உன்னைக் கொல்வேன் என்று மிரட்டல் விடுகிறான். இந்த மரணப் போராட்டத்துக்கு இடையில் பக்கத்து வீட்டு கர்ப்பிணிப் பெண் உள்பட சிலரைக் கொடூரமாகக் கொல்கிறான். தனக்கு உதவச் சொல்லி அண்ணனுக்குப் போன் செய்கிறாள்... அங்கு வரும் அவனும் கொல்லப்படுகிறான்... காட்டு இலாகா அதிகாரியிடம் உதவி கேட்கிறாள்..? அதுவும் தவிடுபொடி ஆகிறது... கணவன் பிழைத்தானா..? அவள் தப்பித்தாளா..? மர்ம மனிதன் யார்...? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்று தோற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளனாய் 'மெட்ராஸ்' கலையரசன்... விரக்தி அடைந்த எழுத்தாளனைப் பிரதிபலிக்கிறார். கஞ்சா பீடியைப் பற்ற வைத்ததும் எழுத்துக்கான கரு உதிப்பதும்  எழுதும் போது அடிக்கடி அந்த பீடியை பற்ற வைப்பதும்... எழுத்து அருவியாய் வர ஏதோ ஒரு போதைக்கு அடிமையாக இருக்கு வேண்டும் என்பதாய் காட்டப்படுவது கண்டனத்துக்குரியது... போதை இருந்தால்தான் எழுத முடியும் என்றால் இன்று இணைய வெளியில் லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்க முடியாது. விரக்தியில் பேனா முனையை உடைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே... நாமெல்லாம் பேப்பரைக் கிழித்துக் கிழித்து எறிந்தவர்கள்தானே...

தன்ஷிகா... எழுத்தாளன் மனைவி... வேலைக்குப் போகும் பெண்... குழந்தை குட்டி என குடும்ப வாழ்க்கைக்குள் போகத் துடிப்பவள்... மேகமலைக்கு வந்த பின் மர்ம மனிதனிடம் மாட்டி அவர் படும் பாடு... அப்பப்பா... படத்தில் கலையரசனைவிட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திரம் சைக்கோ ஆகும் போதே பிசிறு தட்ட ஆரம்பிக்கும் படத்தில் கலையரசன் மர்ம மனிதனைப் பார்க்கும் இடத்தில் நமக்கு இப்படித்தான் இருக்கும்... இவனாகத்தான் இருப்பான் என்று தோன்றும் போதே படத்தில் தொய்வு வந்து விடுகிறது.  பிக்பாஸ் வீட்டில் பேய் நாடகம் போடுறேன்னு முன்னாலே சொல்லிட்டு போட்டதால உப்புச் சப்பு இல்லாத மாதிரித்தான் மர்ம மனிதனுக்கும் தன்ஷிகாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் இருக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சமேனும் அழுத்தம் சேர்ப்பது தன்ஷிகாவின் நடிப்புத்தான் என்றால் மிகையாகாது. 

ஐந்து மணி நேரம் எனச் சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மர்ம மனிதன் - நாயகி எபிசோடை... மெகா சீரியல் அழுகைச் சீனை இழுப்பது போல் வளவளான்னு கொண்டு செல்வது திகில் படத்துக்கான திகிலைத் தின்று ஏப்பம் விடுகிறது. இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமை. நடிகர்கள் சொற்பமே என்றாலும் அவர்களின் தேர்வு கன கச்சிதம். 

கிளைமேக்ஸில் என்ன சொல்கிறார்கள் என்பது ரொம்ப யோசித்தால் புரியலாம்... எனக்கு குழப்பமே மிஞ்சியது. லாஜிக் ஓட்டைகள்... விறுவிறுப்பில்லாத இழுவைக் காட்சிகள் இருந்தாலும் திகில்கதை பிடிக்கும் என்பவர்கள் தாராளமாய்ப் பார்க்கலாம். 

'தரமணி' பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு 'உரு' ரொம்பப் பிடிக்கலாம் என்பது என் எண்ணம்.

படம் வந்து ரொம்ப நாளாச்சு... ஏதாவது எழுதணும்ன்னு யோசிச்சப்போ எதுவும் எழுத தோணலை... அதனால் உரு இங்கு உருப்பெற்றுவிட்டது.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

திகிலைத் திகில் தின்று ஏப்பம் விட்டது.. அவ்வளவுதான்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ! இப்படி ஒரு படமா.....இங்கு பாலக்காட்டில் வந்திருக்காது இல்லை நான் மிஸ் செய்திருப்பேன்...பரவாயில்லை இழுவை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள் ஸோ மிஸ் செய்திருந்தாலும் ஓகே...

கீதா: இப்படி ஒரு படம் வந்ததா!!??? வலையில் கூட யாரும் எழுதியதாகத் தெரியவில்லையே... எனக்குத் திகில் கதைகள் ரொம்பப் பிடிக்கும்...ஆனால் உங்கள் விமர்சனம் நன்றாக இருப்பதால் படம் பார்க்கும் எண்ணம் வரவில்லை...நீங்களே இழுவைன்னு சொல்லிட்டீங்களே அதான்...

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

திரை விமர்சனம் ரசித்தேன்.