மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 டிசம்பர், 2017வாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்

Image result for சிவகாமியின் சபதம்
சிவகாமியின் சபதம்...

வாசிக்க ஆரம்பித்தால் அதனுள் பயணிக்க வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் கல்கி, அவரின் சுத்தத் தமிழ் சில நேரம் யோசிக்க வைக்கும்... சில நேரம் வியக்க வைக்கும்... பல நேரம் அந்த எழுத்தை விரும்ப வைக்கும்... அந்த விருப்பமே நாவலைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும். அப்படியானதொரு ஆவலுடன் கிடைக்கும் நேரமெல்லாம் வாசித்து முடித்த நாவல் இது.

கல்கியில் பனிரெண்டு ஆண்டுகள் தொடராக வந்திருக்கிறது என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. 

முதலில் பார்த்திபன் கனவு வாசிக்கத்தான் ஆசையிருந்தது... நண்பர் ஒருவர் சிவகாமியின் சபதம் படித்துவிட்டு பின்னர் பார்த்திபன் கனவு வாசித்தாய் என்றால் கதை தொடர்ச்சியாய் பயணிப்பது போல் இருக்கும். அதில் ஒரு சுவராஸ்யம் இருக்கும் என்றார். அதுவும் உண்மைதான். முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் இதில் இளவரசனாக... பார்த்திபன் கனவில் நடுத்தர வயது மனிதனாக... பேரரசனாக.

ஒரு பெண்ணின் சபதத்தை முன்னிறுத்து நகரும் கதை இது... சபதம் கதையின் பாதிக்கு மேல்தான் இடப்படுகிறது.... அதுவரை மென்மையான காதலும் முதலாம் மகேந்திரவர்மனின் அறிவுக் கூர்மையையும் கல் சிற்பத்தின் மீதான காதலையும் சொல்வதுடன் சிவகாமியின் நடனம், இளவரசருடனான காதல் என மற்றொரு பகுதியையும் சொல்லிச் செல்கிறார்.

படிப்பறிவில்லாத பரஞ்சோதி.... இப்படியாகத்தான் முதல் அத்தியாயத்தில் அறியப்படுகிறார் திருநாவுக்கரசரை சந்தித்து கல்வி பயில காஞ்சி நோக்கிச் செல்லும் பரஞ்சோதி... பின்னாளில் இவரே  நரசிம்மவர்மனின் நம்பிக்கைக்குரிய சேனாதிபதியாகவும், போரை வெறுத்து சிவனடி வீழ்ந்து சிறுதொண்டராகவும் மாறுகிறார்.

காஞ்சி செல்லும் பரஞ்சோதி, யாரென்று அறியாமலே ஆயனச் சிற்பியையும் அவரின் மகளும் நடனக்கலையில் சிறந்தவளுமான சிவகாமியையும் யானையிடமிருந்து வேலெறிந்து காப்பாற்றுகிறார். அதற்காக சிறை பிடிக்கப்பட, அச்சிறையிலிருந்து காஞ்சிக்கு வரும்போது தன்னை வழியில் ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி, சேர்ந்து பயணித்த புத்த பிஷூவான நாகநந்தி அடிகளால் காப்பாற்றப்படுகிறார். தன்னை எதற்காக சிறையில் அடைத்தார்கள் என்பதை பின்னாளில் அறிந்தும் கொள்கிறார்... அது நாகநந்தி சொன்னதற்கு நேர்மாறானது. 

நாகநந்தி அடிகளுடன் ஆயனச் சிற்பி வீட்டிற்குச் செல்லும் பரஞ்சோதி, அஜந்தா குகையில் வரையப்பட்ட ஓவியங்கள் காலகாலமாக கலர் மங்காமல் அழியாமல் இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்ட ஆயனருக்காக, ரகசியம் அறியக் கிளம்புகிறார். திருநாவுக்கரசர் ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார் என்பதாலே இவ்வேலையைச் செய்ய சம்மதிக்கிறார். அவரிடம் அஜந்தா ரகசியம் குறித்து அறிந்து கொள்ள ஓலை கொடுத்து அனுப்பப்படுகிறது. அந்த ஓலை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிரானது என்பதை அறியாமல் பயணிக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் காஞ்சியின் பெருமையைக் கேள்விப்பட்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி படை திரட்டிக் கிளம்பி வருகிறான். மிகப்பெரிய படைபலம் கொண்டவனை தன் ஆட்சிக்காலத்தில் போர்க்களமே செல்லாத சிறிய படைப்பிரிவுகளைக் கொண்ட பல்லவ அரசு எப்படி சாமாளிக்கும் என்பதாலும் எப்படியும் காஞ்சி சாளுக்கியரின் கையில் சென்று விடும் என்பதாலும் அதைத் சிலகாலமேனும் தடுத்து காஞ்சியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் மன்னர் மகேந்திரவர்மன்.

சிவகாமியும் இளவரசனும் காதலிப்பது பிடிக்காத மன்னர் அவர்களைப் பிரிக்க சில சதிகளைச் செய்கிறார். அப்படிப்பட்ட சதியில் ஒன்றுதான் தான் போருக்குச் செல்லும் போது காஞ்சிக் கோட்டையைக் காப்பாற்றும் பொறுப்பை நரசிம்மனிடம் ஒப்படைத்தல். இதன் மூலம் காதலரின் சந்திப்பு துண்டிக்கப்படுகிறது.

பரஞ்சோதி விந்தியமலை நோக்கி பயணிக்க, அவருடன் வந்து சேரும் வஜ்ரபாஹூ என்னும் வழிப்போக்கன், அவருக்குத் தெரியாமல் ஓலையை மாற்றி வைத்து விட்டு பிரிந்து செல்ல, சாளுக்கியரால் சிறை பிடிக்கப்பட்ட பரஞ்சோதியை புலிகேசி முன்பு கொண்டு செல்ல, அங்கு தமிழ் பேசும் மனிதனாக வரும் வஜ்ரபாஹூ ஓலைச் செய்திகளை மாற்றிச் சொல்லி பரஞ்சோதியைக் காப்பாற்றுகிறார். பின்னாளில்தான் தெரிகிறது அந்த வஜ்ரபாஹூ யார் என்பது... அது தெரியும் போது வியப்புக்குள்ளாகிறார்.

சிவகாமி காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள். தன்னைப் பார்க்க வராமல் இருக்கும் இளவரசன் மீது கடுங்கோபம் கொள்கிறாள்.

தனது தோழி கமலியைக் காண அவள் இல்லம் செல்கிறாள். அவளின் கணவன் கண்ணன்தான் நரசிம்மரின் ரத சாரதி. அவர்கள் மூலம் சில விபரங்களை அறிகிறாள். இளவரசனைச் சந்திக்கும் வாய்ப்பு இரண்டொரு தரம் கிடைத்தாலும் பேசமுடியாமல் தவிக்கிறாள்.

படை திரட்டி வந்த புலிகேசியை  தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார் மகேந்திரர்... அவருக்கு உறுதுணையாய்  இருக்கிறார் அவரின் படைத்தலைவரான பரஞ்சோதி. மன்னன் இல்லாத காஞ்சியைத் தாக்க பாண்டியரும், சாளுக்கியருக்கு உதவ நினைக்கும் சிற்றரசனான துர்வீநீதனும் படையுடன் வருகிறார்கள்.

தனக்குத் துணைக்குத் துணையாய் நின்ற பரஞ்சோதியை நரசிம்மனுக்கு உதவ, காஞ்சிக் கோட்டையைப் பலப்படுத்த அனுப்பி வைக்கிறார் மகேந்திரர். காஞ்சிக் கோட்டை மதில்களையும் கதவுகளையும் எதிரி அவ்வளவு சீக்கிரம் உடைத்து உள் நுழையாத வண்ணம் நரசிம்மர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து பரஞ்சோதிக்கு வியப்பாய் இருக்கிறது.

துர்விநீசன் மீது படையெடுத்துச் செல்லும்படி தனது அன்புக்கு பாத்திரமான ஒற்றன் சத்ருக்னன் மூலமாக ஓலை அனுப்புகிறார் மகேந்திரர். சிவகாமியின் பிரிவு கொடுத்த வலியை போக்கும் மருந்தாய் வந்த பரஞ்சோதியாருடன் போருக்கு கிளம்புகிறார் நரசிம்மர்.

இதற்கிடையே நாகநந்தியால் மனம் கலைக்கப்பட்ட சிவகாமி, நாட்டியப் பேரொளி ஆகும் ஆசையில் அவருடன் கிளம்பிச் செல்ல, எதிரே படைகள் வருவதைப் பார்த்து ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள். துர்விநீசன் படை புறமுதுக்கிட்டு அக்கிராமத்தின் வழி ஓட, அவனை விரட்டி வரும் நரசிம்மரும் பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்து விடுகிறார்கள். இருப்பினும் அந்தச் சூழலில் அவளுடன் ஆற அமர காதல் பேசமுடியாமல் கிளம்பிச் செல்கிறார்கள்.

பெரும் மழை பெய்கிறது... நாகநந்தியால் ஏரி உடைக்கப்பட, வெள்ளம் கிராமத்துக்குள் வருகிறது. அங்கு தத்தளிக்கும் சிவகாமியையும் ஆயனரையும் நரசிம்மர் வந்து காப்பாற்றுகிறார். துர்வநீசன் கைது செய்யப்பட்ட அதே வேளையில் நாகநந்திக்கும் வலை விரிக்கப்பட, அதில் மாட்டிக்கொள்ளும் நாகநந்தியும் சிறையிலிடப்படுகிறார்.

காஞ்சியை முற்றுகையிட்டு காரியம் ஆகவில்லை என்பதாலும் தங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்துவிட்டபடியாலும் பாண்டியனுடன் நட்பு பாராட்டுவது போல் பாராட்டி உணவைப் பெறும் புலிகேசி, மகேந்திரருக்கு சமாதானத் தூது விடுகிறான். அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

புலிகேசியின் காஞ்சி விஜயத்திற்கு  முன் நரசிம்மரை பாண்டியர் மீது போர் தொடுக்க அனுப்பி வைத்து விடுகிறார் மதியூகியான மகேந்திரர். காஞ்சி வரும் புலிகேசி நரசிம்மர் எங்கு சென்றார் என்பதை அறிய ஆவல் கொள்கிறார்.  சபையில் நடமான அழைத்து வரப்படும் சிவகாமியை ரசிக்கிறார்.  நாகநந்தி சிறையில் இருப்பதையும் அறிகிறார். இறுதியில் விடைபெற்றுச் செல்லும் போது வஜ்ரபாஹூ யாரென்பதையும் மகேந்திரனால் அறியும் புலிகேசியின் மனதுக்குள் நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கிறது.

கமலி வீடு செல்லும் சிவகாமிக்கு மன்னர் தங்களை ஏதோ திட்டத்துடன் கோட்டைக்குள் வைத்திருப்பதாகத் தோன்ற, கமலி உதவியுடன் சுரங்கப்பாதை வழியாக ஆயனருடன் தப்பி வெளியில் வர சாளுக்கிய வீரர்களால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். 

சிற்பிகளை காலை வெட்ட வேண்டும் என்ற புலிகேசியின் ஆணைக்கிணங்க, ஆயனருக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சமயத்தில் மன்னனால் விடுவிக்கப்பட்ட நாகநந்தியால் காப்பாற்றப்பட, சிவகாமி மட்டும் கைதியாக வாதாபி செல்கிறாள். மலையிலிருந்து தள்ளிவிடப்பட்ட ஆயனர் காலொடிந்து வீட்டில் கிடக்கிறார்.

படைகள் திரும்புவதைப் போல் பாசாங்கு செய்து கொஞ்சப் பேருடன் காஞ்சி மீது தாக்குதல் நடத்தப்பட, அந்தத் தாக்குதலில் மகேந்திரன் காயப்படுகிறார். 

பாண்டியனை வென்று திரும்பும் நரசிம்மர், சிவகாமியை சிறை மீட்கும் பொருட்டு வாதாபி சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். அதற்குக் காரணம் என்னவென்றால் சிவகாமியின் சபதம்... ஆம் வாதாபியை தீக்கிரையாக்கி... புலிகேசியை கொன்றால்தான் நான் சிறையிலிருந்து வருவேன் என்று சபதம் செய்திருக்கிறாள் சிவகாமி... தன் நாட்டு மக்கள் கைதியாய் படும் துன்பத்தின் காரணமாகவும் புலிகேசியை அவமதித்த குற்றத்துக்காக தான் தெருவில் நடனமாட நேர்ந்த காரணத்தாலும் இவ்வாறு சபதம் செய்கிறாள்.

சிவகாமியை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்றும் சாகும் முன்னர் மகனின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்றும் மகேந்திரர் சொல்ல, அதன்படி பாண்டியனின் மகளான வானமாதேவியை மணம் முடித்துக் கொள்கிறார் நரசிம்மர்... அவரின் காதல் இத்துடன் முற்றுப் பெறுகிறது.

காலம் மெல்ல நகர்கிறது... மகேந்திரரின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மர் மன்னராகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிறார். ஆயனச் சிற்பி வீட்டுக்கும் அடிக்கடி குழந்தைகளுடன் சென்று வருகிறார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் படை திரட்டி, நண்பனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியுடன் வாதாபி நோக்கி பயணிக்கிறார்.

நாகநந்திக்கு சிவகாமி மீதான காதல் இன்னும் கூடுதலாகிறது.

புலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையில் சிறிதாய் ஏற்பட்ட பிரச்சினை முற்றி, அஜந்தா கலாச்சார விழாவுக்கு செல்லும் இடத்தில் வெடிக்கிறது.

பல்லவர் வாதாபி நோக்கி வருவதைச் சொல்லாமல் மறைத்த நாகநந்தியை விரட்டிவிடுகிறார் புலிகேசி.

வாதாபி நோக்கி நரசிம்மன்...

அஜந்தாவில் புலிகேசி...

அடிபட்ட புலியாய் நாகநந்தி....

காதலன் வருவான் என் சபதம் நிறைவேறும் என சிவகாமி...

யானைகளுக்கு வித்தியாசமாய் பயிற்சி அளித்து நரசிம்மருடன் போர்க்களம் வரும் இலங்கை இளவரசன்...

உதவிக்கு வருகிறேன் என்று சொல்லி காஞ்சி வரை வந்து அக்கா வீட்டில் தங்கியிருக்கும் பாண்டியன்...

இப்படி நிறைய மனிதர்களுடன் நகரும் கதையில் நரசிம்மன் வெற்றிவாகை சூடினானா...? 

சிவகாமியின் காதல் என்னாச்சு...? 

புலிகேசியின் மரணம் எப்படி நிகழ்ந்தது...? 

நாகநந்தி என்ன ஆனார்...? 

வாதாபியில் ரிஷபச் சின்னம் மாற்றப்பட்ட சிங்கக்கொடி பறந்ததா...? என்பதை சுவராஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

சபதத்தைத் தொடர்ந்து கனவில் பயணிக்கிறேன்... சபதத்தில் மகேந்திரர் பல வேஷங்கள் போட்டு நாட்டைக் காத்தது போல் கனவில் மாமல்லனான நரசிம்மர், பல வேஷம் போட்டு சோழ தேசத்தைக் காக்கிறார்... சுவராஸ்யமாய் மாமல்லர், குந்தவி, விக்கிரமன், பொன்னன், வள்ளி, மாரப்பபூபதி என கதை பயணிக்கிறது முன்னூறு பக்கங்கள் கடந்து விட்டேன்.

அப்புறம்... சிவகாமி சபதத்தை வாசித்த வகையில்

கதையில் நம்மைக் கவர்வது மகேந்திரரா... நரசிம்மரா...?

நம் மனம் பயணிப்பது பரஞ்சோதியுடனா... நரசிம்மருடனா...?

சிவகாமியின் காதல்...

நரசிம்மனும் சிவகாமியும்...

இப்படி நிறையத் தலைப்பில் நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று தோன்றுகிறது.... பார்க்கலாம்.

மிகப்பெரிய கதை... கதைச் சுருக்கமாய் கொடுப்பதென்பது மிகவும் கடினமே...  பதிவின் நீளம் கருதி முக்கால்வாசி கதைக்குள்தான் பயணித்திருக்கிறேன்.

வாசிப்பில் அலுப்பு ஏற்படாத கதை...

முடிந்தால் வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017திருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை

பாக்யாவில் வெளிவந்த குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்களின் தொடர்கதையான 'திருமண ஒத்திகை', அவரின் இரண்டாவது நாவலாக சமீபத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களால் வெளியீட்டு விழாக் கண்டது. அந்த நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கு பகிர்ந்திருக்கிறேன். வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.

****

ர் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களோடு நட்பு கொள்வதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியமுண்டு. நான் இங்குதான் பிறந்தேன்... இப்படித்தான் வளர்ந்தேன் என்று சொல்பவர்கள் மீது தானாகவே அன்பு ஒட்டி கொள்கிறது. அப்படித்தான் குடந்தையூர் தளத்தில் எழுதி வரும் ஆர்.வி.சரவணன் அண்ணனும் எனக்குள் ஒட்டிக் கொண்டார். 

உன்னோட எழுத்தை ஆயிரம் பேர் வாசிக்கலைன்னு நினைக்காதே... வாசிக்கிற பத்துப் பேரை அது தனக்குள்ள இழுக்குதா... அதுதான் எழுத்து... அப்படியான எழுத்து  உங்கிட்ட இருக்கு... அந்த எழுத்து எப்பவும் வாழும்... அதனால புகழுக்காக எழுதாமல் ஆத்ம திருப்திக்காக எழுது' அப்படின்னு என் நண்பன் சொல்லுவான். அப்படியான எழுத்துக்கு சொந்தக்கார்ர் இவர். ஒரு சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதும் போது அதன் காட்சிகளை திரைக்கதையாக விரிக்கும் தனித்தன்மையை இவரின் எழுத்தில் பார்க்க முடியும்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும்' என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.

அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும் ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும் மாப்பிள்ளையும்  செல்போனில் மணிக்கணக்கில்  பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ்அப்முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.

திருமண ஒத்திகைஎன்னும் இந்த நாவலை முக்கோணப் பார்வையில் எழுதியிருக்கிறார். முதல் ஐந்து அத்தியாயங்கள் நாயகன் வருணின் பார்வையில், ஜாலியான குடும்பம்... இளமைத் துள்ளல்... நட்பு... நிச்சயித்த பெண்ணுடன் சந்தோஷமாக நகரும் நாட்கள்... முகநூல் அரட்டை என பிரச்சினைகள் இல்லாமல் ஜாலியாகப்  பயணிக்கிறது. அடுத்த ஐந்து அத்தியாயங்கள் நாயகி சஞ்சனாவின் பார்வையில், சந்தோஷம் மற்றும்  பெண் குழந்தையைக் காரணம் காட்டி மச்சினியை அடையத் துடிக்கும் அக்கா கணவரினால் ஏற்படும் இன்னல்கள் என நகர்கிறது. பதினோராவது அத்தியாயத்திலிருந்து ஆசிரியரின் பார்வையில், சஞ்சனாவின் அக்கா கணவன் விஜயனை வருண் பார்த்துப் பேசிய பின் வரும் நிகழ்வுகள்நம்மை இப்படியா... அப்படியா... என்று யோசிக்க வைத்துபரபரப்பான  இறுதிக்கு நகர்த்தி  கதையோடு ஒன்றி நம்மை உட்கார வைக்கிறது.  குறிப்பாகசம்பந்திகளின் சூடான போன் உரையாடலும் அதே நேரத்தில், காதலர்களின்  கோபம் தீர்ந்த சந்தோஷங்களும் என மாற்றி மாற்றி பயணிக்கும் அந்த இறுதிக் கட்ட பரபரப்பைஅவரது முதல் நாவலான 'இளமை எழுதும் கவிதை நீ' யின்  இறுதிக்காட்சிகளை போன்றே மிக அருமையாக கையாண்டிருக்கிறார்.

மிக நல்ல கதை, திரைக்கதையாய் விரியும் காட்சிகள் என பயணித்து இறுதிக் காட்சியில் வருண் கோபித்துக் கொண்டு சென்ற பின் வந்தனா அவனைத் தேடி எப்படி சரியான இடத்திற்கு வந்தாள் என்பது மட்டுமே சற்று இடறல்... அந்த இடத்தில் தமிழ் திரைப்பட இறுதிக் காட்சி போல கதை அமைந்து விட்டது என்பதைத் தவிர மற்றபடி குறை சொல்ல முடியாத நிறைவான கதை. 

தொடர்கதையாக பாக்யா வார இதழில் வந்த 'திருமண ஒத்திகைஇப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. நிச்சயமாக இது படிப்பவர்களின் மனதைக் கவரும். எனது முதல் அணிந்துரையை நான் நேசிக்கும் ஒருவரின் நாவலுக்கு எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அணிந்துரை எழுதச் சொன்ன குடந்தையூர் ஆர்.வி.சரவணன் அண்ணனுக்கு என் நன்றி.

தொடரும் எழுத்துப் பயணம் பல வெற்றிகளை அவருக்கு விருதாக்க வாழ்த்துகிறேன். 
***
தங்களின் படைப்புக்களை படித்து விடுகிறேன் நட்புக்களே... கருத்து இடுவதில் என் கணிப்பொறியில் இருக்கும் பிரச்சினை தீரவில்லை. அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள்... வேலைப் பளூவும் கூடுதல்... அங்கு வலைப்பூ திறக்கவும் வாய்ப்பு இல்லை... இல்லையென்றால் அங்கிருந்து கருத்து இடலாம்... கருத்து இடவில்லை என்று நினைக்க வேண்டாம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையோடு....

நன்றி.
-'பரிவைசே.குமார்.

சனி, 2 டிசம்பர், 2017பயணங்கள் முடிவதில்லை...

யணங்கள் முடிவதில்லை...

பயணங்கள் எப்போதும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பயணிக்கும் மனநிலை வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் பயணம் மாறுவதில்லை. அதுவும் நல்ல நட்புக்களுடன் பயணிக்கும் சுகமே அலாதியானதுதான். தற்போதைய மனநிலையில் அடிக்கடி பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகச் சிறந்த மருந்தாய் மனசுக்கு... 


எனது இந்தப் பயணம் பள்ளிக்கு மஞ்சப் பைக்குள் சிலேட்டையும் குச்சி டப்பாவையும் வைத்துக் கொண்டு இடுப்பில் சரியாக நிற்காத டவுசரை இழுத்து பிடித்துச் சொருகி, தேவகோட்டை நோக்கி மூன்று கிலோ மீட்டர்கள் என்னைப் போல் புத்தகப் பை சுமந்த அக்காவுடனும் உறவுகளுடனும் நடக்க ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் மேகம் கருத்தால் போதும் கிராமத்துப் பிள்ளைகள் வீட்டுக்குப் போகலாம் என்ற அறிக்கை வர, முகத்தில் அடைமழையெனப் அடித்து ஆடும் சந்தோஷத்துடன் புத்தக மூட்டையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு சத்துணவுக்காக கொண்டு செல்லும் தட்டை மட்டும் எடுத்து கையில் பிடித்துக் கொண்டு மழைத் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடுவது போல் நடக்க ஆரம்பிப்போம்... 

இந்தத் தட்டு மழை வந்தால் குடையாகும்... இல்லையேல் தாளம் போடப் பயன்படும்.  எது எப்படியோ மகிழ்ச்சியின் மழை எங்களுக்குள் அடித்தாடும்... ஆவாரஞ்செடிகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் ரோடில்லா ஒற்றையடிப் பாதையில் ஓடி வரும் தண்ணீருடன் கால்கள் கொஞ்சிக் கதை பேச, நனைந்து செல்வதில் ஒரு சுகமே.

பள்ளிக் காண நடை பயணம் ஏழாப்பு வரைக்கும் தொடர்ந்தது.  கை, கால் முட்டிகளில் வீரத் தழும்புகள் ஏற்பட ஆறாப்பு, ஏழாப்பில் சைக்கிள் பழகி, கவட்டைக் காலில் இருந்து சீட்டுக்கு மாறி கை விட்டு ஓட்டும் அளவுக்கு வந்ததால் வீட்டில் நீ சைக்கிளில் செல்லலாமென கொடுத்த சான்றிதழினால் அப்பாவின் அட்லஸ் சைக்கிள் எட்டாப்பு படிக்கும் போது என்னுடன் தோழமையானது. 

கல்லூரி வரைக்கும் இவரே பயணத்தின் நண்பனாய்... கல்லூரியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி என இவரோடு பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை. மறுநாள் கே.வி.எஸ். சார் எங்க போனீங்க எல்லாரும்ன்னு தண்ணி காட்டுனதெல்லாம் பயணத்தின் சுவராஸ்யம்தானே. படிக்கும் போது நண்பன் புத்தக ஏஜெண்டாக இருந்ததால் செம்மலரும் தாமரையும் சுபமங்களாவும் சுமந்து தேவகோட்டையில் வீதிவீதியாக பயணப்பட்டிருக்கிறோம்.

பள்ளிப் பயணம் ஒரு புறம் இருக்க, காலையில் குடி தண்ணீருக்கான பயணமாய் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு முருகன், சேகர் சித்தப்பு, சரவண சித்தப்பு, தம்பி சரவணன், சக்தி மச்சான், என் தம்பி என எல்லாருமாய் ஒவ்வொரு செங்கற்காலவாயாக அழைந்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த அந்த தேடுதல் பயணம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்... 

ஆம்... நாங்கள் செல்லவில்லை என்றால் அக்கா ரெண்டு மூணு கிலோ மீட்டர் போய் அலைந்து திரிந்து தண்ணீர் தூக்கி வர வேண்டும்.  மூன்று குடங்கள் வரை சைக்கிளில் கட்டி வருவதுண்டு. இந்தக் கிணற்றில் தண்ணீர் கிடக்குமென சென்றால் அங்கு எருங்கஞ்செடி நீந்தி நம்மைப் பார்த்துச் சிரிக்கும். அப்படியும் தண்ணீர் எடுக்க விட்டவர்கள் சிலரும் உண்டு. சில நாட்களில் அதிகாலையிலேயே செல்வதும் உண்டு.

கல்லூரியில் படிக்கும் போது திருவாடானையில் நண்பன் ஆதியின் இல்லத்தில் தங்கி இராமேஸ்வரம் பயணம்... இரண்டாமாண்டு படிக்கும் போது மைசூர், பெங்களூர் பயணம்... கணிப்பொறி நிலையம் வைத்திருந்தபோது நண்பர்களுடன் கம்பம், தேனி, கேரளாவென ஒரு திரில்லிங் பயணம்... பள்ளிகளில் கணிப்பொறி வகுப்பெடுக்க சிபியூவையும் மானிட்டரையும் வண்டியின் முன்னே வைத்து இருபது, இருபத்தைந்து கிலோ மீட்டருக்குமேல் நானும் நண்பனும் பயணித்த பயணம்... பழனிக்கு நடைப் பயணம்... திருச்செந்தூர் நடைப் பயணம்... சபரிமலை பயணம்... இப்படியான பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பெரும்பாலான பயணங்கள் திருமணத்திற்கு முன்னே நிகழ்ந்தவை என்பதால் மனைவிக்கு என்மேல் கோபம் உண்டு. ஆம் திருமணத்திற்குப் பின்னர் சில பயணங்கள் தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படியான பயணங்கள் எதுவும் நிகழவில்லை. ஒவ்வொரு முறையும் எங்காவது செல்ல வேண்டுமென நினைப்புடன் சென்றாலும் ஒரு மாதம் என்பது வீட்டில் செலவழிக்கவே பத்துவதில்லை. எங்களின் பயணம் பெரும்பாலும் தேவகோட்டை-மதுரைக்கானதாய் மட்டுமே இருந்து விடுகிறது. இந்த முறைதான் விண்ணப்பங்கள் மும்முனைத் தாக்குதலாக சேலம் அருகே இருக்கும் தீம்பார்க் சென்று வந்தோம்.


என்னோட பயணங்கள் எல்லாமே நண்பர்களால் நிரப்பப்பட்ட பயணங்களே... ஆமா இப்ப எதுக்கு பயண புராணம் என்பதாய் உங்கள் கேள்வி இருக்கலாம். நேற்றைய பயணத்தின் அனுபவமே பயணத்தைப் பற்றிப் பேச வைத்தது. ஆம்... இங்கு வந்து இந்த ஒன்பது வருடத்தில் முதல் நான்கு வருடங்கள் அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் சென்று வந்தோம் அது உறவுகள் சூழ்ந்த பயணம். பின்னர் எந்தப் பயணமும் இல்லை... இப்போது சுபஹான் பாய் அவர்களாலும் கனவுப்பிரியன் அண்ணனாலும் மனதுக்கு சந்தோஷமான பயணங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

அப்படியான ஒரு பயணம்தான் நேற்றைய விடுமுறைநாள் அனுபவமாய்... அபுதாபியில் இருந்து அலைன் நோக்கி...

பயணத்தின் போது வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்... அப்படியான அனுபவம் நேற்றைய ரெண்டு மணி நேர பிரயாணத்தில்... தகிக்கும் பாலை வெயிலில் நாணிச் சிரிக்கும் மணலைப் பார்த்து ரசித்தபடி... இசைக்கும் ராசாவின் பின்னோடு பயணித்த நாட்களாய் நேற்றைய நாள் அமைந்தாலும் வாசிப்பின் ருசியும் கூடுதலாய்... 

என் செல்போனில் 'பார்த்தீபன் கனவு' கிடக்க, ரெண்டு மணி நேரத்தில் பொன்னனோடும் மாமல்லனோடும் பயணிக்கலாமென நினைத்துச் சென்றால் வாசிக்கக் கிடைத்தது தோழி ஒருவரின் முதல் கவிதைத் தொகுப்பான 'கனலி'. சின்னச் சின்ன கவிதைகள்... பக்கம் நிரப்பாமல் ஒன்றும் இரண்டுமாய் ஆக்கிரமித்திருக்க... வேகமாய் பக்கங்கள் நகர்ந்தன. கனலி நெருப்பாய்த் தகிப்பாள் என்று வாசிக்க ஆரம்பித்தாள் வரிக்கு வரிக்கு காதலில் கசிந்துருகியிருக்கிறாள். புத்தகம் பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம்... நாம் பயணத்தைத் தொடர்வோம்.

வெள்ளைப் பாலை மணலை தன் மேல் போர்த்தியிருக்கும் அபுதாபி கடந்து செம்மண் பூமியான எங்க ஊருக்குள் பயணிப்பது போன்றதொரு அனுபவத்தைக் கொடுத்தது சிவந்த மண் பாலையுடன் சிரிக்கும் அலைன்.

அங்கு போய்ச் சேரும் போது ரெண்டு மணியை நெருங்கிவிட காத்திருந்த காளிதாசர் பிரபுவும் கனவுப்பிரியன் அண்ணனும் எங்களுடன் இணைய, முழுக்கோழியும் பிரியாணியும் பிரபு அவர்களின் பிரியமாய் வயிற்றை நிரப்ப, நிரம்பிய வயிற்றுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம் நானும், அண்ணன் கனவுப் பிரியனும் ரவியும்... 

அதற்குள் பிரபு அவர்கள் நண்பரின் காரை சுபான் அவர்களும் நண்பர்களும் சென்று எடுத்து வந்தார்கள். பின்னர் பயணப்பட ஆரம்பித்தோம். அலைன் ஓயாசிஸில் கொஞ்ச நேரமே நடை... அதற்குள் கேமராக் கவிஞர் சுட்டுத் தள்ளிய போட்டோக்கள் அதிகம்... வயிற்றுக்குள் சென்ற கோழி அடைக்கத்திய கோழி போலும்... படுத்துக் கொண்டு எழுந்து நடக்க யோசிக்க... மலைப்பாம்பாய் உடலை திருகி... சுகம் காண முடியா நிலையில் நடையைச் சுருக்கி மீண்டும் காருக்குள் ஏறி ராசாவோடு பயணித்தோம். மெல்லக் குளிர் காற்று தாலாட்ட ஆரம்பித்தது.

ஷாகிர் ஏரியை நோக்கி ஒரு நீண்ட பயணம்... சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் போட்டோ அரங்கேற்றம் நிகழ்த்த நினைத்து விரைவுப் பயணத்தின் முடிவில் கொஞ்சமே தண்ணீர் நிறைந்திருந்த ஏரியை ரசித்தபடி... சூரியன் அஸ்தமனம்... மலைகளின் வனப்பு... நீரில் நீந்தும் நீர்க்கோழி... நாரைகள்... சூரியனைக் கடக்கும் கார்கள்... சிவப்பு ஒளியில் மிளிரும் பிம்பங்கள்... நிலவின் ரம்மியத்தில் சிலிர்த்துச் சிரிக்கும் மணலின் பிம்பங்கள் என ரசனையாய் ரசித்து போட்டோக்களில் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் கதை பேசி... மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கனவுப்பிரியன் அண்ணனின் கூட்டுக்குள் வந்து கதை பேசி... அபிராமி அந்தாதி, கண்ணப்பர் கதை, ரஜினி, கமல் என எல்லாம் பேசி...  சிரித்து... கோழியுடன் புரோட்டாவும் சப்பாத்தியும் பழங்களும் சாப்பிட்டுப் படுத்தோம் நிறைந்த வயிறும் நிறைவான மனதுமாய்...

இந்தப் பயணத்தில் அறிந்த ஒன்று.... பிரபு நிறைய விஷயங்களை உள்வாங்கி வைத்திருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க் என்பது... எத்தனை விஷயங்கள்... அருமையாக, விளக்கமாகப் பேசுகிறார்... உண்மையில் வியந்தேன்.

காளிதாசர் என்னும் கவிஞராய் மட்டுமே அறிந்திருந்தவர் கலந்து கட்டி இலக்கியத்தில் அடித்தாடுகிறார்... விளக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளில் காளிதாசராகத் ஜொலித்தார்.  இன்னும் பேச வேண்டும்... இல்லை இல்லை பேசச் சொல்லி கேட்க வேண்டும் மீண்டும் ஒரு விடுமுறை தினத்தில்.. நிறைய... நிறைய.... ரொம்ப விஷயம் கறக்கலாம் இந்த ஆளிடம்... பல சிறுகதைகளுக்கான கரு அவரிடம் இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்குத் தயாராகி மீண்டும் ஒரு பயணம்... ஜெபல் ஹபீத்தை நோக்கி... மலரும் சூரியனை மறைந்திருந்து படம் பிடிக்க...

ஒரு கரக் டீயைக் குடித்து விட்டு மலையேற ஆரம்பித்தோம்.... பதிமூன்று கிலோமீட்டர்... சில பல ஹேர்பின் வளைவுகளுடன்... நெருக்கமாய் சிரிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில்... பகலெனத் தெரிகிறது மலையின் ஊடான பாதை... மேலே ஏற... ஏற... இந்தப் பனியிலும் குளிரிலும் சூரியனைக் காண அங்கு இரவே வந்து தங்கியிருந்த அரபிகளும்... பிலிப்பைனிகளும்... நம்மவர்களும்...  எழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள்.


கம்பமொட்டு வழி கேரளாவுக்குச் சென்ற போது சரியான மழை... டாடா சுமோவில் நண்பர்களுடன் பயணம்... இரவாகி விட மலையில் இருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறோம்... மாலையில் அடித்துப் பெய்த மழையின் மிச்சங்கள் ரோடெங்கும்... கொண்டை ஊசி வளைவுகளில் சோபையாய் எரியும் தெரு விளக்குகள்.... 

தங்க நல்ல இடம் தேடி... அருகிருக்கும் ஊர் நோக்கி மெல்ல நகர்கிறது சுமோவை நண்பர் ஓட்டுகிறார்... ஓரிடத்தில் மொத்தமாய் மூடுபனி (Mist) வந்து வண்டியின் முன்னே அமர, வழி தெரியாத நண்பன் திணறி, ஒண்ணுமே தெரியலை என வண்டியை ஓரமாக நிறுத்த, ஹெட்லைட் எரிவோமா வேண்டாமா என யோசித்து ஓளிவிட, மெல்ல வளைவில் வந்து திரும்பி எங்களைக் கடக்கிறது அரசுப் பேருந்து.

கொஞ்ச நேரத்தில் மூடுபனிக்கு மூடு வந்து மெல்ல வழிவிட வண்டியை எடுத்தால் அந்தத் திருப்பத்தில் எங்கள் வண்டியோ நேரே செல்வதற்கு ஆயத்தமாய்... மூடுபனியில் நண்பன் மெல்லச் செலுத்தியிருந்தால் மலையை ரசித்தபடி மெல்ல கடந்திருப்போம் வாழ்வின் இறுதி நொடிகளை.... அத்துடன் நண்பனுக்கு பயமெடுக்க டிரைவர் சீட்டை மற்றொருவர் ஆக்கிரமித்தார். 

அப்படியெல்லாம் பயம் காட்டாமல் பகலில் பயணிப்பது போல் விளக்குகள் ஜொலிக்க, ஒரு மலை முகட்டில் பலர் கேமராவுடன் காத்திருக்க, சுபான் அவர்களும் காலைக் கதிரவனின் கவிதையை எழுத ஆயத்தமானார். நம்ம அரசியல்வாதிகள் பொதுக்கூட்டத்துக்கு வருவது போல் பகலவனும் ரொம்பச் சோதித்தான். அதுவரை ரசனையாய் அருகில் பிலிப்பைனிகள் போட்டோ எடுக்கவில்லை என்பதையும்... அவர்களின் பாடலுக்கு பிரபு லாலலா... லல... லாலல்லா... பாடவில்லை என்பதையும் சொல்ல வேண்டியது கடமை.

சூரியன் மெல்ல மேலெழும்பி வர, போட்டோக்கள் சுட்டுத் தள்ளப்பட... எல்லாவற்றையும் மலை முகட்டில் படுத்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்... அவரும் சூரியனாருக்குத்தான் காத்திருந்தார் போல.... ஆம் மலை முகடு ஒரு முதியவனின் முகமாய்....

மீண்டும் இறங்கி... டீயுடன் இட்லி பார்சலும் பெற்று... கார் கொடுத்த நண்பருடன் பேச ஆரம்பிக்க அவரோ நம்ம பரம்பக்குடிக்காரர்.... அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தவர்... குருகுலம் பற்றிப் பேசினார். கண்ணதாசன் பற்றியும் பேசினோம்.


மீண்டும் காரின் அருகில் நின்று பாலஸ்தீனம், சிரியா, நபிகள், சதாம் உசேனின் கடைசிக் கவிதை, செங்கிஸ்கான் என ஒரு குட்டி இலக்கிய அரட்டையுடன் பிரபுவை கார் கொடுத்த நண்பருடன் அனுப்பிவிட்டு கனவுப்பிரியன் அண்ணன் அறைக்குத் திரும்பி குளித்து... இட்லியை சாம்பாரில் நனைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் அபுதாபி நோக்கி....

வரும் வழியெங்கும் சுபான் அவர்களின் கேமராவுக்கு நல்ல தீனி கிடைத்துக் கொண்டிருந்தது.... அறைக்குத் திரும்பிய போது நண்பரின் கை வண்ணத்தில் சிக்கன் வாசம் வரவேற்றது.

மிகச் சிறப்பானதொரு பயணம் நண்பர்களாலேயே சாத்தியப்பட்டது.

-'பரிவை' சே.குமார்.

புதன், 29 நவம்பர், 2017வாசிப்பனுபவம் : அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

Image result for அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்

'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'-

பாலகுமாரன் அவர்களின் இரு வரலாற்றுக் குறுநாவல்களின் வாசிப்பிற்குப் பிறகு வரலாற்றில் இருந்து நிகழ்காலத்துக்கு மாறலாமே என தேடி எடுத்தவைகளில் மனம் ஒட்டாதபோது கிடைத்தது ஜெயகாந்தனின் இக்கதை. 

தலைப்பைப் பார்த்ததும் இது அவரின் சிறுகதைத் தொகுப்பு போல என்ற நினைப்போடுதான் தரவிறக்கினேன். கதைகளை வாசிக்கலாமெனத் திறந்தபோதுதான் தெரிந்தது இது ஒரு நாவல் என்பது. தினமணிக் கதிரில் தொடராக வந்ததென முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

'இந்த நேரத்தில் இவள்', 'பாட்டிமார்களும் பேத்திமார்களும்', 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்' என இந்த மூன்று கதைகளும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல காலத்து மனிதர்களைப் பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் ஓர் அனுபவமே என்றும் ஒரு கதையில் இளமையாகவும் இன்னொரு கதையில் வயோதிகனாகவும் இருப்பதில் கதாநாயகப் பண்பு குறைந்து விடுவதில்லை. அதை இக் கதைகளில் மீண்டும் உணர்ந்தேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

கதையின் நாயகன் அப்பு.

கிராமங்களில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்தவன்... படிப்புக்கும் அவனுக்கும் வெகுதூரமாகி ரொம்ப நாளாச்சு... அரும்பு மீசை லேசாக முளைக்கத் தொடங்கும் பருவம்... யாருக்கும் அடங்கா காளை... ஊருக்குள் எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வதைப் பற்றிக் கவலைப்படாதவன். தாத்தாவின் நினைவாக வைத்த பெயர் மகுடேசன்.

இவனே நிறைந்து இருக்கிறான் கதை முழுவதற்கும்... ஆகவே இவன் கதையின் நாயகனாய் நம் கண்ணில்.

அம்மாக்கண்ணு... அப்புவைப் பெற்றெடுத்த மகராசி... ஆறு குழந்தைகளை அள்ளிக் கொடுத்துவிட்டு இந்தத் தறுதலையை மட்டும் வச்சிக்கிட்டு படாதபாடு படுறான்னு ஊரார் வருத்தப்படும் உத்தமி. காலையில் வைக்கும் பொட்டு மறுநாள் குளிக்கும் வரை வேர்வையிலும் முகம் கழுவலிலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்பதே இவளின் சிறப்பு.

வசதியான குடும்பமென சிறுவயதில் வாக்கப்பட்டு வந்து வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் கணவனும் ஓடிவிட... தாங்கள் வாழ்ந்த வீடு வேறொருவர் வசம் இருக்க... அந்த வீட்டினை ஒட்டி வாரமாக இறக்கப்பட்ட கீற்றுக் கொட்டகையில் அப்புவோடு வாழும் நாற்பது வயசுக்காரி. வாழ்வின் விரக்தியில் சிரிப்பவள்... 

செங்கோணிக் கிழவன் தோட்டத்துக் கிணற்றில் குதித்துக் குளிப்பதில் பசங்களுக்கு அலாதிப் பிரியம். அது மட்டுமா அங்கிருக்கும் மாங்காய் சாப்பிடுவதிலும்தான். அப்படிக் குளிக்கும் ஒரு தினத்தில் மணியக்காரர் மகன் கிருஷ்ணன் இறந்துவிட, அந்தப் பலி அவனைக் கூட்டிக் கொண்டு போன அப்பு மீது விழுகிறது.

குளிக்கச் சென்று அங்கிருந்து நாடகம் காணச் சென்று இரவில் திரும்பும் அப்பு, கிருஷ்ணனின் சாவை அறியவில்லை. அவனுக்கு அதில் தொடர்பில்லை என்பதை அறிந்து கொண்ட அம்மாக்கண்ணு ஊரார் தன் பிள்ளையை அடித்துக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பச் சொல்கிறாள்.

எங்கே போவேன் என்பவனிடம் உன் அப்பாவிடம் போ என்று சொல்ல, அப்போதுதான் அப்பா இருப்பது அம்மாவுக்குத் தெரியும் என்பதே அவனுக்குத் தெரிய வருகிறது. அப்பாவை அடைய துருப்புச் சீட்டாய் ஓடிப்போன கணவன் எப்போதோ எழுதிய கடிதத்தைக் கொடுத்து அப்பனைத் தேடி கண்டுபிடிச்சிக்க என்றும் சொல்லி அனுப்புகிறாள்.

இரயிலில் பட்டணத்தில் பழ வியாபாரம் செய்யும் முத்து என்பவர் நட்பாக, சென்னையில் அவருடன் தங்கி அப்பாவைத் தேடிச் செல்கிறான்.  கடிதத்தில் இருந்த முகவரியில் இப்போது ஒரு செஞ்சிலுவைச் சங்கம் இருக்கிறது. அப்பா இல்லை... அங்கிருக்கும் ஆபீசரிடம் விபரம் சொல்கிறான். அவனின் பெயர் மகுடேசன் என்றும் அப்பா பெயர் சிங்காரவேலுப் பிள்ளை என்றும் சொல்ல, அந்த அதிகாரி இரண்டு நாளில் வா... விசாரித்துச் சொல்கிறேன் என்கிறார்.

மீண்டும் முத்துவோடு வாசம்... பழக்கடை... முத்துவுக்கு உதவி... தான் வெளியில் செல்லும் போது இவன் கடையைப் பார்த்துக் கொள்வான் என அப்பு மீது முத்துக்கு நம்பிக்கை... அம்மாவுக்கு கடிதம்... முத்துவின் ஊதாரி மகன் அப்புவுடன் கை கலப்பு.... முத்துவின் கோபம்... என நகர்ந்து செல்லும் கதையில் மீண்டும் ஆபீசரைச் சந்தித்து அப்பா இருக்கும் இடம் அறிகிறான்.

அவனின் அப்பா... சிறுவயதில் அவன் செல்லமாக அழைக்கும் அப்பாசாமி... ஊரார் அழைக்கும் சிங்காரவேலுப் பிள்ளை இரவு வாட்ச்மேனாக இருக்கிறார். அவருக்குத் துணையாக காசநோயும்...

அவரைச் சந்திக்க, உடனே அடையாளம் கண்டு அகம் மகிழ்ந்து கொஞ்சி மகிழ்கிறார். இரவில் தன்னுடன் பேசிக் கொண்டிருக்க வரும் நண்பர்களிடம் எல்லாம் மகிழ்வோடு அறிமுகம் செய்கிறார்.

அப்பாசாமியின் சொந்த ஊர்க்காரரும் அவரின் அப்பாவின் நெருங்கிய தோழனுமான சாமியாருக்கு ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாசாமாசம் பணம் கொடுக்க வேண்டும் என்பது மகுடேஸ்வரன் பிள்ளையின் வாக்கு. அந்த வாக்குப்படி பணம் வாங்கி செலவு செய்யும் சாமியார்,  அப்புவை அவன் தாத்தாவின் மறு பிறவி என்று சொல்லி தானும் மகுடேஸ்வரன் பிள்ளையும் அந்தக் கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூர்கிறார்.

அப்பாவுடன் அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல, அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் பார்க்கிறான். அங்கு அவனுக்கு அமுதவல்லி என்ற ஒரு தங்கையும் இருக்கிறாள். அப்புவைத் தன் மகனாகப் பார்க்கும் சிற்றன்னை 'அம்மணி' என்று அப்பாவால் அழைக்கப்படுவதால் அம்மணியம்மாள் என்பது அவள் பெயராக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறான்.

அமுதவல்லி என்ற பெயர்க்காரணத்தின் பின்னே பொன்னம்மாள் அத்தையின் மகள் இருப்பதை அப்பா மூலமாக அறிகிறான். பதினாலு வயதேயான அமுதவல்லியைச் சிங்காரவேலுப் பிள்ளைக்கு கட்டி வைக்க, ஒரு வருடத்தில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு அவள் செத்துப்போக, குழந்தையும் பின்னாளில் செத்துப் போன கதையைச் சொல்லி அதன் பின்னரே அவன் அம்மா அம்மாக்கண்ணுவை கட்டிய கதையை அப்பா சொன்னபோது அவரின் வேதனையையும் உணர்கிறான்.

ஆங்கிலம் பேசும்... ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும்... வெள்ளையருக்கு எதிராகப் பேசும்... தனக்குப் பிடித்த காந்திமதி அத்தை, பொன்னம்மா அத்தை, அப்பாவுடன் பேசாத பெரியப்பா, அப்பா பேச்சைத் தட்டாத சித்தப்பா என அப்பா ஒவ்வொருவரைக் குறித்தும் விசாரித்துக் கதை கதையாய்ச் சொல்வதில் லயிக்கிறான்.

அப்பாவின் பேச்சும் அன்பும் அவர் தங்களை விட்டு ஓடி வந்ததையோ... இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்துவதையோ பெரிதாக எண்ண வைக்கவில்லை. அதனால்  அப்பா மீது அப்புவுக்கு கொஞ்சம் கூட கோபமே இல்லை... மேலும் மேலும் காதல்தான் கூடுகிறது.

படிக்க வைக்கிறேன் என்று சொல்லும் அப்பாவிடம் மறுத்து ஊருக்குப் போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி மனம் மாறி, கட்டிட வேலை நடக்கும் இடத்தில் சித்தாளாய் வேலைக்குச் சேர்ந்து கொஞ்சம் கணக்கு வழக்குத் தெரியும் என்பதால் ஆபீசரின் உதவியாளனாய் இருந்து சம்பாதிக்கும் பணத்தில் அப்பாவின் குடும்பத்துக்கும் கொடுக்கிறான்.

இடையில் அப்பா குறித்து அம்மாவுக்கு கடிதம்... கிருஷ்ணன் கொலையில் அப்புவுக்கு பங்கில்லை என்பதை மணியக்காரர் குடும்பத்தில் கடிதத்தைக் காட்டி அம்மா எடுத்துச் சொல்ல அவர்களும் ஒத்துக் கொள்ளுதல்... வேலை பார்க்கும் இடத்தில் எல்லாரிடமும் நல்ல பேர்...  இழந்த சொத்த மீட்க வழக்குத் தொடுக்க நினைக்கும் சித்தப்பா... என கதை நகர்கிறது.

அப்பாவுக்கு ஒரு ஆபரேசன் செய்ய வேண்டிய சூழல்... மருத்துவமனையில் அனுமதி... அந்தச் சமயத்தில் ஒரு வார விடுமுறை நாளில் அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போகிறான் அப்பு, அவனுடன் அம்மா இல்லாத, தன்னுடன் வேலை பார்க்கும் நண்பன் மாணிக்கமும் செல்கிறான். அம்மாவின் அன்பையும் கிராமத்து வாசனையையும் நுகர...

ஊரில் அம்மணி அம்மாளின் பெரியம்மா மீன்காரி வெள்ளையம்மாளைப் பார்க்கிறான். அவளின் வீட்டுக்கே சென்று பாட்டி என்று அழைக்கிறான். அவள் அவனின் அப்பாவுடன் அம்மணி அம்மாள் சென்ற கதையைச் சொல்லி, மகளுக்கு கொடுக்கச் சொல்லி கம்மலைக் கழற்றிக் கொடுக்கிறாள்.

உங்கப்பா உங்கம்மாவை விட்டுப் போக இந்த அம்மணியம்மாள்தான் காரணம் என மாணிக்கம் சொல்ல, இருக்கலாம் அதில் நமக்கென்ன சம்பந்தம் என்று சொல்லி அப்பாவை எப்பவும் போல் மனசுக்குள் உயர்வாய் வைத்திருக்கிறான்.

அப்பாவுக்கு ஆபரேசன் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் அம்மா அவனுடன் வர மறுக்கிறாள். காந்திமதி அத்தை நானும் வர்றேன்னு சொல்லி கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லைன்னு சொல்ல, அவன் மேல எனக்கு கோபமெல்லாம் இல்லடா... நீயும் என் பிள்ளைதான் என்ற பெரியப்பா வழியனுப்ப வீடு வரை வர, சித்தப்பா மட்டும் வழக்கு விசயமாக பேசவும் அப்புவின் கையெழுத்தை அண்ணனின் அனுமதியுடன் பெறவும் அவர்களுடன் இரயில் ஏறுகிறார்.

அப்புவுன் சித்தப்பாவிடம் இனி அந்தச் சொத்து எனக்கோ என் பிள்ளைக்கோ வேண்டாம்... வழக்குத் தொடுக்க கையெழுத்து இட முடியாதென அடித்துச் சொல்கிறார் அப்பா. சித்தப்பாவுக்கு வருத்தமிருந்தாலும்... வந்ததில் இருந்து  அம்மணி அம்மாள் வீட்டுப் பக்கமே வரவில்லை என்றாலும் அண்ணனின் ஆபரேசனுக்காக மருத்துவமனை அருகில் தங்கி காலை மாலை வந்து பார்த்துச் செல்கிறார்.

சொத்து வேண்டாமென அப்பா சொன்னதில் அப்புவுக்கு ஆனந்தம் அதிகமாக அப்பா இமயமலையாகிறார் மனசுக்குள்...

அப்புவின் அப்பா பேசும் கதைகளை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமென மாணிக்கம் வாங்கிக் கொடுக்கும் நோட்டில் அப்பு எழுத ஆரம்பிக்கிறான்... அதுவே அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளாய்...

'இன்னும் ஒரு வாரத்தில் நமது தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்து விடும், அப்பாவுக்கு ஆபரேசன் ஆகிவிடும் என்று தேசத்தையும் தனி மனிதனையும் இணைத்துப் பார்க்கிற கண்ணோட்டத்தை அவனின் அப்பா தான் சொன்ன கதைகளின் மூலமாக அப்புவிடம் உருவாக்கிவிட்டார்' என்று நினைத்துக் கொள்கிறான் மாணிக்கம்.

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகளை நாம் கேட்கவில்லை என்றாலும் அவன் எழுதி வைத்துக் கொண்டு வருகிறான்... என்றாவது ஒருநாள் எதாவது ஒரு பதிப்பகத்தில் புத்தகமாக்குவான்... அது ஏதாவது ஒரு புத்தகத் திருவிழாவில் கடைவிரிக்கப்படும் என்று எண்ணினால் அது நம் தவறு... ஆம் கதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் அல்லவா நடந்திருக்கிறது... அதனால் அக்கதை படிக்கப்படாமலே...

ஊரில் பொறுக்கி எனப் பெயரெடுத்தவனை நகர வாழ்க்கை செம்மைப் படுத்துகிறது.

அம்மாவை விட அவளை விடுத்து வேறொருத்தியுடன் சென்ற அப்பா, அவனின் உள்ளத்தில் உயர்வாய் தெரிகிறார்.

சொத்துப்பத்து மீது ஆசையில்லாத, சொந்த பந்தங்கள் மீது நேசம் கொள்ளும் மனநிலை அவனுள் ஏற்பட அப்பா காரணமாகிறார்.

மீன்காரி என்றாலும் காசநோய்க்காரன் மீது கொண்ட காதலால் அவனுடன் மகிழ்வோடு கஷ்ட ஜீவனம் நடத்தும் அம்மணியம்மாள் பெற்றவளைவிட உயர்வாய்த் தெரிகிறாள்.

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் என்ன என யோசிக்காமல் அப்புவின் வாழ்க்கைக் கதையை வாசிக்கும் போது நம்மை அவனோடு அந்த ஏரிக்கரையிலும் சென்னையிலும் ஏன் செங்கோணிக் கிழவனின் கிணற்றுக்குள்ளும் குதூகலமாய்... அவன் அவ்வப்போது பயணிக்கும் கற்பனை குதிரையின் மேலேறி நம்மையும் 'டடக்... டடக்...' என பயணிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

***********

பிரதிலிபி போட்டியில்.... (வாசிக்க நினைத்தால் இணைப்பைச் சொடுக்குங்கள்)

                                               சிறுகதை : தலைவாழை
                                               கட்டுரை   : பதின்மம் காப்போம்

-'பரிவை' சே.குமார்.

சனி, 25 நவம்பர், 2017கோழிக்குடலும் பிலிப்பைனியும்

'காணாமல் போன கனவுகள்' ராஜி அக்கா அருவருப்பான உணவுகள் அப்படின்னு பதிவுகள் எழுதியிருந்தாங்க... அதில் லார்வா புழுக்களை திம்பாங்களா?! அப்படின்னு ஒரு பதிவு... வாசிக்கும் போதே குமட்டல் எடுக்கும்படியான உணவுகள். அதைப் படித்ததும்  எதை எதையோ சாப்பிடுகிறார்களே  என நினைத்தபோது எல்லாத்தையும் ஒரு கை பார்க்கும் சைனாக்காரர்களைப் போல கழிவென்று எதையும் ஒதுக்காமல் சாப்பிடும் பிலிப்பைனிகள் என் ஞாபகத்தில் வந்தார்கள்.

ஆம் பிலிப்பைனிகளின் உணவு முறை மிகவும் வித்தியாசமானதுதான்... திங்கிறதுல இவன் சூரன்னு நம்மூருல சிலரைச் சொல்லுவாங்க... புரோட்டா சூரி மாதிரி அசால்ட்டா ஏழு ஈடு இட்லியைச் சாப்பிட்டுட்டு இன்னும் வேணுமின்னு சொல்ற கிராமத்து... விவசாயம் பார்க்கிற மனிதர்களைப் பார்த்ததுண்டு... ஆனா இவயிங்க... அதான் பிலிப்பைனிகளும் அரபிகளும் இல்லேன்னா அமீரக உணவுக்காக தினமும் லட்சக்கணக்கான கோழிகள் உயிரை இழக்கமாட்டாது.... கே.எப்.சி. செமயா கல்லாக் கட்டுறதுல இவனுக பங்கே அதிகம்.

நான் அபுதாபி வந்த புதிதில் கோழியும் அதன் ஈரலும் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்... அதன் பிறகு அதன் கால்கள், தலை என ஒவ்வொன்றாய் விற்பனைக்கு வர ஆரம்பித்து இப்போ கோழிக்குடலும் விற்பனையில்... இதெல்லாம் யார் சாப்பிடுகிறார்கள் என்றால் பிலிப்பைனிகள்.... பிலிப்பைனிகள் மட்டுமே.

சென்ற வாரத்தில் ஒருநாள் அலுவலகம் முடிந்து இருப்பிடம் திரும்பிய போது லிப்டின் அருகே இரண்டு அட்டைப் பெட்டி இருந்தது. ஒன்றில் கோழியின் கழுத்துப் பகுதி பாக்கெட் பாக்கெட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்து. மற்றொன்றில் பெரிய பெரிய பாக்கெட்டில் நீள நீளமாய்... நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் கண்மாயில் மீன் பிடிக்க தூண்டில் முள்ளில் குத்த ஈர மண்ணை வெட்டி புழுவைப் பிடித்து டப்பாவில் அடைத்துச் செல்வோமே அதைபோல் சற்றே பெரியதாய்... வெள்ளையாய்... இடியப்பம் போல்...  நீள... நீளமாய்...

தூண்டில் என்றதும் ஞாபகத்தில் வருவது... பள்ளியில் படிக்கும் போது கடையில் நரம்பும் தூண்டில் முள்ளும் வாங்கி நெட்டியையோ அல்லது மயிலிறகினையோ தட்டையாக்கி நீண்ட கம்பில் கட்டி, முள்ளில் புழுவைக் குத்தி தண்ணீருக்குள் வீசி கம்பைத் தூக்கிப் பிடித்தபடி வெயிலில் காத்து நின்றிருக்கிறோம். கெண்டையும் கெழுத்தியும் உழுவையும் சில நேரம் விறாலின் குட்டிப் பையனும் (விறாக்கண்ணு) பிடிப்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் ஒன்றுமே கிட்டாமல் போவதும் உண்டு.

 தூண்டில் போடுவதில் நமக்கு அவ்வளவு ராசி இல்லை.... தம்பிக்கு அதில் அதிக ஆர்வம்... அவனுக்கு மீன ராசி இல்லை என்றாலும் மீன் பிடிக்கும் ராசியுண்டு. காலையில் போனால் சாயங்காலம் வரைக்கும் கண்மாயில் கிடந்து திரும்புவான்... அப்போதெல்லாம் அவன் மீது மீன்வாடை அடிக்கும்.

விறால் மீனுக்கென வேறுவிதமான தூண்டில் உண்டு... பெரிய முள்ளும் உண்டு. சிறிய கெண்டையைக் குத்திப் போட வேண்டும். விறால் பிடிப்பதில் வீரர் எங்கள் இரண்டாவது அண்ணன். இரண்டு விறாத்தூண்டிகள் போட்டு முனியையா கோவில் பின்னே இருக்கும் வன்னி மரத்தில் கட்டிவிட்டு அமர்ந்திருப்பார். தட்டை மெல்ல நீரில் முழ்கியதும் அதை மெல்ல இழுத்து கரையில் மீனைத் தூக்கி வீசுவார். முள் குத்திய வலியில் வாயில் முள்ளுடன் குதித்தாடும். விறால் மீன் தண்ணீர் இல்லை என்றாலும் விரைவில் மரணிக்காது.

கெண்டை வலையும் வைத்திருப்பார்... இரவில் கொண்டு போய் கட்டிவிட்டு வந்து மறுநாள் காலை போய் வலையில் மாட்டிய கெண்டைகளை பிடித்துக் கொண்டு வருவார்... கதுவாலி  (அதாங்க கௌதாரி) பிடிக்க நரம்பில் சுறுக்கு போல் கட்டி சின்னச் சின்னதாய் கதுவாலித் தட்டு வைத்திருப்பார். பத்தக்கட்டை போட்டு மீன் பிடிக்கும் குழுவில் முதலாவதாய் இருப்பார். எல்லா வேலைகளையும் செய்வார்... அவரோடு செட்டு (அதாங்க நண்பர்கள்) எல்லாம் ஒரே மாதிரியானவர்கள். அவர்களின் பொழுது போக்கே இதுதான்.

தூண்டில் பின்னே சென்ற ஞாபகத்தை பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கோழிக் குடல்கள் பக்கம் திருப்புவோமாக.

என்ன இது பாக்கெட்டில்..? 

ஐய்யே... குப்பையில் போட வேண்டிய கோழிக்குடலா..? என்ற யோசனையுடன் அதனருகே நின்ற எங்கள் அறைக்குப் பக்கத்து அறை மலையாளி நண்பனிடம் 'ஆசானே... இது எந்தானு..?' என்று மெல்லக் கேட்டேன் குமட்டல் மறைத்து.

'ஏ... இது கோழிக்கச்சோடம்... குடலு' என்றான். அவன் சிக்கன், மீன் கடைகளுக்கு நேரடி விற்பனையாளன். இதற்கென ஒரு குளிரூட்டப்பட்ட அறை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறான். அதில் மீன், சிக்கன் நிறைய வைத்திருப்பான். ஹோட்டல்களில் சிக்கன் கொண்டு போய் வெட்டிக் கொடுத்துட்டு வருவான்.

'எவட கொண்டு போகுது..? கறி சமைக்காம் போகுதா..?'

'ஏ... இ கச்சோடத்த கறி வைக்கவா... ஒரு பிலிப்பைனி சோவிச்சு... நமக்கு பைசா கிட்டினா மதியல்ல... இவட கொண்டாந்து வைக்காம் பறஞ்சி...  அதான்... ஆயாளுக்கு வெயிட் செய்யிறேன்' என்றான்.

'இதையெல்லாமா திம்பானுங்க...' என்ற யோசனையோடு காத்திருக்க, மற்றோவனும் வந்தான்... இதைப் பார்த்து 'கருமம்... கருமம்...' என்றான்.

லிப்ட் வர நானும் மற்றொருவனும் ஏற,  அந்த மற்றவனும் மலையாளிதான்... 'இவருக்கு என்ன வட்டா (பைத்தியமா)... கச்சாடாவெல்லாம் இவட கொண்டாந்து வச்சிருக்கு... இதெல்லாம் சேல்ஸ் பண்ணி காசு சம்பாதிக்கணுமா'ன்னு திட்டினான்.

இது குறித்து அறையில் உரையாடல் நடந்தபோது நண்பர் ஒருவர் ஆட்டுக்குடல் தின்பதில்லையா... அது மாதிரி அவனுகளுக்கு கோழிக்குடல் பிடிச்சிருக்கு என்றார்.

ஆட்டுக்குடலை சுத்தம் செய்யும் முறை தெரியுமா உங்களுக்கு.... அதை வெளக்குமாத்துக் குச்சியால் திருப்பிச் சுத்தமாக்கி, சுடுதண்ணீர் வைத்து அதில் போட்டு ஒரு முறைக்கு இரண்டு முறை கழுவி, மஞ்சள் போட்டு உரசித் தேய்ச்சு மீண்டும் கழுவி... இப்படிக் கழுவிக் கழுவி சுத்தம் செய்துதான் சமைப்பார்கள்... இப்படி கோழிக்குடலை சுத்தம் செய்ய முடியுமா என்ற போது பிலிப்பைனிக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் மெல்ல பின்வாங்கினார்.

உடனே மற்றொருவர் அதைச் சாப்பிட்டால் என்ன... எனக்கெல்லாம் சமைத்துக் கொடுத்தால் நான் சாப்பிடுவேன்... ஊர்ல போட்டின்னு ஒன்னு விக்கிறானுங்களே... அதுல இதைக் கலந்திருக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்... இதுக்கு எதுக்கு இங்க விவாதம் வேண்டிக் கிடக்குன்னு வாலண்டியரா வண்டியில ஏறினார்.

இவரு ஆடு, மாடு, கோழி, நாய், நரி, பன்னி என எல்லா ஜீவராசிகளையும் ஒரு கை அல்ல இரண்டு கை பார்க்கும் தமிழர். குறிப்பாக ஊரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்த, இப்போதும் வாட்ஸ் அப்பில் எந்த நேரம் மத்திய அரசின் துதி பாடிக்கொண்டிருப்பதுடன் 'என்ன தமிழனுங்க... என்ன தமிழ்நாடு' என தான் ஒரு தமிழன் என்பதை மறந்து அரசியல் பேசும் அன்பர். இவரிடம் பேச ஆரம்பித்தால் அடுப்பில் வைத்த சட்டி போல் நாம்தான் சூடாக வேண்டும் என்பதால் இவரின் வாதத்தைப் புறந்தள்ளி நகர்ந்தேன்.

பிலிப்பைனிகள் ரொம்பச் சுத்தமாக வெளியில் வருவார்கள். விலை உயர்ந்த செண்ட் அடித்திருப்பார்கள்... இருக்கதிலேயே விலை உயர்ந்த போனும் விலை உயர்ந்த ஹெட்செட்டும் பயன்படுத்துவார்கள். (கில்லர்ஜி அண்ணனுக்குத் தெரியும்... அவரிடம் நிறைய கதைகள் இருக்கலாம்)

சாட்டிங்கில் இருக்கும் போது அவர்களைப் போல் அவ்வளவு வேகமாக ஹையர் லோயர் பாஸ் பண்ணியிருக்கிறேன் எனச் சான்றிதழ் காட்டினாலும் நம்மால் டைப் அடிக்க இயலாது. 

அலுவலகத்தில் ரொம்பப் பொறுமையாய் வேலை செய்வார்கள். அதனால் வரவேற்பிலும் கம்பெனி செயலாளராகவும் இவர்களை அதிகமாகப் பார்க்க முடியும்... அலுவலகத்தில் கோபமே வராது... ஆனால்  அவர்களுக்குள் சண்டை வந்தால் காச் மூச்சென்று நம்ம நரிக்குறவர்கள் (இப்ப இவங்க ரொம்பக் கண்ணியமானவர்கள் ஆகிவிட்டார்கள்... நாம்தான் நரிக்குறவர் போல் ஆகிவிட்டோம்) போல் கத்துவார்கள். இறுதியில் ஒரு கெட்டவார்த்தையோடு சுபம் போடுவார்கள்.

சாப்பாட்டு முறை என்றால் பாதி வேக வைத்து வினிகரை ஊற்றி சாப்பிடுவதுதான் வாடிக்கை.... இப்ப நல்ல உரைப்பா இருக்கிற ஆந்திர பிரியாணி வரை சாப்பிடப் பழகிவிட்டார்கள். 

மசாலா இல்லாமல் சமைப்பது அவர்கள் வழக்கம். மசாலா இருந்தால்தான் சமைப்பது நம் வழக்கம். 

அவர்கள் சாப்பாட்டு பாக்ஸைத் திறந்தால் நமக்கு குமட்டும் அளவுக்கு வாசம் (நாற்றம்) இருக்கும். அந்த வாசம் அரபிகளுக்குப் பிடிக்கும். நம் சாப்பாட்டை இந்தியன் மசாலா என்று சொல்லி, நம் வயிற்றையும் தடவிப் பார்ப்பார்கள். மசாலாவால்தான் தொந்தி என்பது அவர்கள் எண்ணம்.

எங்க அலுவலகத்தில் கூட பிலிப்பைனிகள் சாப்பிட ஆரம்பித்தால் அலுவலகமே வாசமாகும். நமக்கு குமட்டும்... ஆனால் மேலாளரான அரபி அவர்களுக்கு இடையில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டு எடுத்துச் சாப்பிட்டுப் பார்ப்பார். நம் சாப்பாட்டு பாக்ஸ் திறக்கப்பட்டால் இந்தியன் மசாலா, ஒரே வாசம்... ஏசியை ஆப் பண்ணு... அவங்க சாப்பாட்டை சூடு பண்ணக் கூடாதுன்னு சொல்லுன்னு கத்துவார். இவர் மன்மதன்... இவரைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்.

பிலிப்பைனிகள் மீனின் மீது அதிக விருப்பம் கொண்டவர்கள்... சல்மான், ஹம்மூர் (நம்மூரில் என்ன பேரோ தெரியல) என்ற பெரிய மீன்களின் தலைகள் அவர்களுக்காக விற்க்கப்படுவதுண்டு. இவை பெரிய பெரிய ஹோட்டல்களில் வெட்டி எடுத்தது போக மிஞ்சும் கழிவாகும். அதை அவர்கள் அள்ளிச் செல்வதைப் பார்க்கலாம். 

வார இறுதி நாளில் இப்படித்தான் சரக்கையும் அள்ளிச் செல்வார்கள். இன்னொன்னு சொல்லணும் நம்மூர் நகரை மீனுக்கு இங்கு சுல்தான் இப்ராஹிம். நம்மூரில் வாங்கிச் சமைக்க விரும்பாத மத்தியே மலையாளிகளின் விருப்பமான மீன். மலையாளி ஹோட்டல்களில் மீன் பிரை சாப்பாடு என்றால் அதில் மத்திக்கே முதலிடம். கேட்டால் இதில் ஓமேகா அதிகம் என்பார்கள்.

மீனை அரை வேக்காடாய் வேகவைத்து அதில் சாப்பாட்டு வினிகரை ஊற்றி எடுத்து வந்து சாப்பிடத் திறக்கும் போது குமட்டும் என்று மேலே சொன்னேனல்லவா... அந்த நேரத்தில் நான் லிப்டில் இறங்கிக் கொண்டிருப்பேன்... வெளியில் சூடாக இருந்தாலும் அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை அலுவலகத்துக்குள் நுழைவதில்லை.. அப்படியிருக்க ஒருவேலை கோழிக்குடலைச் சமைத்து எடுத்து வந்தார்கள் என்றால்.. சத்தியமாக அருகில் இருக்கும் கார்னிச்சில் (கடற்கரை ஏரியா)  கடலைப் பார்த்துக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.

இங்கு பூனைக்குப் பஞ்சமில்லை... பூனையைப் பாத்துட்டுப் போனா விடியாதுன்னு சொல்வாங்க.... சூரியவம்சத்தில் பூனையைப் பார்த்துட்டுப் போனா சகுனம் நல்லாயிருக்காது என்பதற்கு சுப்ரீம் ஹீரோ நமக்கா, பூனைக்கான்னு  கேக்குற மாதிரி தினமும் பல பூனைகளைத் தாண்டித்தான் வரவேண்டும். சகுனம் நல்லா இருக்கா இல்லையானெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. சகுனம் நல்லாயிருந்தாத்தான் இப்படிக் கஷ்டப்பட வேண்டியதில்லையே... இங்கு வரும்போது பூனையைப் பார்க்காமல்தானே வந்தோம். 

பூனைகள் பிலிப்பைனிகளின் விருப்ப உணவு. தனியாக பூனை மாட்டினால் நாம் முயலைப் பிடிப்பது போல் அமுக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அப்புறம் என்ன முழுப்பூனையையும் சுடு தண்ணீருக்குள் அழுக்கி... அரை வேக்காடாய்... மசாலா இன்றி... வினிகரோடு... விரும்பி உண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

அப்புறம் பிலிப்பைனிகளை இங்கு பூனை என்றுதான் சொல்வார்கள். 

அவர்கள் தங்கியிருக்கும் தளத்தில் நம்மால் தங்க முடியாது. குறிப்பாக சமையலறையில் அவர்கள் சமைக்கும் போது நம்மால் சமைக்க முடியாது. இதேதான் அவர்களும் சொல்லக்கூடும் இந்தியர்கள் சமைக்கும் இடத்தில் நம்மால் நிற்க முடியாதென... அறை தேடும் போது பிலிப்பைனிகள் இல்லாத அறையாகத்தான் பார்ப்பதுண்டு.

எது எப்படியோ கோழியின் கழிவுகள் எல்லாமே லூலூவில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. மலையாளி பிழைக்கத் தெரிந்தவன்... பிலிப்பைனிகளை வைத்துக் கல்லாக் கட்டுகிறான். இந்த லூலூக்காரனின் வளர்ச்சியில் பல மலையாளிகளின் வாழ்க்கைகள் வேரறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வட இந்தியனின் பெரிய மார்க்கெட்டும் இதில் அடக்கம்.

பிலிப்பைனிகள் எல்லாமும் சாப்பிடுவார்கள்... எதையும் விட்டு வைப்பதில்லை. வார விடுமுறை நாளில் மீன் பிடிக்க தூண்டிலுடன் கிளம்பி விடுவார்கள். இங்கு நம் ஹோட்டல்களைவிட பிலிப்பைனி ரெஸ்ட்டாரண்டுகள் அதிகம். ஆமாம் இங்கு நம்மைக் காட்டிலும் பிலிப்பைனிகளே அதிகம்.

அரபி ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும் பிலிப்பைனிகளை பெரும்பாலான அரபிப் பெண்களுக்குப் பிடிப்பதில்லை... காரணமும் சொல்லவும் வேண்டுமா...? 

அப்புறம் இன்னொன்னு நம்மாளுகளும் சாப்பிடுவாங்க போல... இப்பத்தான் பார்த்தேன் அறுசுவையில் கோழிக்குடல் சமையல் குறிப்பு இருக்கு... என்னத்தைச் சொல்ல.... 

அதைப் பார்க்க வேண்டுமா இங்கு பாருங்கள்....

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 23 நவம்பர், 2017சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)

லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்த லால், மோகன்லாலை வைத்து எப்படியும் படம் இயக்க வேண்டுமென முயற்சித்து அதில் வெற்றியும் பெற்ற நிலையில் படத்தில் ஜெயித்தாரா?

இந்தக் கேள்வியோடு ஆரம்பிப்போம் படம் குறித்தான பார்வையை...

வெளிப்பாடிண்டே புஸ்தகம்...

இந்தப் பேரைக் கேட்டதும் என்ன புஸ்தகம் இது எனத் தோன்றலாம்.

இந்தப் படத்தின் பாடலொன்று உலகெங்கும் பிரபலமானதே அந்தப் பாடலைச் சொன்னால் உடனே ஞாபகத்தில் வந்துவிடும்தானே இது என்ன புஸ்தகம் என்பது...

ஆமா அது என்ன பாடல்...?

அட ஷெரில்... அதாங்க கல்லூரிப் புரபஸர் தன்னுடைய சக ஆசிரியர்களுடன் ஆட்டம் போட்டுச்சே... உடனே நம்ம பயக, புள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு ஆட்டம் போட்டு யூடியூப்பை நிரம்பி வழிய விட்டார்களே...

இன்னும் ஞாபகத்தில் வரலையா...? அட நம்ம ஊரு தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், இணையச் சேனல்கள் எல்லாம் இந்தா இருக்கிற நெடுவாசல் போய் போராட்டம் நடுத்துனவங்களை எடுத்து போட முடியவில்லை என்றாலும் அந்தப்புள்ளை வீடு தேடிப்போயி பேட்டியெல்லாம் எடுத்துப் போட்டானுங்களே...

ம்... சும்மாவா மில்லியன் கணக்குலயில்ல லைக் போட்டிருக்கோம்... அதுல லைக் போட்டதுல நம்ம தமிழனுகளுக்குத்தான் முதலிடமாம் தெரியுமா..? 

ம்... அதே தாங்க... 'எங்கம்மாட ஜிமிக்க்கி கம்மல்'... ம்.... இப்ப ஞாபகத்தில் வந்திருக்குமே அந்த ஷெரில்... ச்சை... படம்.

சரி படம் எப்படி..?

Image result for velipadinte pusthakam poster

ஒரு கிறிஸ்தவக் கல்லூரி... அதில் மீனவ மாணவர்கள் மற்றும் எங்கும் இடம் கிடைக்காமல் இங்கு வந்து படிக்கும் பெரிய இடத்து மாணவர்கள் என இரண்டு குரூப்புக்குள் எப்பவும் மோதல்... நாங்க படிக்கும் போது இருந்த எங்க தேவகோட்டைக் கல்லூரி மாதிரித்தாங்க... எங்க கல்லூரியில் தேவகோட்டை - திருவாடானை மோதல் எப்பவும் இருக்கும்... சாதாரண அடி தடியில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டி விரட்டி அடிக்கும் பெரிய அடிதடி வரை அடிக்கடி நிகழும். இப்ப நிறைய மாற்றம்... மாற்றம் நல்லதுதானே...

கல்லூரித் துணை முதல்வராய் இருக்கும் புரபஸர் பிரேம்ராஜ் (சலீம் குமார்)... செக்ஸ் பட பிரியர் என்பதால் மாணவர்களால் செல்லமாக காமராசு என அழைக்கப்படுகிறார். மாணவர்களின் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறேன் பார் என சிசிடிவி கேமரா வைக்க, அதன் மூலம் அவருக்கே பிரச்சினை வருகிறது. அதன் காரணமாக துணை முதல்வர் பதவி போய் சாதாரண புரபஸராகிறார். அவருக்குப் பதிலாக... துணை முதல்வராக கல்லூரிக்குள் நுழைகிறார் பாதர் மிக்கேல் இடிகுலா (மோகன்லால்).

இரண்டு பிரிவுகளின் தலைகளையும்... அதாங்க மீனவர் பிரிவின் தலைவன் பிராங்கிளின் (அப்பானி சரத்), பெரிய இடத்துக் குழுத் தலைவன் சமீர் (அருண் குரியன்) இருவரையும் இணைக்கும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.

மிக்கேல் பாதர் என்பது கல்லூரிக்குள் தெரியாது... மேலிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது.. தமிழகத்தில் பாஜக ஆட்சி நடந்தாலும் அதிமுகதான் ஆள்கிறது என நாம் முட்டாள்தனமாக நம்புவது போல் திருமணம் ஆகாத மிக்கேல் தன்னைக் கட்டிக் கொள்வார் என முட்டாள்தனமாக நம்புகிறார் புரபஸர் மேரி (அன்னா ராஜன்), இந்தக் காதலை மிக்கேலிடம் சொல்ல சக புரபஸரும் தோழியுமான அனுமோல் (சினேகா ஸ்ரீகுமார்) முயல, மிக்கேலோ குர்பானாவுக்கு சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்ல, அங்குதான் அவர் பாதர் என்பது வெளிச்சத்துக்கு வருகிறது. பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருட்டுக்குள்ளயே கிடக்கின்றன இங்கே... எப்ப அவற்றின் மீது வெளிச்சம் படும்?

மேரி நல்ல பெண் என்றும் அவளுக்குத் தனக்குத் தெரிந்த நல்ல பையனை பேசி முடிப்பதாகவும் சொல்லி அதன்படி செய்கிறார். கல்லூரிக்குச் சைக்கிளில்தான் வருவேன் என வரும் மிக்கேல்... இங்க வார்டு கவுன்சிலரே ரெண்டு கார்ல போறாரு... துணை முதல்வர்... அடிக்கடி துணை முதல்வர்ன்னு சொன்னதும் நீங்க அவருன்னு நினைச்சிறாதீங்க... நான் அந்த தர்மயுத்தத்தைச் சொல்லலை... இவரு கல்லூரி துணை முதல்வருங்க... சுத்தமான தமிழில் சொன்னா வைஸ் பிரின்ஸ்பால்.

கல்லூரித் துணை முதல்வர் சைக்கிளில் போறாரே... அப்ப எப்படி மாணவர்கள் மதிப்பாங்கன்னு யோசிக்காதீங்க... ஏன்னா அது கேரளாங்க... முதல்வரே சர்ச்சுக்குள்ள இடமில்லைன்னு வெளியில உக்காந்திருந்தாருதானே... விடுங்க.. நம்மூரா இருந்தா சர்ச்சுக்குள்ள இருந்த எல்லாரையும் வெளிய போகச் சொல்லிட்டு முதல்வர் மட்டும் உள்ள இருந்திருப்பாரு இல்லையா... அப்ப இசைக்கத் தெரியாத அம்மணி அதுவும் செரிதான்னு அசால்டா பேட்டி கொடுக்கும். நமக்கெதுங்க அரசியல்... பதிவர் அரசியலே படு பயங்கர இருக்கும்போது நாட்டரசில் தேவையா...? 

சரி வாங்க   பொஸ்தவத்தை தொடர்ந்து வாசிப்போம்.

எங்க விட்டோம்.... ஆங்.... சைக்கிள்லதானே... ஒருநாள் மாலை சைக்கிளில் போகும்போது ஒரு குடிகாரனைச் சந்திக்க, அவனை சைக்கிளில் ஏற்றி வீட்டில் கொண்டுபோய் விட வேண்டிய சூழலில் சிக்குகிறார் பாதர். அந்த சிறிய குப்பத்து வீட்டுக்குப் போனால் அது பிராங்க்ளின் வீடு... அந்த குடிகாரன் அவனின் அப்பா வர்க்கி (பிரசாத்). பால் இல்ல கட்டங் காபிதான்... குடிப்பியலா... டம்ளர்ல மீன் வாசம் இருக்கும் என அவனின் அம்மா கொடுத்த காபியை வாங்கிக் குடித்து நல்லாயிருக்கு என்று சொல்லிக் கிளம்பும் போது உன்னோட சிறுகதை படித்தேன், ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொல்லிச் செல்கிறார். ஆக பிராங்க்ளின் ஒரு எழுத்தாளன்... அதிலும் சிறுகதை எழுத்தாளன் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

கல்லூரியில் பாய்ஸ் ஹாஸ்டல் கட்ட வேண்டுமென முடிவெடுத்து அதற்கு வேண்டிய பணத்தை எப்படிப் புரட்டுவதென நடக்கும் பேச்சு வார்த்தையின் முடிவில் சினிமா எடுப்பதென தீர்மானம் நிறைவேறுகிறது. இதை எல்லாக் கல்லூரிகளும் தொடர்ந்தால் அன்புச் செழியன் போன்றவர்கள் சினிமாவில் வளர மாட்டார்கள்... கோடிகளும் புரளாதுதானே.... நம்ம சொன்னா எவன் கேக்குறான்.

பாதருக்குத் தெரிந்த தயாரிப்பாளர் விஜய்பாபு (படத்திலும் நிஜத்திலும் விஜய்பாபுதான்) ஒன்னறைக் கோடி முதலீடு செய்வதாகச் சொல்லி, சினிமாவில் பெரிய நடிகர்களைப் போடுவதைவிட நாமளே நடித்தால் செலவைக் குறைக்கலாம் என்றும் சொல்ல, அனைத்துத் தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு கல்லூரி பாடம் துறந்து படம் எடுக்க ஆரம்பிக்கிறது. அட இந்த வரி நல்லாயிருக்கே..! எனக்கு நானே ஆச்சர்யக் குறி போட்டுக்கிறேன்.

விஜய்பாபுவால் நம் சிறுகதை எழுத்தாளனின் கதை நிராகரிக்கப்பட, குறும்படம் எடுத்து அனுபவம் உள்ள சமீர் இயக்குநராக, எந்தக் கதையை எடுக்கலாமென யோசிக்கும் போது தாமரைக் குளத்துக்குள் ஒற்றை அல்லி பூத்திருப்பது போல், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும் கலையரங்கத்தில் பாதர்களுக்கு மத்தியில் குங்குமப் பொட்டுடன் சிரிக்கும் விஸ்வநாதன் என்ற புல்லட் விஸ்வம் கவர்கிறார். ஆமா யார் இந்த விஸ்வம்..?

விஸ்வம் யாருன்னு பார்க்கும் முன்னால இதைச் சொல்லிடுறேன்... கிறிஸ்தவப் பள்ளிகளில் சர்ச்சுக்கு எல்லா மாணவர்களும் செல்ல வேண்டும் என்பது கட்டாயம்... ஆனால் அவர்கள் கொடுக்கும் திராட்சை ரசத்தில் நனைத்த பிரசாதத்தை மட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பதும் கட்டாயம்...  இதெல்லாம் அனுபவம்... ஆராய்ச்சியில்லை. அப்படியிருக்க பாதர்களுக்கு நடுவே எப்படி விஸ்வம்..?

அதுக்கு ஒரு கதையிருக்கு... அதன் முடிவுதான் படத்தின் ஆரம்பக் காட்சியில் மழைநாளில் விஸ்வத்தின் கொலை...

அந்தக் கிறிஸ்தவக் கல்லூரி வரக்கூடாதுன்னு சொல்லுற ஒரு பெரிய மனிதர் மாதன் தரகன் (சித்திக்).. கல்லூரி வந்தே தீரும்ன்னு போராடி கல்லூரியைக் கொண்டு வரும் விஸ்வம். விடுவாங்களா... அதுதான் ஆரம்பக் காட்சிக் கொலையாய் அரங்கேறுகிறது ஒரு மழை நாளில்... மாதனுக்கு உதவியாய் அவரின் வலக்கை காக்கா ரமேஷன் (செம்பான் வினோத்) கொலைப்பழியில் சிறைக்குப் போகிறான்.

விஸ்வத்தின் கதை வியப்பைத் தருவதால் அதையே எடுப்போமென முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்குகிறார்கள். படமென்றால் நடிகர் தேர்வு இருக்கணுமே... எந்தக் கதாபாத்திரத்துக்கு யார் என்ற தேர்வு ஒரு சுபயோக சுபதினத்தில் நடக்கிறது.

விஸ்வத்தின் நெருங்கிய நண்பனாயிருந்து குடிகாரனானவர் வர்க்கி... அதாங்க பிராங்க்ளின் அப்பா... அவர் கதாபாத்திரத்தில் பிராங்க்ளின்... ஆம் கதை நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்தவனை கதாபாத்திரமாக்கி சரிக்கட்டி விடுகிறார்கள். 

விஸ்வத்தின் மனைவி ஜெயந்தியாக புரபஸர் மேரி... மாதனாக புரபஸர் காமராசு... இப்படி எல்லாக் கதாபாத்திரமும் ஓகேயாக விஸ்வமாக யார்...? என்பது கேள்விக்குறியாகிறது... இதுவே தயாரிப்பாளரை விலகிக் கொள்ளலாம் என முடிவெடுக்க வைக்கிறது.

நாயகன்தானே சுமக்கணும்... அதுதானே சினிமா விதி... பாதர் பக்கா அடியாளாக அதாங்க விஸ்வமாக உருவெடுக்கிறார். விஸ்வத்தின் வீட்டில் மனைவி ஜெயந்தியிடம் (பிரியங்கா) அனுமதி வாங்கி அங்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். பாதரைப் பார்க்கும் போது ஜெயந்திக்கு விஸ்வம் ஞாபகம் வருகிறது.

விஸ்வத்தின் முதல் குழந்தை கொல்லப்படுவது... இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும் போது விஸ்வம் கொல்லப்படுவது... என கதைக்குள் மற்றொரு கதை சினிமாவாய் பயணிக்க, மாதன் பிரச்சினைக்கு வருகிறார். பின் அவரே விஸ்வத்தைத்தான் கொல்லவில்லை என்பதையும் சொல்கிறார்.

ஒரு பாடல் காட்சி பாக்கியிருக்கும் நிலையில் இறுதிக் காட்சி எடுக்கப்பட்ட பின்னரே விஸ்வத்தை யார் கொன்றார்கள் என்பது தெரிய வர, மீண்டும் காட்சியை மாற்றி எடுக்க வேண்டுமென பாதர் சொல்ல, இயக்குநரான சமீர் மறுக்கிறான். மீண்டும் இவர்களால் படத்துக்குப் பிரச்சினை வருகிறது. 

பாதர் குறித்து அவர் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்பவர் சொல்லும் உண்மையில் உரைகிறது மாணவர் கூட்டம். அந்த உண்மை... அவர் ஒன்றை மனம் ஒத்து செய்தால் அதாகவே மாறிவிடுவார் என்பதுதான்... அவரின் படப்பிடிப்பு சமயத்திலான செயல்கள் எல்லாம் விஸ்வத்தை ஒத்திருப்பதை உணர்கிறார்கள்.

சரி இப்ப சஸ்பென்ஸ் கிளைமேக்ஸ்க்கு வருவோம்.

விஸ்வத்தைக் கொன்றது யார்..?

விஸ்வத்தின் முதல் குழந்தையை கொன்றது யார்..?

பாதர் மீண்டும் நடிக்க வந்தாரா இல்லையா..?

இறுதிக்காட்சியில் மாற்றம் பண்ணினார்களா இல்லையா..?

அந்த கதாபாத்திரமாகவே மாறிய பாதர் விஸ்வத்தைக் கொன்றவர்களை என்ன செய்தார்..?

மாதனாக நடிக்கும் காமராசு... ச்சை... பிரேம்ராஜ் தொடர்ந்து நடித்தாரா அல்லது நிஜ மாதனால் மிரட்டப்பட்டாரா...?

மேரிக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் திருமணம் நடந்ததா...?

ஜெயந்தியும் குழந்தையும் என்ன ஆனார்கள்..?

இப்படி நிறையக் கேள்விக்கு இறுதிக் காட்சிகள் விடையாய்...

Related imageபடம் குறித்து...?

பாடம் நடத்தும் கல்லூரி ஒரு ஹாஸ்டல் கட்டுவதற்காக படமெடுக்குமா..? என்ற கேள்வி எழும்போதே படம் ஆளில்லாத ரோட்டில் 20கிமீ வேகத்தில் போவதுபோல் ஆகிவிடுகிறது.

ஒரு சர்ச் பாதர்... கல்லூரி துணை முதல்வர்... இதைச் செய்வாரா..? என்ற கேள்வி எழும்போது துணை முதல்வர் மீதான மதிப்பும் டமார்... இங்கயும் தர்மயுத்தத்தைச் சொல்லலை... அதுக்கு மதிப்பு இருந்தாத்தானே உடையும்..?

மிகப்பெரிய ஆள் ஒருவரால படப்பிடிப்பை நிறுத்த முடியாதா..? என்ற கேள்வி எழும்போது கதை மெல்லப் படுத்து 20-வதில் இருந்து 10 கிமீ வேகத்துக்கு வந்துவிடுகிறது. 

பெரிய மனிதரால் ஒரு படப்பிடிப்பை நிறுத்த முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது வெளியாக இருந்த படங்களான விஸ்வரூபத்தையும் துப்பாக்கியையும் கதற விட்ட நம்மாளுங்கதான் ஞாபகத்தில் வந்தார்கள்... என்ன மெர்சலா... அதில் மிகப் பெரிய அரசியல் இருக்கு... அதெதுக்கு நமக்கு.

மோகன்லால் - லால் ஜோஸ் இணைந்த முதல் படம் எப்படியிருக்க வேண்டும்... சும்மா அதிர வேண்டாம்... வேண்டாம் அட தூள்ன்னாச்சும் சொல்ல வைக்க வேண்டாம். எப்ப கல்லூரி சினிமா எடுக்குறேன்னு களத்துல இறங்குதோ அப்பவே மனசுக்குள் சுபம் போட்டு விடுகிறது கதையின் போக்கு.

அப்ப படம்...?

'ஜிமிக்கி கம்மல்' மட்டுமே அழகாய் ஆடுகிறது... எத்தனை ஷெரில் ஆடினாலும் ஒரிஜினல் ஒரிஜினல்தான்... படம் பார்க்கும் போது நான்கு முறை திரும்பத் திரும்ப பார்த்தேன்... செம.

ஜிமிக்கி கம்மல் மட்டுமே அழகு என யார் சொன்னது...? நெற்றியில் சிறியதாய் ஒரு குங்குமப் பொட்டும் வைத்தால்தானே இன்னும் அழகு... இல்லையா..? 

இயக்குநர் கம்மலை அழகாய் ஆடவிட்டு கதை என்னும் குங்குமப்பொட்டை சரியாய் வைக்கவில்லை... ஸ்டிக்கர் பொட்டுத்தான் வைத்தார் போல அதான்  பாதர் சினிமா எடுக்க ஆரம்பித்ததும் கீழ விழுந்துருச்சு... கடைசிவரை விழுந்த பொட்டை எடுத்து ஒட்டவும் இல்லாமல் புதிய பொட்டை எடுத்து வைக்கவும் இல்லாமல் வெற்று நெற்றியாய்த்தான் இருக்கிறது.

இசை ஜிமிக்கி கம்மலில் ஆட்டம் போடுகிறது... இசையாய் ஷான் ரஹ்மான்.

கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்... எழுதிய பென்னி பி.நாயரம்பலம்.

ஒளிப்பதிவில் கலக்கலாய்  விஷ்ணு சர்மா.

(ஷெரில் ஆடாத பாடல் படத்திலிருந்து)

முக்கியமாக ஒரு விஷயத்தில் மட்டும் இந்த மோகன்லால், மம்முட்டியைப் பாராட்டலாம்... எதில்..?

அதாங்க நாயகியுடன் டூயட் பாடாமல் தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களாய் தேர்ந்தெடுப்பதில்தான்.... ஏன்னா தமிழ் நாயகர்கள் இப்படி எப்போது மாறுவார்கள் என ஏங்க வைக்கிறார்களே... அறுபதிலும் இருபதோடு ஆடிக்கொண்டு... ம்... சொன்னா நீ யாருடா சொல்லன்னு அவங்க கேக்குறாங்களோ இல்லையோ பால்குடம் எடுக்கிற நாங்கள் கேட்போம் நமக்கெதுக்கு... நாம் சேட்டன்களைப் பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்வோம். கருத்துச் சொல்றேன்னு  ஆளும் அரசின் அமைச்சர்கள் போல் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்காம....

பாலா ஒத்தை வார்த்தையை வைத்து தூங்கிக்கிடந்த மாதர் சங்கத்தை எழுப்பியது போல் ஜிமிக்கி கம்மலை வைத்து கல்லாக் கட்டலாம் என நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள்.

அப்ப படம் பாக்கலாமா..?

விருப்பமிருந்தால் பார்க்கலாம்... போரடிக்காது என்பது கேரண்டி.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 21 நவம்பர், 2017வாசிப்பனுபவம் : கவிழ்ந்த காணிக்கை

நான் முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன் 'வாசிப்பு ஒரு போதை' என்று...

உண்மைதான்... எப்படியான மனநிலை என்றாலும் பேருந்துப் பயணத்தில் வாசிப்பு என்பது தொடரத்தான் செய்கிறது. பாலகுமாரனின் 'முதல் யுத்தம்' முடிந்ததும் எனது தேடலில் கிடைத்தது 'கவிழ்ந்த காணிக்கை', இதுவும் பாலகுமாரன் எழுதியதுதான். இவர் அதிகம் சோழருக்குள் மட்டுமே திளைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆம் இதுவும் சோழர்கள் கதைதான்... 

சாண்டில்யனைப் போல், கல்கியைப் போல் பரவலான வரலாற்றுப் பார்வைக்குள் போகவில்லை என்றாலும் கற்பனையைக் காட்டிலும் வரலாற்றை அவர்களைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. எது எப்படியிருந்தாலும் அவர்களின் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு வரலாற்றுக் கதைகளில் இவரிடம் இல்லை என்றும் தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு மட்டும்தானா?

சரி கவிழ்ந்த காணிக்கையைப் பார்ப்போம்.

Image result for கவிழ்ந்த காணிக்கை

தஞ்சைப் பெரிய கோவில் பணிக்காக பாறைகள் வெட்டியெடுக்கும் பணி நடைபெறுகிறது. பூமியின் எலும்பான பாறைகளை இப்படியே வெட்டி எடுத்துக் கொண்டிருந்தால் ஒருநாள் இல்லையேல் ஒருநாள் பூமி பொலபொலவென உதிர்ந்து காணமல் போய்விடும் என்ற கவலையுடன் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன். இப்ப நாம மலைகளை எல்லாம் கூறு போட்டு ஆழ...ஆழ....ஆழமாக வெட்டியெடுத்து பூமியையும் கூறு போட்டுத்தானே வைத்திருக்கிறோம்.

யார் இந்த ஆதிச்ச பெருந்தச்சன்..?  

இராஜராஜ சோழரால் நியமிக்கப்பட்ட ரகசிய பெருந்தச்சர். தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிக்கு திருவக்கரையில் பாறைகள் எடுத்து சிற்பங்கள் செய்பவர். 

திருவக்கரைக்கு ஒரு மழைநாளில் வந்து மூன்று நாட்கள் தங்கிப் பணிகளைப் பார்வையிடும் இராஜராஜச் சோழன், இவரிடம் சிவலிங்கத்தையும் அதற்கு இணையான நந்தியையும் செய்யச் சொல்கிறார். அதற்கு என்ன சன்மானம் வேண்டும் என்பதை ஓலையில் எழுதித் தாருங்கள். சன்மானம் உங்கள் வீடு தேடிவரும். தங்கள் உதவிக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். திருவக்கரை கிராமத்துக்கு என்ன உதவிகள் தேவையோ அது உடனடியாகச் செய்யப்படும். கல் சுமக்க யானையோ குதிரையோ மிகப்பெரிய மாட்டு வண்டிகளோ உடனடியாக தரப்படும் என்றும் சொல்கிறார். 

மேலும் தூண்களுக்கான பாறைகளையும், கூரை மூட மேல்தளத்துக்கான பாறைகளையும் தயார் செய்து வையுங்கள். தஞ்சையில் இருந்து ஆஸ்தான பெருந்தச்சர்களை வந்து எடுத்துப் போகச் சொல்கிறேன். கொண்டு செல்லும் பாதைதான் மோசமாக இருக்கிறது. அதை நான் சரி செய்து கொள்கிறேன் என்று சொல்லிக் கிளம்புகிறார்.

இரவு உணவுக்குப் பின் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்க வாயில் அதக்கியபடி, மூன்று ஆள் உயரத்திற்கு ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் இரண்டு ஆள் உயரத்திற்கு நந்தியும் இந்த திருவக்கரையில் தன்னைச் செய்யச் சொல்லியிருப்பதாக மனைவியிடம் ஆதிச்ச பெருந்தச்சன் பெருமையுடன் சொல்கிறார். 

உடனே அவர் மனைவி தங்களுக்கு மகன் பிறந்தால் சிவனுக்கு வாகனம் செய்வதாக வேண்டியிருந்தீர்களே... ஏதேனும் ஒரு கோவிலுக்கு அடித்துக் கொடுப்பேன் என்றும் சத்தியம் வேறு செய்திருந்தீர்களே ஞாபகம் இருக்கிறதா..? என்று கேட்டு அதை ஏன் தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் செய்து கொடுக்கக் கூடாது என்றும் கேட்கிறாள். 

அவருக்கும் இது மிகச் சிறப்பானதொரு பணி, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலத்துக்குப் பேசப்படக்கூடிய ஒரு கோவிலில் தமது காணிக்கையாக நந்தி, அதுவும் இதுவரை எங்கும் இல்லாத உயரத்தில் ஒரு நந்தி, யாருக்குக் கிடைக்கும் இந்தக் கொடுப்பினை என்று நினைத்து அப்படியே செய்யலாம் என்கிறார்.

ஆதிச்ச பெருந்தச்சன்  மகன்  சோமதேவன், பிறக்கும் போதே இடக்கை மூடி வலக்கை விரித்துப் பிறந்தவன். வலக்கையில் சுத்தியும் இடக்கையில் உளியும் பிடித்துப் பிறந்திருக்கிறான் என பார்க்க வந்தவர்கள் எல்லாம் பாராட்டினாலும் வீட்டில் உள்ளவர்கள் ஏழு வயது வரை அவனுக்கு சிற்பக்கலை கற்றுக் கொடுக்க  விடவில்லை. ஆதிச்ச பெருந்தச்சன் அவனை அடித்துத் துன்புறுத்திவிடுவார் என்பதுதான் காரணம்.

நந்தியைச் செய்து விட்டு சிவலிங்கம் செய்யலாம் என்று யோசித்தபோது கோவில் வேலை வேகமாக நடக்கிறது. ஒரு வருடத்திற்குள் சுற்றுப்புற கருவறைச் சுவர்கள் எழுப்பப்பட்டு விடும் அதற்குள் சிவலிங்கம் செய்தால்தான் உள்ளே கொண்டு போய் வைக்க சரியாக இருக்கும். நாம் முந்திக் கொள்ளாவிட்டால் புதுக்கோட்டையில் இருந்து எடுத்து வரும் கல்லிலோ, பாண்டிய நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து எடுக்க இருக்கும் கல்லிலோ செய்து வைத்து விடுவார்கள். நம் திருவக்கரைக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை விட்டு விடக்கூடாது என பலரும் சொல்ல, ஆதிச்ச பெருந்தச்சன் சிவலிங்கத்துக்கும் ஆவுடையாருக்கும் தனித்தனிக் கல்லாக தேட ஆரம்பிக்கிறார்.

சிவலிங்கத்தை முதலில் செய்வதா..? இதென்ன கூத்து..? நந்தி தளபதி... காவல் தெய்வம்... நந்தியை முதலில் செய்துவிட்டுத்தானே இறைவனை வரவழைக்க வேண்டும்... அதுதானே முறை... காவலன் இன்றி எஜமானனா..? எஜமானுக்குப் பின்னர் வேலைக்காரன் வரவேண்டுமா..? இது தவறான விஷயம் அல்லவா..? என அவரின் அம்மா புலம்பினாலும் யாரும் கேட்பதாய் இல்லை.

சிவலிங்கம் செய்யும் வேலை துவங்கிய போது சோமதேவனும் அவருடனே இருந்து சிற்ப நுணுக்கங்களை விரைவாய் கற்றுக் கொள்கிறான். சிவலிங்கம் தயாரான போது அதை ஒரு பெரிய வண்டியில் வைத்து காளைகள் இழுக்க , யானை ஒன்று தள்ள சகடப் பெருவழி மூலம் தஞ்சைக்கு எடுத்துச் செல்கிறார்கள். மன்னர் சொன்னது போல் பாதைய ஆட்கள் செப்பனிட்டு... பாறைகள் பதித்து சீர்படுத்தி வைத்திருக்கிறார்கள். வழி நெடுக ஓலைக்குடிசைகள் கட்டப்பட்டு சிற்பிகளும் வீரர்களும் தங்கி இளைப்பாறச் செல்ல வகை செய்து ஒரு போர் வீரனையும் உதவிக்கு வைத்து இருப்பதைக் காண்கிறார்கள்.

வழியெங்கும் மக்களின் அன்பினில் நனைந்து நாலு நாள் நடையில் சென்றடையக் கூடிய தஞ்சையை சுமையின் காரணமாக ஆறு நாளில் அடைகிறார்கள்.  கோவில் கட்டுமானத்தைப் பார்த்த ஆதித்த பெருந்தச்சன் இவ்வளவு பெரிய கோவிலா என்று ஆச்சர்யப்பட்டு மன்னரைப் புகழ்கிறார். மன்னருக்கு ஒரு மாதம் தஞ்சையில் தங்கிச் செல்வதாகச் செய்தி அனுப்பி விட்டு கோவில் திருப்பணி நடக்கும் இடத்தில் தங்குகிறார்.

அவர் அங்கிருக்கும் சமயத்தில் மற்ற தச்சர்கள் கல் தேவைகளைச் சொல்லியும் ஆலோசனைகளைப் பெற்றும் பணி செய்கிறார்கள். அங்கிருக்கும் நாளில்   சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும் பந்தனம் செய்து வைக்கிறார்.  மன்னரிடம் தான் நந்தியை காணிக்கையாகச் செய்து தரவிருப்பதைச் சொல்ல மன்னருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, இதைத்தான் ஒவ்வொரு குடிகளிடமும் எதிர்ப்பார்க்கிறேன் என்று சொல்லி வாழ்த்துகிறார்.

ஊர் திரும்பும் ஆதிச்ச பெருந்தச்சன்  தன் மகனுக்கு தொழில் கற்றுக் கொடுக்க நினைக்கிறார்... அப்போது சிலர் நீ சொல்லிக் கொடுப்பதைவிட மற்றொருவரிடம் பழகினால்தான் அவனால் எல்லாம் கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்ல, அதுவும் சரியென தஞ்சைக் கோவில் பணியில் இருக்கும் பெருந்தச்சர்களிடம் கூட்டிச் செல்ல, ஆதிச்ச பெருந்தச்சனின் மகனுக்கு பாடம் கற்பிக்க கொடுப்பினை வேண்டுமே என ஆளாளுக்கு நான் நீ எனப் போட்டியிட இறுதியில் ஒருவர் மற்றவர்களை அடக்கி சோமதேவனை தன் சீடனாக்கிக் கொள்கிறார்.

தஞ்சையில் தொழில் கற்கும் சோமதேவன்  இரண்டு தீபத்திருநாள் முடிந்து மூன்றாவது தீபத் திருநாள் வர இருக்கும் சமயத்தில் தொழிலில் தேர்ச்சி அடைந்து விட்டாய்... இதுவரை பாரத கண்டத்தில் இல்லாத உயரத்தில் நந்தி செய்து முடித்து விட்டேன். இது நம் குலப்பெருமையை விளங்க வைக்கும் உன்னை வாழ வைக்கும் என்று சொல்லி மகனை ஊருக்கு அழைக்கிறார் ஆதிச்ச பெருந்தச்சன்.

ஊருக்கு வந்த சோமதேவன் செதுக்கி உயர்ந்து நிற்கும் நந்தியைப் பார்த்து 'ஆஹா அற்புதம் அப்பா' என்று சொல்லி அவரை வாழ்த்திப் புகழ்கிறான். ஆனாலும் அவனுக்கு வால் பக்கமாக கல்லில் சோடை இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது அதனால் யாரும் இல்லாத சமயத்தில் தட்டிப் பார்த்து சப்பத்தில் வித்தியாசம் தெரிகிறதா என சோதித்துப் பார்க்கிறான். அப்பா மேல் அபார நம்பிக்கை இருப்பதால் அவர் நல்ல கல்லாகத்தான் தேர்ந்தெடுத்திருப்பார் என தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான்.

ஆதிச்ச பெருந்தச்சன் செய்த 16 மாட்டு வண்டியில் ஒரு நல்ல நாளில் நந்தி ஏத்தப்பட்டு... சுற்றிலும் ஆடாமல் ஆப்பு வைக்கப்பட்டு... பக்கவாட்டுக் கட்டைகள் அழுத்திப் பிடித்து இறுக்கிக் கட்டி... நந்தி முழுவதும் வைக்கோல் பிரி சுற்றி... இரண்டு யானைகள் தள்ள... போர் வீரர்கள் உதவிக்கு வர... கிராமமே பின் செல்ல... சங்கரபாணி ஆற்றுப் பக்கம் வந்து நின்றது.

ஐப்பசி மாதம் என்றாலும் மழை இல்லாததால் ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீர் இருக்க... மெல்ல மெல்ல வண்டியை ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்ல... வண்டியின் முன்பக்க அச்சு முறிந்து தண்ணீருக்குள் இருக்கும் பாறைக்குள் வண்டி சிக்கிக் கொள்கிறது. யானைகள் நெட்டித் தள்ள... அதன் வேகமான தாக்குதல் தாங்காமல் முன் பக்கம் உடைய... பெரிய பெரிய கட்டைகளைக் கொண்டு அண்டங்கொடுத்து தண்ணீருக்குள் விழாமல் நிறுத்தி வைக்கிறார்கள்.

அந்த இடத்திலேயே பலர் சேர்ந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்து புதிய சக்கரத்தைச் செய்கிறார்கள். அதுவரை நந்தி தண்ணீருக்குள் இருக்கிறது.

இந்தச் சமயத்தில் சோமதேவன் குடம் குடமாக நீரெடுத்து நந்திமேல் ஊற்றிக் கொண்டிருக்கிறான். ஒருவழியாக சக்கரம் மாற்றப்பட்டு முன்னே ஆட்கள் மெல்ல இழுக்க... பின்னே யானைகள் தள்ள ஒருவழியாக கரைகடந்து தஞ்சை சகடப் பெருவழிக்குச் செல்கிறது நந்தியைச் சுமக்கும் மாட்டு வண்டி.

தண்ணீரில் நனைந்த நந்தி, சகடப் பெருவழியில் செல்லும் போது வெயிலில் காய, நந்தியைச் சுற்றிப் பார்க்கும் சோமதேவன் திகைக்கிறான். ஆம் எல்லா இடமும் வெயிலில் காய ஒரு இடத்தில் மட்டும் ஈரம் அப்படியே இருக்கிறது.

அப்பாவை அழைத்து வந்து காட்ட, அவருக்கும் அவனுக்கும் அது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த வாக்குவாதம் எதனால்...?

அப்படி என்ன விஷயத்தை நந்தியின் நீர் காயத இடத்தில் சோமதேவன் கண்டுபிடித்தான்..?

நீரில் தவித்து நிலத்துக்கு வந்த நந்தி தஞ்சைப் பெரிய கோவிலை அலங்கரிக்கும் தற்போதைய நந்திதானா...?

அப்பனுக்கும் மகனுக்குமான வாக்குவாதத்தின் முடிவு என்ன ஆனது...?

ஆதிச்ச பெருந்தச்சன் எடுத்த முடிவுதான் என்ன..?

இந்தக் கேள்விக்கெல்லாம் விடையை இங்கு சொல்லிவிட்டால் கதை வாசிக்கும் போது சுவராஸ்யமாய் இருக்காது.

மொத்தமே 33 பக்கம்தான்... ரொம்பச் சிறிய குறுநாவல் என்பதைவிட சற்றே பெரிய சிறுகதை என்பதே சரி.

வாசித்துத் தெரிந்து கொள்ளுங்களேன் கேள்விக்கான விடைகளை...

கதையின் முடிவில் இன்றும் இருக்கும் ஒரு உண்மையை, மக்கள் போற்றும் ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார் பாலகுமாரன். 

அதென்ன உண்மை..?

அந்த உண்மையை இங்கு சொன்னால் கதையையே சொன்ன மாதிரி ஆகிவிடுமே...

ஆம்... கவிழ்ந்த காணிக்கை தொடர்பான உண்மைதான் அது...

வாசிப்புத் தொடரும்... அடுத்த வாசிப்பனுபவத்தில் ஜெயகாந்தனின் 'அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள்'.

இப்போது வாசிப்பில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' இரண்டாம் பாகத்தில் முக்கால்வாசி கடந்து இருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.