மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 22 நவம்பர், 2016

மனசு பேசுகிறது ; நீயா... நானா...

Image result for நீயா நானா

ன்னும் புதிய புராஜெக்ட்கள் எதுவும் ஆரம்பிக்காததால்... அதான் எண்ணெய் விலை குறைஞ்சி போச்சுன்னு புராஜெக்ட்டை எல்லாம் நிப்பாட்டி வச்சிட்டானுங்களே... நம்ம ஊர்ல மட்டுந்தான் எண்ணெய் விலை கூடிக்கிட்டே போகும்.. சரி விடுங்க... நம்ம கதைக்கு வருவோம். புராஜெக்ட் இல்லையா... அதனால அலுவலகத்தில் பணி... அதுவும் எப்படி... கிராமங்கள்ல நாலஞ்சு கோவில் இருக்கும் எல்லாத்துக்கும் ஒருத்தர்தான் மணி அடிப்பார் அப்படித்தான் அலுவலகத்தில்... எவன் எவனுக்கு வேலை இருக்கோ எல்லாத்தையும் நம்ம தலையில கட்டுவானுங்க... வேர்ட், எக்ஸல், அப்புறம் சாப்ட்வேர் பக்கம், டெஸ்டிங்... என எல்லாப் பக்கமும் சுழற்றி ஆடணும்... இருந்தாலும் வேலை அதிகமில்லைதான்... 

அலுவலகத்தில் ஒரு ஆறுதல் இணைய வசதி உண்டு என்பதே... அதுவும் இல்லைன்னா 9 மணி நேரம் என்பது பெரும் யுகமாத்தான் இருக்கும். நல்லவேளை தப்பிச்சோம்... என்னோட செல்போனில் தமிழ் டைப் செய்வது பிரச்சினை... நிறைய வாசிக்கலாம்... யூடிப்பில் நிறைய பார்க்கலாம். வேலை செய்து கொண்டிருக்கும் போது சிவக்குமாரோ, சுகி சிவமோ, சாலமன் பாப்பையாவோ, ராஜாவோ. லியோனியோ பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பப்ப வாட்ஸப்பில் மனைவியுடனோ குழந்தைகளுடனோ அரட்டை அடிக்கலாம். முகநூலில் நண்பர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம். நிறைய வரலாறு சம்பந்தமான வீடியோக்களைப் பார்க்கலாம். அப்படித்தான் குடவாசல் திரு. பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் சோழர்கள் சம்பந்தமான வீடியோக்களைப் பார்த்தேன்... கல்வெட்டுக்கள் குறித்தான எத்தனை செய்திகள்... இராஜராஜனைப் பற்றி அறியாத செய்திகள் எத்தனை எத்தனை... அவர் சொல்லியிருக்கும் செய்திகளால் இராஜராஜன் என்னும் மிகச் சிறந்த மனிதன் மனசுக்குள் மிக உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு என்னைப் பற்றி இன்னும் வாசி.. வாசி... என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரின் சதய நட்சத்திர தினத்தை இன்று சாதிக்குள் இறுத்திப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. 'பாரி எம் இனத்தான்... அவனை இந்த இனத்தான் உரிமை கொண்டாடுகிறான்.... எனவே நாம் அவனுக்கு விழா எடுக்க வேண்டும்' என்று என் நண்பர் முகநூலில் இட்டிருந்தார். அவர் எந்த இனத்தான் உரிமை கொண்டாடுவதாகச் சொன்னாரோ அந்த இனத்தானான நாந்தான் முதல் விருப்பம் தெரிவித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். படித்தவர்களே இப்படி இருக்கும் போது... என்னத்தைச் சொல்ல...

ராஜராஜனைப் பற்றி நிறையப் பேசலாம்...  இன்னொரு பதிவில் பேசலாம். இன்னைக்கு 'நீயா நானா' பழைய நிகழ்ச்சிகள் சில தலைப்புக்காகப் பார்த்தேன். ஒரு சில தலைப்புக்களை எடுத்துப் பேசும் போது கோபிநாத் தேவையில்லாமல் பேசுவதுண்டு... பெரும்பாலும் நீயா நானா பார்ப்பதில்லை... இன்று பார்க்கலாமே என்று மூன்று வித்தியாசமான தலைப்புக்களில் நிகழ்ந்த விவாதத்தைப் பார்த்தேன்... உண்மையிலேயே நல்ல தலைப்புக்கள்... நல்ல விவாதம்... சொல்வதெல்லாம் உண்மையைப் போல் காங்கிரசில் இருந்து கல்தா பெறப் போகும் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சியில் அடிதடி நிகழ்த்தினார் என்ற நிகழ்வுகளைப் பார்க்காமல் இப்படி விவாதங்களைப் பார்ப்பது சிறப்பு... பெண்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற விவாதம் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வந்திருந்தார். ஒவ்வொருவரின் கதையைக் கேட்கும் போது வேதனை மட்டுமே மிஞ்சியது... சிலர் சொல்லும் போது வந்த அழுகையை அடக்க நமக்குள் அழுகை வெளிவரத் துடிக்கிறது. சித்தாள் ஆணாக இருந்தால் முன்னூறு அதே பெண் என்றால் இருநூறு என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆண்களைவிட பெண்களுக்கே வேலை அதிகம் என்றாலும் சம்பளவிகிதத்தில் சித்தாள் என்றில்லை எல்லா வேலையிலும் பெண்களுக்கு ரொம்பக் கம்மிதான்.... 14 மணி நேரம் நின்று கொண்டே இருக்க வேண்டும்... வெளிச்சத்தைப் பார்த்ததே இல்லை... 1000 பீடி சுற்றினால் ஒரு ரூபாய்... என நிறையச் சொன்னார்கள்... வேதனையைப் பகிர்ந்தார்கள்.

இரண்டாவதாகப் பார்த்தது தேவையில்லாத செலவு செய்கிறார்கள் என்பதாக கணவன் மனைவிகள் எதிர் எதிர் அணியில் பேசினார்கள். கஞ்சத்தனமாக இருக்கிறார் என மனைவியும் மனைவி குழந்தைகளுக்கு எது வேண்டும் என்றாலும் வாங்கிக் கொடுக்கும் என்னால் இருநூறு ரூபாய்க்கு செருப்பு வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று இல்லை ஏனோ மனம் வரவில்லை என்று கணவனும் பேச, சாப்பாட்டுக்கு கணக்குப் பார்ப்பார்... சேலை எடுக்க கார் எடுத்துப் போவாள்... இருக்கு பயன்படுத்திக்குவோம் என்றும்... என் பணத்தை அதிகமாக செலவு செய்கிறாள் எனவும் பேசினார்கள். நான் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை செலவு செய்வதை விரும்பவில்லை என்று யார் யார் சொல்கிறீர்கள் கை தூக்குங்கள் என்று கோபிநாத் சொன்னதும் சிலர் கை தூக்கினார்கள். பின் யாருக்காக சம்பாதிக்கிறார்கள்... ஊதாரியாகச் செலவு செய்ய நினைக்கும் மனைவியருக்கு கணவனின் கஷ்டம் தெரியாதா என்ன... இருந்தாலும் நல்லதொரு நிகழ்ச்சிதான் இதுவும்.

கடைசியாகப் பார்த்ததும் அசைவத்துக்கு மாறிய சைவமும் சைவத்துக்கு மாறிய அசைவமும் எதிர் எதிர் அணியில்... சாப்பாடு பற்றித்தான் பேசினார்கள்... குழந்தைக்காக அசைவத்துக்கு மாறியதாக ஒரு பெண் சொன்னார். மனைவி, குழந்தைகளுக்காக அசைவத்துக்கு மாறினாலும் இன்னும் விருப்பப்பட்ட சாப்பிடவில்லை என்று ஒருவர் சொன்னார். எங்கள் குழுவில் சைவமாக ஒருவர் இருந்தால் அவரை எதுக்காக எங்க கூட சாப்பிட வந்தேன்னு சொல்வோம் என்று ஒருவர் சொன்னபோது கோபிநாத் அதை மறுத்தார். ஒரு பந்தாவுக்காக... மற்றவர்கள் தன்னை தனியாகக் கவனிப்பதாலேயே சைவத்துக்கு மாறியதாகச் சொன்னார். எல்லாரும் டாக்டர் சொன்னதால் அசைவத்துக்கு மாறினேன் என்று சொன்னபோது அதையும் கோபிநாத் மறுத்தார். டாக்டர் சொன்னார் என்று சொல்வதெல்லாம் ஜால்ஜாப்பு வேலை... மருத்துவமனையில் ஒட்டியிருக்கும் டயட் லிஸ்டில் முட்டையும் இருக்கும் கீரையும் இருக்கும் என்றார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு.சமஸ் அவர்கள் நான் சாப்பாட்டுப் பிரியன் என்றதுடன் காபி ஒவ்வொரு சிப்பிலும் ஒவ்வொரு விதமான காபி என்றார். சூடான இட்லிக்கு தனிச் சுவை என்று சொன்னார். நிறையப் பேசினார்.

நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது கவலைகளை மறந்து பார்க்க முடிகிறது. சிவக்குமார் அவர்களின் மகாபாரத உரையை பார்க்க கேட்க வேண்டும் என்ற ஆவல். இணையத்தில் கிடைக்க வில்லை... தேடிக் கொண்டிருக்கிறேன்... அதேபோல் இராஜராஜன் குறித்த வீடியோக்களின் தேடலும் தொடர்கிறது. இடையே சில வாசிப்புக்கள்... யவனராணி முடிஞ்சாச்சு... இப்போ கை பரவாயில்லை... இன்னும் கட்டியை கிழித்து எடுத்த காயம் ஆறவில்லை என்றாலும் வலி இல்லாதிருக்கிறது. பயணிக்கும் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்றால் பரவாயில்லை ஏற்றத்தை மட்டுமே நிர்ணயித்து ஏற விடாமல் மூச்சிரைக்க வைக்கும் போது கல்லாய் சமைந்து கிடக்கும் மனசுக்குள் இதுபோன்ற வீடியோக்களும் இளையராஜாவின் பாடல்களுமே மனசின் வலியை மாற்றுகின்றன.

புதுகையில் பதிவர் விழா வைக்கலாம் என முத்து நிலவன் ஐயா சொல்லியிருந்தார்... நிஷா அக்கா, ஜெயா அக்கா போன்றோர் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள். மாவட்ட விழாவாக என்பதை விட முடிந்தளவு மாநில விழாவாகச் செய்யலாம். குறைந்த நாட்களே இருந்தாலும் விழாவை முன்னெடுக்கும் முத்துநிலவன் ஐயாவுக்கு மற்ற நண்பர்கள் கை கொடுக்க நல்லதொரு விழாவாக நடத்திவிட முடியும்... முன்னெடுங்கள் நட்புக்களே...
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

'இப்போ கை பரவாயில்லை... இன்னும் கட்டியை கிழித்து எடுத்த காயம் ஆறவில்லை' - உடல் நலத்திலும் கவனமாக இருங்கள் நண்பா.
இந்தப் பக்கம் எப்பத்தான் வருவீங்க? நீங்கள் வருவதானால் இங்கொரு (மினி அல்ல மேக்ஸி) பதிவர் சந்திப்பே நடத்திவிடுவோம்!

ஸ்ரீராம். சொன்னது…

//இப்போ கை பரவாயில்லை... இன்னும் கட்டியை கிழித்து எடுத்த காயம் ஆறவில்லை என்றாலும் வலி இல்லாதிருக்கிறது.

Take care Kumar.

//அப்பப்ப வாட்ஸப்பில் மனைவியுடனோ குழந்தைகளுடனோ அரட்டை அடிக்கலாம்.//

வாட்ஸாப்பில் இப்போது வீடியோ கால் வேறு வந்து விட்டது. ஆனால் குவாலிட்டி சரி இல்லை!

S.P.SENTHIL KUMAR சொன்னது…

ஏராளமான விஷயங்களை சொல்லிச் சென்றது பதிவு. அருமை.
உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.

Anuprem சொன்னது…

நாங்களும் இப்போது எல்லாம் இப்படித்தான்....சமைக்கும் போது,,,தைக்கும் போது என சில வேலைகளை செய்யும் போது யூ tube இல் கேட்டபது...

இப்பொழுது ஜெயந்தி பாலகிருஷ்ணன் அவர்களின் உரைகளை கேட்கிறோம்....மிகவும் நன்றாக இருக்கிறது...

குடவாசல் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் சோழர்கள் சம்பந்தமான வீடியோக்கள்...நல்ல தகவல்...விரைவில் பார்க்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த முறையாவது உங்களை சந்திக்க முடியுமா...?

Yarlpavanan சொன்னது…

புதுகையில் பதிவர் விழா வைக்கலாம் என முத்து நிலவன் ஐயா சொல்லியிருந்தார்... நிஷா அக்கா, ஜெயா அக்கா போன்றோர் சில விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள். மாவட்ட விழாவாக என்பதை விட முடிந்தளவு மாநில விழாவாகச் செய்யலாம். குறைந்த நாட்களே இருந்தாலும் விழாவை முன்னெடுக்கும் முத்துநிலவன் ஐயாவுக்கு மற்ற நண்பர்கள் கை கொடுக்க நல்லதொரு விழாவாக நடத்திவிட முடியும்... முன்னெடுங்கள் நட்புக்களே...