மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : மாற்றாந்தாய்

Image result for இரண்டாவது மனைவி
முதல் மனைவியின் இறப்புக்குப் பிறகு தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள, அந்த இரண்டாம் தாரம் மூத்தவளின் குழந்தைகளுக்கு மாற்றாந்தாய் ஆகிறாள். அப்படி மாற்றாந்தாயாக வருபவள் தன் கணவனின் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறாள்... அவர்கள் மனதுக்குப் பிடித்தவளாகவா..? அல்லது அவர்கள் வெறுப்பவர்களாகவா..?

இரண்டாம் தாரம் என்பது மனைவி இறந்த பிறகுதானா...? என்ற ஒரு கேள்வியை முன்னிறுத்தினால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனைவி இருக்கும் போது அவளுக்கு குழந்தை இல்லை என்று மலடி பட்டம் கட்டி, அவளின் தங்கையோ அல்லது வேறு பெண்ணையோ மணம் முடித்துக் கொள்வதும் உண்டு. அப்படி வேறு பெண்ணைக் கட்டினால்  அதற்கு வாரிசுக்காக அவளைக் கட்டிக் கொண்டேன் என்று சப்பைக்கட்டுக் கட்டுவது... மனைவியின் தங்கையைக் கட்டிக் கொள்வது... இதற்கு எந்த சப்பைக்கட்டும் தேவையில்லை... உங்க மக எங்கூட வாழணுமின்னா இவளைக் கட்டித்தாங்கன்னு கேக்கிற ஆட்களும் உண்டு... சினிமாவில் இது சர்வசாதாரணம். இது போக எங்காவது போன இடத்தில் பார்த்துப் பழகி தன்னோட கூட்டி வந்து குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் பல தார மணத்தை யாரும் ஆதரிப்பதில்லை... அப்படியிருந்தும் மனைவியின் இறப்பின் பின்னே கணவன்... நல்லாக் கவனிங்க கணவனின் இறப்பின் பின்னே மனைவி அல்ல... மனைவியின் இறப்பின் பின்னே கணவன் குழந்தைகளுக்காக என்று தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளவே இன்னொரு பெண்ணை மணக்கிறான்... குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறான். என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு தாய் வேண்டும் என்று சொல்லி கட்டுபவன் பத்தாவது மாதத்தில் அவள் மூலமாக பிள்ளை பெற, மூத்தவளின் குழந்தைகளுக்கு தொடங்குகிறது தலைவலி.

சமீபத்தில் 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா, முகநூலில் பகிர்ந்து கொண்ட வீடியோவே இந்தக் கட்டுரை எழுதக் காரணம்... அதில் இலங்கையில் ஒரு மாற்றாந்தாய் சிறுமியை அடித்துத் துவம்சம் செய்வதை மனம் கனக்கப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கொடுமையை தடுக்க இயலாத நிலையில் ஒருவர் அதை வீடியோவாக எடுத்துப் பகிர்ந்து அது போலீசாருக்குத் தெரிந்து அந்தத் தாயை சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற விவரமும் அறிய முடிந்தது. எத்தனை கொடுமை பாருங்கள்... ஒரு குழந்தையை பெற்றவளால் எப்படி இன்னொரு குழந்தையை... தாயில்லாத குழந்தையை... கண் மண் தெரியாமல் அடிக்க முடிகிறது. இவர்கள் மாற்றாந்தாயா... கண்டிப்பாக இல்லை... இவர்கள் அரக்கிகள்... பிள்ளை பெற்ற பிசாசுகள்... ஆனால் எல்லா மாற்றாந்தாயும் இப்படியா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... இரண்டாம் தாரமாக வந்து மூத்தவளின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பார்த்த... பார்க்கின்ற தாய்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எங்கள் உறவில் கூட அப்படிப்பட்ட நல்ல தாய்களைப் பார்த்திருக்கிறேன். திருமணமாகி வரும்போது கணவனுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள்... தன் குழந்தைகளாக பார்த்துப் பார்த்து வளர்த்தாள்... அவளுக்கும் இரண்டு ஆக... இப்ப நாலும் என் குழந்தைகளே என எந்த வேறுபாடும் இல்லாமல்... பாசமாய்... மூத்தவன் செய்யும் சேட்டைகளை எல்லாம் தன்னுள் வாங்கி... அழுது... இவர்களுக்காகவே தன் குடும்பத்து உறவுகளை எல்லாம் ஒதுக்கி மூத்தவளின் குடும்ப உறவுகளோடு பாசமாய் பயணிக்கும் ஒரு தாயைப் பார்த்திருக்கிறேன்.

தான் இரண்டாம் தாரம்தான்... ரொம்ப சின்ன வயதில் தாயை இழந்த குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போகிறோம் என்று தெரிந்தே வந்து தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லி மற்றவர்கள் உனக்கென்று ஒரு குழந்தை கண்டிப்பாக வேணும் என்று வற்புறுத்தவே முதல் குழந்தை பிறந்தபோதே கருத்தடை ஆபரேசன் செய்து கொண்டு மூன்று குழந்தைகளையும் வேறுபாடு இல்லாமல் வளர்க்கும் ஒரு இளம் வயது தாயையும் பார்த்திருக்கிறேன்.

அக்கா இறந்த பிறகு அவளின் மூன்று குழந்தைகளுக்கு தாயாக வந்து தானும் ஒரு பிள்ளை பெற்று இன்று வரை தனக்குப் பிறந்தவனை விட மற்ற மூவரின் மீதும் அதிக பாசம் காட்டும் தாயையும்... அம்மா... அம்மா என அவரை அன்போடு அழைக்கும் மூத்தவளின் பிள்ளைகளையும் பார்த்திருக்கிறேன்.

நம் முப்பாட்டங்களின் காலத்தில் இருதார மணம் என்பது சாதாரண விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. தாத்தாக்களின் காலத்தில் அக்கா, தங்கை இருவரையும் கட்டிக் கொண்டு வருவது என்பது பெரிய விஷயம் அல்ல... தனக்கு பிள்ளை இல்லை என்றாலும் தன் தங்கை பெற்ற பிள்ளைகளை பாராட்டி சீராட்டி வளர்த்து இன்று வரை அவர்கள் இருவரில் யாருடைய பிள்ளை இவர் என்று நம் தலைமுறையை யோசிக்க வைத்த பெண்களையும் பார்த்திருக்கிறேன்.

நிஷா அக்காவின் வீடியோவில் பார்த்தது போல் மூத்தவளின் பிள்ளைகளை துன்புறுத்தும் மாற்றாந்தாய்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறது. மனைவி இறந்த பின்னர் குழந்தைகளுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஒருவரை, மூத்த மகளின் திருமணத்திற்குப் பிறகு உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்று சுற்றி இருப்பவர்கள் கரைக்க... கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்களே... மெல்ல மெல்ல மாறி எனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமென மறுமணம் செய்து குழந்தைகளையும் பெற்று... ஏதோ ஒரு சூழலில் இரண்டாம் மனைவியின் மோகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி காத்திருந்த மகளை அடித்துக் கொன்றதில் அவருக்கும் பங்குண்டு என்று செய்தி அறிந்த போது இரண்டாம்தாரம் எப்படிப்பட்டவளாய் வாய்த்திருக்கிறாள் என்பதை உணர முடிந்தது.

சினிமாக்களில் இரண்டாம்தாரம் என்றால் ரொம்ப ரொம்ப மோசமாகக் காட்டுவார்கள்... நிஜ வாழ்க்கையில் அப்படியான தாய்மார்கள் இருந்தாலும் மாற்றாந்தாய்களிலும் மனசுக்குள் நிற்கும் தாய்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எங்க தாத்தாவுக்கு ரெண்டு பெண்டாட்டி ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்டுல வம்பு சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றும் எங்க பாட்டனுக்கு மூணு பொண்டாட்டி பேராண்டி.. மூணு பேருக்கும் சேத்து பதினாறு புள்ளைங்க... எங்க தாத்தா மூணாந்தாரத்துப் புள்ள... ஆனா எல்லாரும் ஒண்ணாத்தான் வாழ்ந்திருக்காக... என்று உறவுக்காரர் சொல்ல, இன்றைக்கு அப்படி மூணு பொண்டாட்டிகள் ஒன்றாக வாழ முடியுமா என்று தோன்றிய போதே... மூன்று பொண்டாட்டிகளை வைத்து வாழ்க்கையை ஒட்ட முடியுமா என்ற கேள்வியும் தோன்றியது. சிலர் ஓட்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள்... :)

வரலாறுகளை புதினமாக்கும் போது கதை ஆசிரியர்கள் இரண்டு தார மூன்று தார வாழ்க்கைகள் சர்வசாதாரணமாய் இருந்தது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் உடையாரில் ராஜராஜனுக்கு நிறைய மனைவிகள் என்கிறார். இராஜேந்திரனுக்கு ரெண்டு மனைவி இருந்தாலும் பரவை என்ற தேவரடியாள் பெண்ணுடன் கூட்டு இருக்கு என்று சொல்கிறார். பிள்ளைப் பேறுக்காக தாய் வீடு சென்றிருகும் மனைவி இருக்க அருண்மொழிப் பட்டன் என்ற உபசேனாதிபதியை இராஜராஜி (சில இடங்களில் இராஜேஸ்வரி) என்ற பெண் திருமணம் செய்ய விரும்புவதாகவும் உன்னை நினைக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்... உன் சிறப்பான வாழ்க்கைக்கு அது உதவும் என்று கருவூர்த் தேவர் என்ற ராஜரிஷி சொல்வதாய் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அந்த காலத்தில் பலதார மணம் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முற்றும் துறந்த முனிகள் கூட நாலைந்து கல்யாணம் பண்ணிக்கொள் என அட்வைஸ் பண்ணுகிறார்கள். இன்று முனிகளே நிறைய வைத்துக் கொள்கிறார்கள்... ஆட்டம் பாட்டம் போட்டு மாட்டிக் கொள்வது தனிக்கதை. 

சமீபத்தில் நம்ம கில்லர்ஜி அண்ணா எழுதிய ஒரு கதையின் தொடர்ச்சியாக அன்பின் ஐயா துரை. செல்வராஜூ அவர்கள் தனது தஞ்சையம்பதியில் ஒரு கதை எழுதியிருந்தார். அருமை... முடிவுதான் அதில் மிக முக்கியமானது... தங்களை வீட்டை விட்டு விரட்டிய பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்பது அவனுக்குத் தெரியாது என்பதாய் முடித்திருப்பார்.  மாற்றாந்தாய்களை பிள்ளைகளை துன்புறுத்துவதைவிட கொடியது பெற்ற பிள்ளை பெற்றவர்களை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது... வீட்டை விட்டு அடித்து விரட்டுவது போன்றவை.

இப்படித்தான் ஒரு புள்ளியில் ஆரம்பித்து... வேறு வேறு புள்ளிகளுக்கு நகர்ந்து விடுகிறது எழுத்து... பேச ஆரம்பித்தது மாற்றாந்தாய் குறித்து என்றாலும் எங்கெங்கோ பயணப்பட்டு விட்டேன் பாருங்கள்.... மாற்றாந்தாய் என்பவள் மற்றொரு தாயாக இருந்தால் எவ்வளவு சந்தோஷம்.
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

அருமை
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

KILLERGEE Devakottai சொன்னது…

என் மனதை கனக்க வைத்து விட்டது நண்பரே விரிவான அலசல்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மாற்றாந்தாய் மற்றொரு தாய் என்ற நிலையில் பலரை நான் பார்த்துள்ளேன்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மாற்றாந்தாய் மற்றொரு தாயாக இருந்தால் மகிழ்ச்சியே

சாரதா சமையல் சொன்னது…

பதிவை படித்ததும் மனம் கனத்தது என்னவோ உண்மை.

ஸ்ரீராம். சொன்னது…

அந்த வீடியோவைப் பார்த்து மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பகிர்வு. வீடீயோ நானும் பார்த்து கலங்கினேன்....