மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 டிசம்பர், 2013

கிராமத்து நினைவுகள் : நீர் பாய்ச்சுதல்


கிராமத்து நினைவுகள் எப்போதும் நினைத்தாலும் மாலை நேரத்தில் காற்றில் கீதமிசைக்கும் பயிரைப் போல அழகானதாய்... வயல் வெளியில் வீசும் இளங்காற்றைப் போல் இனிமையானதாய் இருக்கும். அப்படி இதுவரை நிறைய நினைவுகளை அசை போட்டாச்சு. இன்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய அனுபவ நினைவலைகளைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

எங்கள் ஊரில் கண்மாய் நிறைந்தால்தான் விவசாயம் செய்வார்கள். அதிலும் கண்மாயில் சின்ன முட்டு, பெரிய முட்டு என்று இரண்டு மேடான பகுதிகள் இருக்கின்றது. மழை பெய்து பெரிய முட்டு மறையும் அளவுக்கு தண்ணீர் நிறைந்தால் அந்த வருடம் விளைச்சலுக்குப் போக தண்ணீர் மிச்சமிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை வராது என்பது வழிவழியாக எங்கள் ஊர் பெரியவர்கள் வைத்திருக்கும் ஒரு கணக்கீட்டு முறை.

கண்மாயில் பெரிய முட்டு மறையுமளவுக்கு இல்லாமல் சின்ன முட்டே மறைந்திருக்க மழை வரும் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்து மழை இல்லை என்றால் தண்ணீர் பாய்ச்சும் போது கண்மாயில் தண்ணீர் குறையக் குறைய மடை வழியாக தண்ணீர் ஏறிப் பாய்ந்து வயலுக்குச் செல்லாது. அப்போது தண்ணீரை இறைத்துத்தான் பாய்ச்ச வேண்டும்.

ஆரம்ப நாட்களில் மடையை மறைத்துக் கூட தண்ணீர் கிடக்கும். தண்ணீருக்குள் இறங்கி சரியாக மடையின் துவாரத்தைத் திறந்து தண்ணீரைத் திறந்துவிட்டால் குபுகுபுவென கண்மாய்க் கரைக்கு அந்தப்புரத்தில் உள்ள மடவாய் வழியாக தண்ணீர் வெளியேறி வாய்க்காலில் புரண்டு ஓடி வயலை அடையும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குறையக் குறைய வேகமும் குறைத்து ஒரு கட்டத்தில் தண்ணீர் ஓடாது நின்றுவிடும்.

எங்கள் ஊரில் கண்மாய் தாழ்வாகவும் வயல்வெளிகள் மேடாகவும் ஆகிவிட்டன. எனவே தண்ணீர் ஏறிப் பாய்வது என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே.  பிறகு தண்ணீரை இறைத்துத்தான் பாய்ச்சுவோம். மடைக்கு அருகில் மூன்று கம்புகளை நட்டு மேலாக சேர்த்துக்கட்டி தண்ணீர் பக்கமாக இரண்டு கம்புகளுக்கும் இடையில் ஒரு கம்பைக் கட்டி தண்ணீர் இறைத்து ஊற்றுவதற்கு ஏற்றார்போல் மணல் மூடை, கொழுஞ்சிச் செடிகள், தண்ணீருக்குள் கிடக்கும் ஒரு வகை கீரைக்கொடி என எல்லாம் போட்டு மேடை அமைத்து வைத்துவிட்டால் ஊரார் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்வார்கள்.

எல்லாருடைய வீட்டிலும் எரவாமரம் என்று ஒன்று தண்ணீர் இறைப்பதற்காக வைத்திருப்பார்கள். மூன்று பக்கமும் அடைத்து சற்றே வளைந்து நீண்டிருக்கும். மேலே கைபிடிப்பதற்கு வாகாக உருண்டையான மண்வெட்டிப் பிடிபோல ஒன்றை வைத்துக் கட்டியிருப்பார்கள். இது ஆண்கள் தண்ணீர் இறைக்க உபயோகிப்பது ஆகும். ஆண்கள் இல்லாத குடும்பத்தில் பெண்கள் சிறிய கொட்டாப்பெட்டியில் இரண்டு பக்கமும் பிடிக்கும்படியாக கயிறு கட்டி வைத்திருப்பார்கள். இருபுறமும் இரண்டு பேர் நின்று தண்ணீரை மோந்து மோந்து ஊற்ரி இறைப்பார்கள். இந்த முறையில் தண்ணீரை மோந்து இறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் தண்ணீரை மோக்கும் போது வலது கை மேலும் தண்ணீரை ஊற்றும் போது வலது கை கீழாகவும் இருவருக்கும் ஒரே சமயத்தில் இயங்க வேண்டும். நானும் இந்த முறையில் அம்மாவுடனும் அக்காவுடனும் இறைத்திருக்கிறேன்.

ஆண்கள் எரவாமரத்தை வைத்துதான் இறைப்பார்கள். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கட்டிய கம்பில் எரவாமரத்தைக் கட்டி தண்ணீர் மோக்கும் போது தரை தட்டுகிறதா எனப்பார்த்து சரி பண்ணி இறைக்க ஆரம்பித்தார்கள் என்றால் இரவு முழுவதும் இறைப்பார்கள். இரண்டு கையையும் வைத்து எரவாமரத்தை பின்னுக்கு இழுத்து தண்ணீர் மோந்து தொழைமேடை மேலே தூக்கி ஊற்றுவார்கள். கால் ஏக்கர் அரை ஏக்கருக்கு எல்லாம் தண்ணீர் இறைத்தே பாய்ச்சி விடுவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு எரவாமரம் போட்டு இரண்டு பேர் நின்று இறைப்பார்கள்.எங்கப்பாவுடன் அண்ணன்கள் தண்ணீர் இறைத்தனர். பின்னர் நானும் தம்பியும் ஒரு மரத்தில் மாற்றி மாற்றி இறைக்க அப்பா ஒரு மரத்தில் இறைப்பார்கள். 


தண்ணீர் இறைக்கும் அலுப்புத் தெரியாமல் இருக்க அழகான பாடலைப் பாடுவார்கள்.  அந்தப்பாடல் பத்தில் இருந்து ஆரம்பித்து நூற்றிப் பத்துவரை போய் மீண்டும் பத்துக்கே திரும்பி வரும். இதை பிள்ளையார் என்ற கணக்கில் வைப்பார்கள்.ஒருமுறை 110 வரை போனால் ஒரு பிள்ளையார் என்பது கணக்கு. பாடலை ஆரம்பிக்கும் போது பத்தோடிப் பாய... பதினொன்னுகான் ஒண்ணு... பதினொன்னுகான் ரெண்டு... எனப் போகும்... நூற்றிப் பத்துவரை போயி பின்னர் மீண்டும் திரும்பி பத்துக்கே வருவார்கள். இந்தப் பாடலை ராகத்துடன் அழகாகப் பாடுவார்கள். இந்தச் செய்யிக்கு இத்தனை பிள்ளையார் போதும் என்பார்கள். ஒரு சில வயல்கள் ரொம்ப தூரத்தில் இருக்கும் அந்த வயலில் தண்ணீர் தலைவைத்துப் பாய ஆரம்பிக்கவே இரண்டு மூன்று பிள்ளையார் பாடவேண்டும்.

இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக் குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள். அந்தளவுக்கு அவரது பாடல் பிரபலம்... அந்தக் குரல்... அவரது ஏற்ற இறக்கத்துடனான பாடல் பாடும் அழகு என எல்லாமே இரவில் அவ்வளவு அழகாக இருக்கும்.

அப்புறம் தண்ணீர் பாய்ந்து ஓடும்போது மற்ற வயல்களுக்கு தண்ணீர் உடைத்துக் கொண்டு போகுதா... நண்டுச்சிலவு வழியாக தண்ணீர் போகுதா... இல்லை யாரும் வரப்பில் ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்களா எனப் பார்த்து அடைக்க வேண்டும். இல்லையேல் காலில் அட்டை கடிக்க நின்று தண்ணீர் இறைத்தும் பயனில்லாமல் போகும்.

ஒரு சில சமயங்களில் மடை திறந்து தண்ணீர் பாய்ச்சியே விளைந்து கடைசியாக ஒரு தண்ணீர் அல்லது இரண்டு தண்ணீர் பற்றாக்குறை வரும். அப்போதெல்லாம் எரவாமரம் போட்டு இறைக்காமல் மோட்டார் வைத்து மணிக்கு இவ்வளவு பணம் எனக் கொடுத்து இறைத்து விளைய வைத்துவிடுவார்கள்.

வயலுக்கு தண்ணீர் இறைத்தால் இரண்டு தோளும் வலி பின்னி எடுக்கும் இருந்தாலும் தண்ணீர் சலசலவென ஓடி வெடிவோடிப் போய்க்கிடக்கும் வயலில் பாய்ந்து வெடிவெல்லாம் நிரம்பி கதிர் சலசலவென காற்றில் ஆடிச் சிரிக்கும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

*** தண்ணீர் இறைக்கும் படம் தேடியபோது வாய்க்காலில் தண்ணீர் இறைக்கும் இந்தப்படங்களே கிடைத்தது. கண்மாயில் தண்ணீர் இறைக்கும் படம் இணைத்தில் இல்லை. இந்தப் படத்தை இணையத்தில் பகிர்ந்தவருக்கு நன்றி.

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
பதிவை மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்....படங்களைப்பார்க்கும்போது..எம்தேசத்தின் நினைவுகள் ஒருதடவை முட்டி மோதியாது..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி சொன்னது…

எரவாமரத்தை பின்னுக்கு இழுத்து தண்ணீர் மோந்து தொழைமேடை மேலே தூக்கி ஊற்றுவார்கள். //ஆஹா..என்ன வார்த்தை கிராமத்துவார்த்தை.சென்னையிலே இதுபோன்று காணும் வாய்ப்பு மிகக்குறைவு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் இனிமையான நினைவலைகள்... வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

எனக்குத் தெரியாத விவரங்கள். சுவையாக இருந்தது குமார்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

nice..!

அம்பாளடியாள் சொன்னது…

எமக்கும் மறக்க முடியாத நினைவாகத் ததும்பும் இன் நினைவுகளை
மீண்டும் ஒரு முறை மனக் கண்ணில் நிறுத்திய தங்களுக்கு என்
நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோதரா .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய நினைவுகள்.....

த.ம. 5

மகேந்திரன் சொன்னது…

சில கணங்கள் அப்படியே
கிராமங்களின் வயல்வெளிக்கு
அழைத்துச் சென்றது பதிவு.
மனம் சிறகடித்து
==
ஏலேலந்தம் ஏலேலந்தம்
ஏற்றுமானூர் ஏலேலந்தம்
ஏற்றமிங்கு இறைக்க வந்தோம்
ஏர்பிடித்த வயல் நிறைக்க...
==
இப்படி பாட்டுப் பாட தோன்றுகிறது சகோதரரே...

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

Nice writings...!!

கோமதி அரசு சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இந்த அருமையான் கிராமத்து நினைவுகள் பதிவு.
வாழ்த்துக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html