மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 12 ஜூலை, 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்


ங்களுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அதன் மீது வேண்டிக்கொள்ளுங்கள். இந்த நகரத்தில் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நேரலாம்.  ஆனால், மரணம் மட்டும் நேர்ந்துவிடக் கூடாது. ஏனெனில்... யாருமற்று, காரணமற்று, வாடகை வீடுகளிலோ, பூங்காக்களிலோ, சாலை ஓரங்களிலோ, மனம் இறுகி மரித்துப்போகிறவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் இந்த நகரத்துக்குத் தெரியவில்லை. கோபமாகக் கேட்டால், 'போய்ட்டாரா? தூங்கிட்டு இருக்கார்னுல்ல நினைச்சேன்’ என்று இரக்கம் இல்லாமல் பொய் சாட்சி சொல்வார்கள்.
மணிமேகலை என் ரயில் சினேகிதி. சட்டக் கல்லூரியில் படிக்கும் காலங்களில் திருநெல்வேலி - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயிலில் எப்போதும் சிரித்த முகத்தோடும் வெள்ளந்திப் பேச்சோடும் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டு இருந்தவள். தினமும் அவ்வளவு கனமான வெள்ளரிக்காய் பையோடு ஓடி வந்து மூச்சிரைக்க ரயிலில் ஏறும்போது பாவமாக ஒரு சிரிப்பு. அத்தனை வெள்ளரிக்காய்களையும் விற்று முடித்து வெறும் பையோடு ரயிலில் இருந்து குதித்துக் கீழே இறங்கும்போது திரும்பிப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்பு. அவ்வளவுதான் எங்கள் நட்பு. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய ஜவுளிக்கடை ஒன்றில் விலை உயர்ந்த புடைவைகளை விரித்துப்போட்டு அத்தனை பெண்களுக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த பெரிய மனுஷியாக மணிமேகலையைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.
பார்த்தவுடன் என்னைக் கண்டுபிடித்துவிட்டாள். ஓடிவந்து, 'நீங்க... நீங்க...’ என்றாள். 'ஆமாம்’ என்று சொன்னதும் அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். ஓடிப்போய் யாரிடமோ கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கிவிட்டு என்னோடு பேசுவதற்காக வெளியே வந்தாள். அவளுக்கு ஒரு சர்பத், எனக்கொரு சர்பத். கேட்காமலே நிறைய நிறையப் பேசினாள். அம்மா இறந்தது, அப்பாவைக் கடன்காரர்கள் டீக்கடையில் போட்டு அடித்தது, அவமானத்தில் அப்பா தற்கொலைக்கு முயற்சித்தது, அப்படியே அப்பாவைக் கூட்டிக்கொண்டு அவள் திருச்சிக்கு வந்து ஒரு கட்டடத்தில் சித்தாள் வேலை பார்த்தது, அங்கு இருந்த மேஸ்திரி மூலமாக இங்கே ஜவுளிக்கடைக்கு வந்தது, அப்பா மட்டும் இன்னும் அங்கே திருச்சியில் கிடைக்கிற வேலைகளைச் செய்துகொண்டு, ஒரு வாடகை வீட்டில் இருப்பது என நிறையச் சொன்னாள். கடைசியாக, எழுதப் படிக்கத் தெரியாத தனக்குக் காதல் கடிதம் கொடுத்த ஒரு பெரிய தொப்பை உள்ள சூப்பர்வைசரைக்கூட அந்த நேரத்தில் எனக்கு அடை யாளம் காட்டி, அப்படிச் சிரித்தாள். சர்பத் முடித்ததும் என் போன் நம்பரைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

எப்படியும் வாரத்துக்கு இருமுறையாவது போனில் அழைத்துவிடுவாள். நான் கேட்காமலேயே, 'அப்பாவுக்கு போன் பண்ணேன். அப்படியே உங்களுக்கும் பண்ணேன்’ என்பாள். 'எதுக்கு அப்பாவுக்கு போன் பண்ணும்போதெல்லாம் எனக்கு போன் பண்ற?’ என்று கேட்டால், 'எங்கிட்ட இருக்கிறதே உங்க ரெண்டு பேரோட நம்பர் மட்டும்தான். அதான் ரெண்டு பேருக்கும் ஒண்ணாக் கூப்பிடுறேன்’ என்பாள். திடீரென்று சில நாள் காலையிலே அழைப்பாள் 'நானும் மலர்விழியும் இன்னைக்கு உடம்பு சரியில்லனு சூப்ரைசர்கிட்ட பொய் சொல்லிட்டு, படத்துக்குப் போலாம்னு இருக்கோம். நீங்களும் வர்றீங்களா?’ என்று கேட்பவளிடம், 'ஐயையோ... நான் டப்பிங் தியேட்டர்ல  இருக்கேன்’ என்று சொன்னால், 'நாங்களும் அந்தத் தியேட்ட ருக்கே வாரோம். என்ன படம் போட்டுருக்காங்க?’ என்று கேட்டுச் சிரிக்கவைப்பாள்.
அந்த நாட்களில் எனக்குத் தெரிந்தது ஒன்று மட்டும்தான். என்னோடு பேசும்போது அந்த வெள்ளரிக்காய் சிறுமி அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள். அதனால், நான் தொடர்ந்து பேசினேன். அவளுக்குப் புரிந்ததும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அது அவளுக்கு ஆறுதலாக இந்த ரயில் ரவுடி இருக்கிறேன் என்று. அதனால், அவளும் தொடர்ந்து பேசினாள். ஒரு கொத்து வெள்ளரிக்காய் பிஞ்சுகளைக் கையில் வைத்துக்கொண்டு, சாலைகளில் நம்மிடையே கை நீட்டிச் சிரிக்கும் எத்தனையோ பிஞ்சுக் குழந்தைகளின் கள்ளங் கபடமற்ற வறுமையின் சிரிப்புதான் மணிமேகலைக்கும் மாரிக்கும் உள்ள நட்பு.
ஒருநாள் மாலையில் அழைத்திருந்தாள் மணிமேகலை. முக்கியமான வேலைகளில் இருந்ததால் பேசவில்லை. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால், அவளோ இரவு வரை தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தாள். கொஞ்சம் கோபத்துடன்தான் அவள் அழைப்பை அட்டெண்ட் செய்தேன். 'ஹலோ’ என்று சொல்வதற்குள்ளாகக் கதறி அழுதுவிட்டாள். 'அப்பா இறந்துட்டாங்களாம்... வீட்டு ஓனரம்மா போன் பண்ணிச் சொன்னாங்க’ என்று அவள் தோழி மலர்விழி போனைப் பிடுங்கிச் சொன்னபோது, ஒரு நொடி நிலைகுலைந்துவிட்டேன். இயக்குநரிடம் விஷயத்தைச் சொல்லி, பணம் வாங்கிக்கொண்டு ஒரு டாக்ஸியை எடுத்துக்கொண்டு தி.நகர் ரங்கநாதன் தெருவுக்குப் போனேன். பகல்எல்லாம் அத்தனை மக்களின் அவசரமான யுத்தத் தெருவாக இருக்கக்கூடிய அந்தத் தெரு, அந்த நேரத்தில் பாலிதீன் பைகளைக் கவ்விக்கொண்டு திரியும் நாய்களின், எலிகளின், பெருச்சாளிகளின் தெருவாகத்தான் இருந்தது. மணிமேகலையும் அவள் தோழி மலர்விழியும் ஒரு மின்கம்பத்தின் கீழ் எனக்காகக் காத்திருந்தார்கள். என்னைப் பார்த்து அவள் அழுவதற்கு ஒரு நொடிகூடக் கொடுக்காமல் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன், திருச்சியை நோக்கி!
காலையில் 4 மணிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டோம். அது ஒரு சந்து. அதில் மேலே மேலே சீட்டுக்கட்டை அடுக்கியதுபோலக் கட்டியிருந்த சின்னச் சின்ன வீடுகள். அதில் மேலே இருந்தது அவர்களின் வாடகை வீடு. 'வாம்மா... என்னம்மா வீடு பூட்டியிருக்குனு பாக்குறியா? நீ எங்கே இருக்க... என்ன பண்ற... எப்போ வருவ... யாருக்கும் எதுவும் தெரியாது. அதான் அப்பா பாடிய ஆஸ்பிட்டல்ல தூக்கிக் கொடுத்துட்டோம். நீ காலையில போய்க் கேட்டா, குடுத்துருவாங்க.  அவரோட பொண்ணு வந்துட்டு இருக்குனு தகவல் சொல்லிட்டோம்’ என்று வீட்டுக்காரம்மா எங்கள் கையில் சாவியைக் கொடுத்தபோதுதான் இந்த உலகத்தின் மீதும் அதில் வாழும் மனிதர்கள் மீதும் எனக்கு முதல் பேரச்சம் ஏற்பட்டது.

கதவைத் திறந்து உள்ளே போனோம். அந்தச் சின்னத் தீப்பெட்டி வீட்டுக்குள் ஓர் உயிருக்கும் ஓர் உடலுக்கும் ரொம்ப நாட்களாக நடந்த ஒரு மௌன யுத்தத்தின் அடையாளம் எதுவும் அழிக்கப்படாமல் அப்படியே இருந்தது. மணிமேகலையின் அப்பா படுத்த கடைசிப் படுக்கை,  அப்பா சாப்பிட்ட கடைசி இட்லி, அப்பா குடித்த கடைசித் தண்ணீர், அப்பா விழுங்கிய கடைசி மாத்திரைகள் என எல்லாவற்றின் மிச்சங்களும் அப்படியே இருந்தன. மணிமேகலை ஓடிப்போய் அவள் அப்பா கடைசியாகப் படுத்திருந்த படுக்கையில் படுத்தவள்தான்... நன்றாக விடியும் வரை அப்படியே அதிலேயேகிடந்தாள்.
காலையில் மருத்துவமனைக்குச் சென்றால், 'தம்பி... போஸ்ட்மார்ட்டம் முடிய எப்படியும் ரெண்டு, மூணு மணி ஆகிடும். அப்புறம் வாங்க... வாங்கிக்கலாம்!’ என்று சொல்லிவிட்டார்கள். அந்த இடைவேளைக்குள் உடலை அடக்கம் செய்வதற்கான ஆயத்தங்களை நான் செய்ய வேண்டும். அந்த நகரில் மணிமேகலைக்குத் தெரிந்தவர்கள் என்றோ, உதவுபவர்கள் என்றோ யாரும் இல்லை என்பதை நினைத்தால் இன்னும் வலித்தது. இடுகாடு எங்கு இருக்கிறது என்று தெரியாத அந்த நகரில் மயானக் காப்பாளரைத் தேடி அலைந்தேன். அங்கே இங்கே விசாரித்து கடைசியில் ஒரு பெரியவரை அவர் வீட்டில் வைத்துப் பிடித்தேன். நல்ல மோரில் கஞ்சியைக் கரைத்து, நரைத்த தன் மீசை நனைய ரசித்து, ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்.
''தம்பி... திடுதிப்புனு வந்திருக்க. இன்னைக்குனு பார்த்து குழி தோண்டுற ஆளுக யாரும் இல்லியேப்பா! என் ஒருத்தனால தோண்ட முடியாதே!''
''பரவாயில்லீங்க... நீங்க வாங்க. நானும் உங்க கூட சேர்ந்து தோண்டுறேன். ஊர்ல நிறையக் குழிங்க தோண்டியிருக்கேன்!''
''அப்படியா? பார்த்தா படிச்ச பையன் மாதிரி இருக்க... சரி வா, ஒத்தாசை பண்ணா நானே தோண்டிருவேன்!''
அதை இடுகாடு என்று சொல்லவே முடியாது. ஒரு பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் கிடந்த கொஞ்சூண்டு புறம்போக்கு நிலத்தில் நான்கைந்து குழிகள் மட்டுமே தோண்ட முடிகிற அளவுக்குத்தான் இருந்தது அதன் சுற்றளவு. ஏற்கெனவே அது ஐந்து குழிகளால் நிரம்பியிருந்தது.
''என்னங்க... குழி தோண்ட இடமே இல்லையே... எங்கே தோண்டுறது?''
''பயப்படாத தம்பி. இருக்கிற அஞ்சு குழியில எது பழைய குழினு பாருங்க... அதத் தோண்டிற வேண்டியதுதான். இங்க எல்லாம் அப்படித்தான். ஒண்ணுக்கு மேல ஒண்ணு, ஒருத்தனுக்கு மேல ஒருத்தன். அதுக்குத்தான வாழும்போது அம்புட் டுப் பேரும் ஆசைப்பட்டானுவ. வா... வந்து மண்ணைக் குத்து... நான் அப்படியே இழுத்துப் போடுறேன்!''
ஏற்கெனவே உடல்கள் புதைக்கப்பட்டு மூடி இருந்த அந்த ஐந்து குழிகளில் ஒரு பழைய குழியைத் தேர்ந்தெடுத்து இருவரும் தோண்டத் தொடங்கினோம். நான் கடப்பாரையால் குத்து வேன். அவர் மம்பட்டியால் மண்ணை வெட்டி லாகவமாக இழுப்பார். வேகவேகமாகத் தோண்டிக்கொண்டு இருந்தோம். கொஞ்சம் ஆழமாகச் சென்றதும், ஒரு மனிதன் எந்தத் தொந்தரவும் இல்லாமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போல எலும்புக்கூடு ஒன்று சிதைந்து படுத்திருந்தது.
''அட்வான்ஸும் கொடுக்காம, வாடகையும் கொடுக்காம எப்படிக் கிடக்கிறான் பாரு பயபுள்ள. புதுசா வீட்டுக்கு வேற ஆள் வர்றார்னு அவனை அப்படியே தூக்கி வெளிய போடு!''
''இல்லீங்க... நீங்களே எடுத்துப் போடுங்க!''
தூங்கிக்கொண்டிருப்பவனைத் தூக்கிச் செல்வதைப்போல அந்த எலும்புகளை அள்ளிக்கொண்டு அருகில் இருந்த புதருக்குள் போட்டார்.
''தம்பி... அந்தக் கடப்பாரையைக் கொண்டா!'' என்று என்னிடம் இருந்த கடப்பாரையை வாங்கினார்.
''அப்படியே போட்டுட்டுப் போனா, எவனா வது வந்து பார்த்துட்டு, என்னமோ உயிரோட குழிக்குள்ள இருந்தவனைத் தூக்கி வெளிய போட்ட மாதிரி ஆயிரம் பஞ்சாயத்துப் பேசு வானுங்க'' என்று கடப்பாரையால் இரண்டு போடு போட்டார். எலும்புக்கூடு சுக்குச்சுக்காக நொறுங்கி உதிர்ந்தது.
''அவ்வளவுதான்... எதுவும் பயந்துக்காத'' என்று அவர் மீசையை முறுக்கிச் சொன்னபோதுதான் முதல்முறையாக வாழ்கின்ற வாழ்வின் மீதிருந்த பயம் போய், மரணத்தின் மீதான பயமும் கரைந்து எதுவுமற்ற உடலின் மீதான ஒரு கேள்விக்குறி கணகணவென எரிவதுபோல் இருந்தது. இடுகாட்டுச் சம்பிரதாயத்தின்படி ஒருவரை அடக்கம் செய்வதற் குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அவரிடம் வாங்கிக்கொடுத்துவிட்டு, ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துகொண்டு மணிமேகலையைக் கூப்பிடுவதற்காக அவள் வீட்டுக்குப் போனேன். இப்போது எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்திருந்தார்கள். மணிமேகலையையும் அவர்களையும் ஆம்புலன் ஸில் ஏற்றி ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிவிட்டு, ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையை வாங்கிக் கொண்டு நான் மருத்துவமனையை நோக்கிச் சென்றேன்.
அப்போதுதான் நான் என்ன நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தேன். இன்று இறந்துபோனது யார்? மணிமேகலையின் அப்பா! மணிமேகலையின் அப்பா என்றால் எப்படி இருப்பார்... எப்படிப் பேசுவார்... எப்படிச் சிரிப்பார்... கறுப்பா சிவப்பா... எவ்வளவு உயரம் இருப் பார்? எதுவும் தெரியாமல் சவக்குழி தோண்டியிருக்கிறேன். பெரிய ரோஜாப்பூ மாலை வாங்கியிருக் கிறேன். போய் முதலில் அவரது முகத்தையாவது  பார்க்க வேண்டும். எனக்கும் அவருடைய முகத்துக்கும்  அவசரமாக ஒரு பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் மரணித் தவர்பற்றி எதுவுமறியா எத்தனையோ மயானக் காப்பளர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவேன். அப்படி ஆகக் கூடாது. மணிமேகலை என் தோழி. அவர் என் தோழியின் அப்பா. அவர் முகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகமானது!
மருத்துவமனையில் சடலத்தைப் பெறுவதற்கான விதிமுறைகளை முடித்துவிட்டு அவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் கொடுத்த அத்தனை சின்ன ரசீதோடு பிணவறை வாசலில் காத்திருந்தேன். எங்களைப் போலப் பலர் உள்ளே போஸ்ட்மார்ட்டம் என்ற பெயரில் அறுபட்டுக்கொண்டிருக்கும் அப்பாவுக்காக, அம்மாவுக்காக, மகனுக்காக, மகளுக்காக, அண்ணனுக்காக, அண்ணிக்காக என அதே போன்ற துண்டு ரசீதோடு காத்திருந்தார்கள். மணிமேகலை அப்பாவின் உடல் வெளியே வந்தது. எல்லாரும் ஓடினோம்.
'அட... அப்பா முகத்தை அவுத்துக் காட்டுப்பா... பொண்ணு வந்துருக்குல்ல’ என்றார்கள் யாரோ. மணிமேகலையைவிட அவளுடைய அப்பா முகத்தைப் பார்க்க நான் அவ்வளவு அவசரமாகத் தவித்துக்கொண்டிருந்தேன். முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கினார்கள். மணிமேகலை கலங்கிய விழிகளுடன் அப்பாவைப் பார்த்தாள். பார்த்த உடனே வீறிட்டாள்...
'ஐயோ... இது எங்க அப்பா இல்ல... எங்க அப்பா இல்ல. எங்க அப்பா இப்படி இருக்க மாட்டாரு மாரி. ஆளை மாத்திட்டாங்க. இனி, எங்க அப்பா முகத்தை நான் எப்போ பார்ப்பேன் மாரி..? ஒரு போட்டோகூட எங்கிட்ட இல்லையே’ என்று கதறியபடி என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதவளை என்ன சொல்லிச் சமாதானப்படுத்த என்று தெரியாமல் கலங்கி நின்றேன். மணிமேகலைக்கு அடையாளம் தெரியாத அந்த உடலை 'மணிமேகலையின் அப்பா’ என்ற பெயரிலே அடக்கம் செய்துவிட்டு வந்தோம். வந்துதான் கேட்டேன் மணிமேகலையிடம்...
''உங்க அப்பா எப்படி இருப்பார்?''
''எனக்குப் பிறக்கப்போற முதல் பிள்ளை மாதிரி இருப்பார். பிள்ளை பொறந்ததும் சொல்றேன். வந்து பார்த்துக்கோங்க'' என்று சொல்லிவிட்டுப் போனாள். இரண்டு வருடங்கள் கழித்துத்தான் போய்ப் பார்த்தேன், மணிமேகலையின் அப்பாவை அவர் பிறந்த அன்றே!

எழுத்து : மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

நன்றி : ஆனந்த விகடன்.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

ராஜி சொன்னது…

மணிமேகலையின் அப்பாவை அவர் பிறந்த அன்றே!
>
நல்லது நடந்தா சரிதான்

Unknown சொன்னது…

அருமையான நடை!///எப்படியோ,பேரன் பிறந்ததால் மணிமேகலை அப்பாவைப் பார்க்க முடிந்தது!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணிமேகலையின் குழந்தை தந்தையின் நினைவில் மலர்ந்த மலர் ..!

Unknown சொன்னது…

கதையின் யதார்த்தம் மெய்சிலிர்க்க வைக்கின்றன...

Unknown சொன்னது…

கதையின் யதார்த்தம் மெய்சிலிர்க்க வைக்கின்றன...