மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 4 ஏப்ரல், 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

"வட்டி வரலியே தம்பி...''

நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்கிய அவசரக் கடனுக்கு இன்னமும் வட்டி கட்டித் தீர்ந்தபாடில்லை. ''அசலக் கொண்டுவந்து இந்தாளு மூஞ்சில எறியணும்ரா...'' என ஒவ்வொரு முறையும் கடுப்பாகும். ஆனாலும், குட்டி போட்ட வட்டிதான் குரைத்துக் குரைத்துத் துரத்தும் ஒவ்வொரு மாசமும். இப்போது நெருக்கி முடித்துவிட்டேன்.

இந்த வாழ்க்கையே அந்த கந்துவட்டிக்காரர் மாதிரிதான் வாசலில் வந்து வந்து நிற்கிறது ஒவ்வொரு நாளும். வருத்தமும் பிரியமுமாக வாங்கிய அசலுக்கெல்லாம் வட்டி கட்டித் தீர்த்துவிட முடியுமா என்ன..? ''முன்ன மூணும் பயகளாவே போயிருச்சு... நாலாவதா நீயும் பயதான்னு தெரிஞ்சதும் கலைக்கறதுக்கு மருந்து சாப்பிட்டேன். லேட்டாகிப் போச்சா... மருந்து வேல செய்யாம நீ வந்து பொறந்துட்ட... சவலப் புள்ள... ஒரு வாரம் பொழைப்பியா இருப்பியானு புரியாம பொட்டிக்குள்ள வெச்சு ஒரு நர்சம்மாதான் காத்துச்சு...'' எனக் கலங்கும் அம்மா. ஏதோ ஒரு பிள்ளையை இன்குபேட்டரில் பாதுகாத்து உயிர் மீட்ட அந்த செவிலித் தாய் இப்போது எங்கிருப்பாள்? கோடி உயிர்களைக் காத்தெடுத்த எத்தனையோ முகம் தெரியா தாய்கள் எங்கெங்கோ இருக்கிறார்கள். தொப்புள் கொடியின் ஈரத்தைச் சாகும் வரைக்கும் கண்களில் வைத்துக்கொண்ட தாய்கள்.

காந்தியின் முதல் மகன் ஹரி லால்... காந்திக்கு நேரெதிர் பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தவர். காந்தியின் தீவிர விமர்சகர். குடிகாரர். ஒருமுறை காந்தி, கஸ்தூரிபா அம்மையாருடன் ரயிலில் வந்துகொண்டிருக்கிறார். ரயில்வே நிலையத்தில் ஆயிரமாயிரம் ஜனங்கள் முண்டியடித்து 'வாழ்க’ கோஷம் போடுகிறார்கள். மகாத்மாவை ஒரு முறை பார்ப்பதற்கு முண்டியடிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் குடித்துவிட்டு நிற்கிறார் ஹரி லால். கூட்டத்தில் திமிறி ரயிலில் நுழைகிறார். அவரைப் பார்த்ததும், ''என்ன மகனே இது..?'' எனக் கலங்குகிறார் கஸ்தூரிபா. காந்தி மெலிதாகப் புன்னகைத்தபடி, ''காட் ப்ளெஸ் யூ சன்...'' என்கிறார். அப்பாவை உற்றுப் பார்க்கிற ஹரி லால், ''இதெல்லாம் எங்கம்மா உனக்குப் போட்ட பிச்சை...'' எனக் கத்திவிட்டு இறங்கிப் போய்விடுகிறார். இந்தக் காட்சியைப் படித்தபோது எனக்கு விலுக்கென்றது. உண்மையில் நமது புகழ், புனிதம், ஜீவிதம் எல்லாமே அம்மாக்கள் போடுகிற பிச்சைதானே?


''யப்பா... எனக்கு ஒண்ணும் வேணாம். ஒங்கம்மாவுக்கு மாசம் ஒரு ஆயிரம் அனுப்பு. தேவைக்கு இல்ல... மவன் நல்லாருக்கான்னு அதுக்கு ஒரு சந்தோஷம் வரும்ல... அதுக்கு...'' என்ற அப்பா வெட்டாத்தங்கரையில் எரிந்து உதிர்ந்தபோது பெருங் கடங்காரனாக நின்றிருந்தேன். செல்லப் பிராணியைப் போலத் தலை தடவும் அந்தக் காய்த்த கைகளுக்கான வட்டியைக் கட்டிவிட முடியுமா என்ன?

இயேசு அவதரிக்கிற கிறிஸ்துமஸ் இரவில், ஓவல் மிட்டாய்கள் இறுக்கிய கைகளைக் கட்டிக்கொண்டு ''ஆல்வேஸ் ஐம் வித் யூ...'' என்ற ரோஸி சிஸ்டருக்கான நன்றியைக் காட்டிவிட முடியுமா காலத்துக்கும்? எப்போதோ தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு காற்றில் ஊசி நூல் கோத்தபடி ஊமைச் செய்திகள் வாசித்த ஒரு பெண்ணின் முகத்தை இப்போதும் மறக்கவே முடியவில்லை... ஏனென்றும் தெரியவில்லை. பெரியகோவில் வாசலில் விழியோரம் நீர் கசிந்தபடி தும்பிக்கையைத் தூக்கித் தூக்கி இறக்கியபடி நின்ற ஒரு யானை, ராமநாதபுரம் வீட்டெதிரே ஒரு விடியலில் ஈக்கள் மொய்க்கச் செத்துக்கிடந்த மயில், அபிவிருத்தீஸ்வரம் வீடெங்கும் நிறைந்துகிடந்த கோழிக் குஞ்சுகள், பத்தாயத்தில் துளிர்த்துக்கிடந்த பூனைக்குட்டிகள், செங்காமட்டைக் கலரில் இதயம் மாதிரி உயிர் துடித்த எலிக் குஞ்சுகள், ஒட்டக்குடி தாத்தா வீட்டில் பொத்தென்று மண்ணில் விழுந்து கொள்ளைநோயில் செத்த பழுப்பு கலர் குதிரை, ராஜாங்கம் வீட்டெதிரே பார வண்டிக் குக் கீழே கண்டெடுத்த நாய்க்குட்டி... என் பால்யத்தில் ஓடவிட்ட ஈர நதியில் குளித்துக் கரையேற முடிய வில்லை இப்போதும்.

நவம்பர் 27-ஐத் துவக்கிவைத்த சங்கருக்கு... திலீபனுக்கு... இசைப்பிரியாவுக்கு.... என் இனத்துக்காக மனிதத்துக்காக என் கண்ணெதிரே எரிந்து வாழும் நண்பன் முத்துக்குமாருக்கு... தங்கை செங்கொடிக்கு என்ன செய்யப்போகிறேன் நான்..? அகதி என்ற சொல்லோடு, நியாயமற்ற பிரிவையும் கண்ணீரையும் ரத்தத்தையும் சுமந்து திரியும் கால்களுக்கு சிறு நிழலை விரித்துவிட முடியுமா என்னால்?

கேசவனின் மாமாவைச் சேர்க்கப் போயிருந்தபோது பைத்தியக்கார ஆஸ்பத்திரி வராந்தாவில் கையெல்லாம் கிழித்துவிட்ட காயங்களோடு நின்றபடி, ''அந்தாளு வெவரமான மனுஷன்... பைத்தியமாகிட்டாரு. என்னாலதான் ஆக முடியல... இன்னிக்கு ஆயிரலாம், நாளைக்கு ஆயிரலாம்னு பாக்கறேன்... நடக்க மாட்டுதே... பொம்பளைகளுக்குத்தான் எல்லாமே ஞாபகத்துல இருந்து தொலைக்குது...'' என்ற பெண்மணி என் தூக்கத்தை எத்தனை நாள் கெடுத்தாள் தெரியுமா? பைத்தியமாகிவிடுவோமோ எனப் பயந்துகிடந்த என்றோ ஒரு நாளில், என்னை ஆற்றுப்படுத்திய ஒரு பாலியல் தொழிலாளிக்கானதும் தீர்க்கவே முடியாத கடன்தான். ''கொரடாச்சேரில போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிக்கப்போறேன்... கடைக்கு ஒரு நல்ல பேரா சொல்லேன்...'' என்ற ரவியண்ணனை மறுநாள் பார்த்தபோது நிறைய பெயர்களைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ''ராத்திரி நா ஒண்ணு நெனைச்சேன்... 'விடியல் புகைப்பட நிலையம்’ எப்படி இருக்கும்..?'' எனச் சிரித்தார் ரவி அண்ணன். அவ்வளவுதான் சொன்னார். விளக்கமெல்லாம் இல்லை. அந்த வார்த்தைகள் எனக்கு ஏற்படுத்திய மலர்ச்சியைச் சொல்லவே முடியாது. ஒவ்வொரு முறையும் அண்ணன்கள்தான் என்னைத் தங்கள் வார்த்தைகளால், செயல்களால், நம்பிக்கைகளால் தொட்டுத் தூக்கியிருக்கிறார்கள்.

''உணர்வதிலும் உணர்த்துவதிலும்தாண்டா இருக்கு வாழ்க்கை...'' என்ற கண்ணன் சாரின் வார்த்தைகள்தான் 'வட்டியும் முதலுமாக’ என்னை எப்போதும் தொடர்கிறது.


முந்தா நாள் ஒரு சின்னப் பெண் என்னைப் பார்க்க வந்தாள். நாலைந்து டைரிகளை என்னிடம் தந்து, ''அண்ணா... ஒரு உதவி... இந்த டைரிலாம் நான் ஒருத்தர லவ் பண்ணிட்டு இருக்கும்போது எழுதினது. இப்போ அது இல்லை. எனக்கு ஜூன்ல கல்யாணம் பேசியாச்சு. இந்த டைரியை எல்லாம் வீட்ல வெச்சுக்க முடியல. போற வீட்டுக்கும் கொண்டுபோக முடியாது. எங்கயாவது தூக்கிப் போடவும் மனசு இல்ல... உங்கள்ட்ட இருக்கட்டும்னுதான் குடுக்குறேன். என்னவோ இது உங்கள்ட்ட இருக்கணும்னு தோணுது... ப்ளீஸ்ணா...'' என்றபடி என் டேபிளில் வைத்துவிட்டுப் போய்விட்டாள். எடுத்துப் புரட்டிப் பார்த்தால் மொக்கையான ஃபீலிங்ஸ்தான். ஆனாலும், அது அவளுக்குக் காவியம்தான் இல்லையா? எடுத்துப் போகவும் முடியாமல் எரிக்கவும் மனசில்லாமல் இப்படி எத்தனையோ டைரிகள் இருக்கின்றன ஒவ்வொருவர் மனங்களிலும். திருப்பித் தந்து தீர்க்க முடியாத வட்டியும் முதலும் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன.

தினம் தினம் நாம் சந்திக்கும் ஒவ்வோர் உயிரும் நம்மைக் கொடையாளியாகவும் கடனாளியாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பெண் என் டேபிளில் வைத்துவிட்டுப் போன டைரிகள் மாதிரிதான் இந்த 'வட்டியும் முதலும்’ தொடரும்!

எங்கோ ஒரு கிராமத்து நூலகத்தில் விகடனை அதிசயம்போல் வாசித்த சிறுவன் நான். ஒரு நாள் அதே விகடனில் நிருபராக வேலை பார்க்கும் வாய்ப்பு வந்தது. சமூகத்தின் எல்லா அடுக்குகளுக்குள்ளும் போய் வருகிற வாய்ப்பு அது. சாலையோரம் தின்று உறங்கும் குடும்பத்தில் இருந்து அசெம்ப்ளி அமைச்சர் ரூம் வரை, குலசேகரபட்டினம் திருவிழாவில் இருந்து ஃபிலிம் ஃபெஸ்டிவல் வரை நிறைய இடங்கள்... முகங்கள்... பயணங்கள் என எனக்கு உலகின் புதிய ஜன்னல் களைத் திறந்துவிட்டது அந்த வாய்ப்புதான். 15 வயதில் வீட்டை விட்டு வந்துவிட்ட எனக்கு, இப்போது வரை ஒரு நாடோடி வாழ்க்கைதான். பொருளுக்கும் பிழைப்புக்கும் ஊரைவிட்டுப் புலம் பெயரும் யாவரும் நாடோடிகள்தான்... அகதி கள்தான். ஆனாலும், எனக்கு இந்த நாடோடி வாழ்க்கைதான் விருப்பமாக இருந்தது.

விவரம் தெரிந்த பிறகான நாளிலிருந்து தொடர்ந்து அதிகாரத்துக்கும் பணத்துக்கும் எதிரான மனநிலையிலேயே வாழ்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என நான் வளர்ந்த இடங்களெல்லாம் எனக்கு எளியவர் களின் அன்பையும் பசியையும்விட எதுவும் பெரிதில்லை என்பதைத்தான் சொல்லித் தந்தது.

''பசித்த கண்களை ஒரு நொடியில் அறிந்துகொள்கிறவன்தான் உண்மையான படைப்பாளி...'' என்ற சாரு மஜூம்தாரின் வார்த்தைகளை நோக்கித்தான் நான் படைக்க ஆரம்பித்தேன். எப்போதும் எந்த நாற்காலியையும் நோக்கி ஒரு படைப்பாளன் நடக்க முடியாது என்பதையும் மனதார உணர்ந்திருந்தேன். ஒவ்வொரு மனித மனமும் ஒரு மகா சமுத்திரம் என்பதை உணரும் தருணம் ஒவ்வொருவரும் படைப்பாளிதான். 'ஒரு கணம் கண் மூடினால் ஒரு கோடி மின்னல் மின்ன வேண்டும்’ என்ற பாரதியாக ஒரு கணம் மாறிவிடத் தவிக்கும் யாரும் கவிஞன்தான். சக மனிதர்களின் கண்ணீரையும் வியர்வையையும் உணர்ந்து எங்கோ எப்படியோ வெளிப்படுத்தும் அத்தனை பேரும் கிரியேட்டர்கள்தான்.

அன்றைக்கு அயோத்தியா மண்டபத்தில் உட்கார்ந்து விழிகளற்ற மூதாட்டி ஒருத்தி பிசிறு தட்டிய குரலில், 'எங்கும் நிறைந்திருக்கும் பரப் பிரம்மம்’ எனப் பாடிக்கொண்டிருந்தாள். அவளைவிடவும் பெரிய படைப்பாளி வேறு யார்? சாக்கடைக் குழிக்குள் இருந்து வெளியே வந்து உட்கார்ந்தபடி, ''அமுத மழையில் எந்தன் கவிதை நனைகிறது நிலவே கொஞ்சம் குடை பிடி...'' என ரசித்துப் பாடும் ஒருவனிடம் ராகமாவது சுதியாவது... அவன் அப்படி உட்கார்ந்து பாடியதே போதுமே!

நானும் அப்படித்தான் 'வட்டியும் முதலும்’ எழுத வந்தேன். சக மனிதர்களைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்பதைத் தவிர, எனக்கு என்ன தெரியும்? ஏகப்பட்ட ஊதாரித்தனங்களோடு, பொறுப்பின்மையோடு, புத்தகங்கள் வாசிப்பதும், சினிமா பார்ப்பதும், அரசியல் பேசுவதையும் தவிர, உருப்படியாக எதையும் செய்யாதவன். அன்பைப் புறந்தள்ளியவன். சிலருக்குத் துரோகித்தவன். முறைப்படுத்தப்படாதவன். அறத்துக்காகவும் அன்புக்காகவும் உண்மையாகக் குரலெழுப்பாதவன். கடவுள், மனிதன், அரசியல் என எல்லாவற்றிலும் குழப்பம் கொண்டிருந்தவன். நம்பிய இலக்குகளை அடைய வழி தெரியாமல், கூச்சமும் தயக்கமுமாக அலைந்து திரிந்தவன். உறவுகளைப் பேணத் தெரியாதவன். இவ்வளவு சுமைகளோடும் இருந்தவன் தான் நான். இப்போது எந்தச் சுமையும் இல்லை. ஒவ்வொரு லக்கேஜாகக் கழற்றிவிட்டுவிட்டேன். பொறுப்பு உணர்ச்சி என்பது மானுடத்துக்கானது என்பதை உணரும்போது வரும் சந்தோஷத்தை அனுபவித்து விட்டேன். அன்பைக் கொண்டாடக் கற்றுக்கொண்டேன்... அதோடு பிரிவைப் புன்னகையாக்கவும்!

அறத்துக்காகவும் எளியவர்களின் அரசியலுக்காகவும் முடிந்த வரை செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் அடைந்திருக்கிறேன். எழுத்து, சினிமா, அரசியல் என எல்லாவற்றுக்குமான பயணங்களில் உங்களை அடைவதே என் நிரந்தர சந்தோஷம் என்பதை அறிந்துகொண்டேன். தெளிந்த ஊற்றைப் போல இப்போது இருக்கிறது மனம். ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. 

'வட்டியும் முதலும்’ மூலம் நீங்கள் என்னையே எனக்குக் கற்றுத்தந்துவிட்டீர்கள். திருப்பித் தந்துவிட்டீர்கள். 'உன்னில் இருந்தே தொடங்குகிறது உலகம்’ இல்லையா..? அப்படித்தான் என்னிலிருந்து இறங்கி, இந்த உலகத்தை அடைந்திருக்கிறேன் நான். எனக்கான உலகத்தை நீங்களும் உங்க ளுக்கான உலகத்தை நானும், ஏதோ ஓர் புள்ளியில் வந்தடைந்துவிடுவோம். அந்த தெருவோரக் கோயிலில் நீங்கள் வைத்த பிரார்த்தனையில் நானும், நான் வைத்த பிரார்த்தனையில் நீங்களும் இருக்கிறீர்கள். தேநீர்க் கடையில் வழியும் பாடலுக்கு என் கீர்த்தனாவை நானும், உங்கள் கீர்த்தனாவை நீங்களும் நினைத்துக்கொள்கிறோம். போராட் டங்களில் கோஷமிட்டபடி நான் நிற்கிறேன்... நீங்கள் கடந்து போகிறீர்கள். நீங்கள் நிற்கும்போது, நான் கடந்து போகிறேன். நாம் சேர்ந்து போராடுவோம் என்ற நம்பிக்கை இருவருக்குமானது!

இந்தத் தொடர் எனக்கு ஏராளமான நட்பையும் பிரியங்களையும் அள்ளித் தந்திருக்கிறது. எல்லாத் திசைகளில் இருந்தும் கடல் கடந்தும் எத்தனை எத்தனை முகங்கள்... குரல்கள்... சிநேகங்கள். ஒவ்வொரு வாரமும் தங்களை ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தொடர் மீட்டெடுத்ததாக யார் யாரோ சொல்லும்போதுதான், நான் அர்த்தப்பட்டேன். எவ்வளவோ கொண்டாட்டங்களும், பொழுதுபோக்குகளும், வேலைகளும் இறைந்துகிடக்கும்போது... இந்த எளிய எழுத்து உங்களைப் பாதித்தது சந்தோஷம். சக மனிதர்களுக்கான கவனிப்பை, ஈரத்தை, போராட்டத்தை உங்களுக்குள் இந்த எழுத்து கொஞ்சம் விதைத்திருந்தால், அது போதும்.

இந்த வாரத்துடன் 'வட்டியும் முதலும்’ தற்காலிகமாக நிறைவுறுகிறது. விடைபெறுதல் என்றெல்லாம் ஒன்றில்லை. பள்ளிக்கூடத்தின் கடைசி நாளில், இங்க் தெளித்த வெள்ளைச் சட்டையுடன், கோவக்கா படர்ந்த வேலிப்படலோரம் நின்ற கணேசன் விடைபெற்றுவிட்டானா என்ன? கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பும்போது, உள்ளே ஓடி வந்து கல்லூரி குரூப் போட்டோவை எடுத்துக்கொண்டு கார் ஏறிய தங்கச்சி விடைபெற்றுவிட்டாளா என்ன..? மரணத்துக்குப் பிறகும் சுடர்ந்துகொண்டிருந்த சே வின் விழிகள் மூடிவிட்டனவா என்ன? எத்தனை மைல்கள் கடந்து வந்துவிட்ட பிறகும், எத்தனை காலம் முடிந்துவிட்ட பிறகும், சில சொற்கள், தொடுதல்கள், நினைவுகளில் இருந்து விடைபெற முடியுமா என்ன? நாம் அனுதினமும் சந்திப்போம். எல்லோருக்குமான பிரார்த்தனைகளில்... எண்ணங்களில்... செயல்களில்!

இப்போது எனது முதல் திரைப்படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். ஒரு வருடத்துக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் சாரிடம் ஒரு கதை சொன்னேன். ''இல்ல ராஜுமுருகன்... 'வட்டியும் முதலும்’ மாதிரி ஒரு கதையைத்தான் உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்றேன். காமெடியும் எமோஷனலுமா ஒரு லைஃப் இருக்கு அதுல. அப்படித்தான் உங்க ஃபர்ஸ்ட் படம் இருக்கணும்'' என்றார். ஒரு மாதம் கழித்து இன்னொரு கதை சொன்னேன். அது ஏழு வருடங்களாக எனக்குள் இருந்த விஷயம். ''சூப்பர்... இதான் உங்க படம்...'' என்றார். அப்படித்தான் அந்தக் கதை உருவானது. விஜய் டி.வி. மகேந்திரன் சார் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துப்போனார். படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அதற்கான படப்பிடிப்பு வேலைகளில்தான் இப்போது இருக்கிறேன். அதுவும் நமக்கான உலகத்தை மீட்டெடுக்கும் படமாக இருக்கும் என நம்புகிறேன். படத்தின் பெயர்... 'குக்கூ.’


நன்றி : ராஜு முருகன், ஆனந்த விகடன்
நன்றி: ஓவியர்: ஹாசிப் கான்

அருமையான படைப்பைக் கொடுத்த 
ராஜுமுருகன் 
திரைத்துறையிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

-'பரிவை ' சே.குமார்

1 எண்ணங்கள்:

ஜீவன் சுப்பு சொன்னது…

//ஒரு படைப்பு வாசிக்கிறவர்களை மட்டுமல்ல... அதைப் படைத்தவனையும் மாற்றிவிடும் என்பது நான் கண்டடைந்த உண்மை. // வாஸ்தவமான வார்த்தை .

குக்கூ நன்றாக ஒலிக்கட்டும் எட்டுத்திசை எங்கும் ..!

மீள் பதிவிற்க்கு நன்றி .