மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஏப்ரல், 2013

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 3


போலியான பதிவு எண் கொண்ட வாகனங்கள்:

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்த போது, சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. மேலும், இவ்விழாவினால், கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வெளியூர் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். 

மேலும் அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் அல்லலுற்றனர். விழா முடித்து திரும்பிச் சென்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மரக்காணம் அருகில் தீ வைப்பு, வாகனங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன. 

அந்த இடத்தில் கழிக்குப்பம் என்ற ஊரை ஒட்டிய சாலையின் ஒரு பக்கத்தில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் கிடந்தது. வாகனத்தின் மேலிருந்து விழுந்தோ அல்லது வாகனம் மோதியோ மரணம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அந்த பிரேதத்தில் இருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ-ன்கீழ் வாகன விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐயமும் கருத்தில் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 

மற்றொரு சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்பவரும் வாகன விபத்தில் இறந்துள்ளார். மரக்காணத்தில் பிரச்சனை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பிச் சென்ற போது, ஒரு வாகனத்தில் விவேக் என்பவர் ஏற முயன்ற போது, கவனக் குறைவாக ஓட்டி வரப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. 

இதன் காரணமாக அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர் பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (ஏ-ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலானவர்கள் குடி போதையில்... 

இவ்விழாவில் பங்கேற்றவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்ட போதும், காவல் துறையினர் மிகுந்த பொறுமையுடன், பொதுமக்கள் நலன் கருதி அச்சம்பவங்களை கையாண்டதோடு, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் யாரும் காயம் அடையவில்லை. இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்து விட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. 

வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடிபோதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர்.

தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசி...:

மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர். 

விழா முடிந்தவுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை. புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர். பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசும் போது, "11 மணிக்குப் பேசறேன், போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது" என்று கூறியுள்ளார். 

ராமதாஸ் அவர்களின் ‘வழக்குப் போடுங்கள்' என்ற கோரிக்கையை ஏற்று...:

 பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்' என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். 

இளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாகக் கூறும் ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது? 

தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், திரு. ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா? கடந்த 28.4.2000 அன்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள், மாமல்லபுரம், புதுப்பட்டினம், வாயலூர் காலனி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். 26.4.2002 அன்று நடைபெற்ற விழாவின் போதும், மரக்காணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போது...:

பொதுவாக, பல்வேறு அரசியல் மற்றும் சாதி ரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தை காட்டும் விதத்தில், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவு தின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் போது, அந்நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட சாலை வழியே வந்து செல்லும் போது, காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போதும், வழி நெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும் போதும், மாற்று கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி மற்றும் அடையாள சின்னங்களைச் சேதப்படுத்தும் போதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் செல்லும் போது, காவல் துறையினரின் அறிவுரைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை. இது போன்ற விழாக்களுக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, அங்கே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடக்க மாட்டோம், காவல் துறையினருக்கு கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர். உயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. 

இதுவே, இது போன்ற கூட்டங்களின் போது பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது. மேலும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது, காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தடுக்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு தரப்பினர், காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குறை கூறுவதும், மற்றொரு தரப்பினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இவ்வரசு தயங்காது எனவும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவங்கள் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மரக்காணத்தில், இரண்டு நாட்கள் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சுமூகநிலை ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் ஆகியவை வழங்கப்பட்டன. மரக்காணத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 9 நபர்களின் கூரை வீடுகள் முழுவதுமாகவும், ஒரு நபரின் கூரைவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாட்டுக் கொட்டகை, பெட்டிக் கடை, வைக்கோல் போர் என 7 நபர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடிசை வீடு மற்றும் இருவரின் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, கூரை வீடுகளை இழந்த அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25,000 ரூபாயும், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று இல்லங்கள் திரும்பியுள்ள 17 நபர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: