மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 மார்ச், 2013

முட்டாள் தினமல்ல...




ஏப்ரல் முதல் நாள் முட்டாள்களின் தினம்  என்பது நாம் வகுத்த ஒன்று. இது முட்டாள்களின் தினமல்ல... முட்டாளாக்க நினைப்பவர்களின் தினம். இது முட்டாளாக்க நினைப்பவர்களின் தினம் என்பதெல்லாம் தெரிந்தாலும் நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாடிய தினம்தான் இந்த ஏபரல் முதல் தேதி.... நிறைய பேரை முட்டாளாக்கி... நிறைய பேரால் முட்டாளாகி... இப்படி சந்தோஷித்த தினம்தான் இந்த நாள்.

படிக்கும் காலத்தில் இந்த நாள் ஒரு இனிய அனுபவத்தைக் கொடுக்கும் நாள்... பள்ளிப் பருவத்தில் கூட பேனா மையில் கொட்டைச் செடியின் சாறை கலந்து அடித்து மகிழ்ந்து சந்தோஷப்பட்ட நாளாகத்தான் இருந்தது.

கல்லூரி நாட்களில் இந்த நாளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பேனா மை எல்லாம் சரி வருவது இல்லை. ரீகல் சொட்டு நீலப் பாட்டில்தான்... மொத்தமாக வாங்கிவிடுவோம்... மாடியில் நின்று கொண்டு கீழே போவோர் வருவோருக்கெல்லாம் நீள அபிஷேகம்தான். 

நண்பன் இளையராஜா உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஆம்புலன்ஸ் என்று எப்படி மாற்றி எழுதியிருப்பார்களோ அதுபோல் 'AF' என்று திருப்பி  அழகாக கட் பண்ணி கொண்டு வந்து  நீலத்தில் நனைத்து எல்லாருடைய முதுகிலும் ஸ்டிக்கர் போல வைத்து விடுவான்.

எனது பங்காளி ஆதியோ முதல்வருக்கு இங்க் அடிப்பதில்தான் அதிக முனைப்பு காண்பிப்பான்.  எங்கள் முதல்வர் திரு.பழனியப்பன் அவர்கள் மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டு மாணவிகள் மீது மை அடிப்பதை பார்த்து கத்திக் கொண்டே விரட்டிக் கொன்டு போவார். மாடியில் நின்று கொண்டு அவர் அவனுக்கு நேராக வரும் போது உஜாலாவில் குளிப்பாட்டிவிட்டு ஓடிவிடுவான். அவர் கத்திக் கொண்டே இருப்பார். நாங்கள் வேறு பக்கமாக இறங்கி மைதானத்தில் போய் விசில் அடித்து உற்சாகத்தில் திளைப்போம்.

அந்த சந்தோஷமான நாள்... நாளை... படிக்கும் போது அது தவறாக தெரியவில்லை... இந்த நாளில் நினைக்கும் போது சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் நண்பர்களின் முகங்கள் மனசுக்குள் வந்து அவர்களைப் பற்றிய நினைவுகளை மனசுக்குள் இறக்கிச் செல்கிறது.


இந்நாள் குறித்து தமிழ் விக்னசரியில் தேடியபோது...

இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் முதல் நாளே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.


முட்டாள் தினமல்ல இது..
நமது வாழ்க்கைப் பாதையில் இதுவும்
கடந்து போகும் ஒரு நாளே...

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

மனோ சாமிநாதன் சொன்னது…

இப்போது நினைத்துப்பார்த்தால் அபத்தமாகத்தெரியும் இளமை காலத்து குறும்புகள் அந்த வயதில் சுகமாய்த்தானே இருந்தன! அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!///முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!பகிர்வு நன்று.அறியாத பல விடயங்கள்.............!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறு வயது நினைவுகளை... அந்த குறும்புகளை நினைக்கவே சந்தோசமாக உள்ளது...