மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

தவறு சரியாகுமா?


ராமசாமி செட்டியாருக்கு
எப்பவும் வரும் கோவம்
இப்பவும் வந்தது...

மூஞ்சியை இறுக்கமாக்கி...
முகத்தை சிவப்பாக்கி...
மூக்கை விடைத்து...
பல்லைக் கடித்தார்...!

'இங்க இருந்தது எங்க போச்சு...
சனியனே எங்க வச்சே..?'
கடைப் பையனை
சனியனாக்கினார்..!

அங்கும்... இங்கும் தேடினார்...
கிட்டாத கோவத்தில்
எட்டி அடிக்க முனைந்தார்
எட்டாத இடத்தில் அவன்..!

பலவாறு தேடி...
பல மொழிகள் பேசி...
அலுத்து அமர்ந்த போது
அழுதபடி அவன்..!

'எருமை ஏ... அழுவுறே...
தொலஞ்சு மட்டும் போகட்டும்
தொலச்சுப்புடுறேன் உன்னை..!'

திட்டிக் கொண்டே
நேற்றைய தினசரியை விரித்தார்...
உள்ளே சிரித்தது அது..!


யாரை திட்டமுடியும்...
வைத்தது அவராச்சே..!

தன் தவறை மறைக்க
'இனிமே கரெக்டா வைக்கணும்
வச்ச இடத்தை மறக்கப்படாது'
பையனிடம் கனிவாய் பேசினார்..!

-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

தவறுகளை சரியாக்கும் தந்திரக்கார உலகில் மாட்டிக் கொண்டு முழிப்பது எளியவர்களே! நிதர்சனத்தைச் சொல்லுகின்றன வரிகள்.

முத்தரசு சொன்னது…

கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஓட்டபடாது......கோபத்தை அழகாக சொன்னீர்கள்

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

மனித வாழ்வின் ஒரு பக்கத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் உங்கள் கவிதையில்.
வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

தன்னோட தவறுகளையும் பிறர் மேல் ஏற்றிச் சொல்லும் பொல்லாத உலகமிது.. அருமையான கவிதைக்களம் :-)

சசிகலா சொன்னது…

கோபத்தை பகிரவும் கடைப் பையனைப் போல , வீட்டில் மனைவியை போல இப்படி ஆங்காங்கே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் அருமையா சொன்னீங்க .

பெயரில்லா சொன்னது…

சும்மா.. நச்னு இருக்கு .......

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள் ! பாராட்டுக்கள் !

ராஜி சொன்னது…

பெரியவங்க செஞ்சா அது தப்பே இல்லை. அது முதலாளியானாலும், பெற்றோர்களானாலும். யதார்த்தத்தை தங்கி வந்த கவிதை அருமை.

vanathy சொன்னது…

மறதிக்கு ஒரு கவிதையா! சூப்பர்.

r.v.saravanan சொன்னது…

பெரியவர்கள் தன் தவறை ஒப்பு கொள்ளும் மனப்பான்மை இல்லாததால் அந்த தவறை மற்றவர் மேல் திணிக்கும் செயலை கவிதையில் சுட்டிய விதம் நன்று குமார்

Asiya Omar சொன்னது…

இதுமாதிரி சமாளிக்கிற ஆட்கள் நம்மிலேயே சிலர் இருக்கிறோமே!சிறுகதை போல கவிதை நச்சென்று.

சத்ரியன் சொன்னது…

சும்மாவா சொன்னாங்க, ஆத்திரம் கண்ணை மறைக்கும்-னு?

நல்ல கவிதை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

தன் தவறை மறைக்க அடுத்தவர் மேல் பாயும் உலகம்... கவிதை நன்றாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - தான் செய்யும் தவறினைத் தெரிந்தோ தெரியாமலோ - அடுத்தவர் மேல் பழி போடுவது இயல்பாகப் பலர் செய்கின்றனர். என்ன செய்வது........ மாறுவோம் . நல்ல சிந்தனியில் விளைந்த நற்கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சசிகலா சொன்னது…

தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .